பொன்னாள்!
அது ஒரு மாலை நேரம், நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்கும்படியாக வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நின்றுகொண்டிருந்தேன். சற்று தொலைவில், செந்தியம்பலத்தின் 'வண்டிப்பாதை' என்று சொல்லப்படும், பிரதான வழியில் சில நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் சில நண்பர்கள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு, நானும் அவர்கள் நின்றுகொண்டிருந்த இடம் நோக்கி சென்றேன். அங்கு நின்றுகொண்டிருந்த நண்பர்களில் சிலர் கல்லூரி பயின்றுகொண்டிருந்தனர், சிலர் படிப்பினை நிறைவுசெய்து வேலை தேடிக்கொண்டிருந்தனர், சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர்; அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த, மிஷனரி ஸ்தாபனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த வாலிபன் ஒருவன், தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த சக வாலிபர்களை நோக்கி, 'நான் சில நாட்களில் மிஷனரியாக என்னை அர்ப்பணித்து ஊழியம் செய்யப்போகிறேன்' என்று சொல்ல, சக வாலிபர்களின் காதில் விழுந்த அந்த வாலிபனின் வார்த்தைகள், அவர்களது உள்ளத்தையும் உடலையும் அர்ப்பணிப்பை நோக்கி உந்தித் தள்ளியது; அந்த உணர்வினை உள்ளத்தில் உணர்ந்த வாலிபர்களுள் நானும் ஒருவன். எனது உள்ளத்திலும், ஊழியம் என்ற ஆசை மெல்ல மெல்ல அந்த வார்த்தைகளால் துளிர்விடத் தொடங்கியபோதிலும், அதற்கு உரமிட்டு வளர்க்க அந்நாட்களில் நான் பெலனற்றிருந்ததால், அது நீரோடையாக ஓடாமல் உள்ளத்திலேயே உறைந்துபோனது.
"Huxtable Cristian Library"
நாட்கள் கடந்தன, அந்நாட்களில், ஜெபக்குழு வாலிபர்களால் செந்தியம்பலம் கிராமத்தில் நூலகம் ஒன்றைத் தொடங்கலாம் என்றும், அது ஜெபக்குழு நண்பர்கள் கூடி அவ்வப்போது ஜெபிக்கவும் அத்துடன் பிற ஜெபக்குழுவிற்கு வருகைதராத வாலிபர்களைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என்றும் ஜெபத்துடன் திட்டமிட்டு, அப்போது செந்தியம்பலம் கிராமத்தில் ஜெபக்குழுவினை வழிநடத்திவந்த கிருபையின் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. பொற்செல்வன் ஆசீர் அவர்களைச் சந்தித்தபோது, அத்திட்டத்திற்கு அவர் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்பு அளித்ததோடு, பல்வேறு ஆலோசனைகளையும் கூறி எங்களை உற்சாகப்படுத்தினார். அவரது வழிகாட்டுதலின்படி, பரி. மாற்குவின் ஆலயத் தெருவில் அதாவது, செய்தியம்பலம் கிராம மக்களால் பழைய கோவில் தெரு என்று அழைக்கப்படும் தெருவிலுள்ள, ஜெபக்குழு வாலிபர்களுள் ஒருவரான திரு. செல்வின்துரை அவர்களது வீட்டில் நூலகம் ஒன்று தொடங்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்றுவந்தது. செந்தியம்பலம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் மத்தியில் ஊழியம் செய்தவரும் மற்றும் சாயர்புரம் தேவாலயத்தைக் கட்டியெழுப்பினவருமான Rev. Huxtable அவர்களின் நினைவாக அந்த நூலகத்திற்கு "Huxtable Cristian Library" என்று பெயர் சூட்டப்பட்டது. நண்பர்கள் ஜெப ஐக்கிய வாலிபர்களின் வீடுகளிலிருந்தும் மற்றும் ஊழியர்கள் பலருடைய உதவியுடனும், ஜெபக்குழு வாலிபர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலனடையும்படியாகவும் மற்றும் பயனடையும்படியாகவும் ஆவிக்குரிய அநேக புத்தகங்கள் அந்த நூலகத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்தன; ஆத்துடன், பிற வாலிபர்களையும் நூலகத்திற்குள் கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் தினசரி நாளிதழ்களும், வேலை வாய்ப்பிற்கு அடுத்த பத்திரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஜெபக்குழுவிற்கு வராத பிற வாலிபர்கள் தினசரி பத்திரிக்கைகளை வாசிக்க நூலகத்திற்குள் வருகைதரும்போது, அவர்களை சந்தித்து ஜெபக்குழுவிற்கு அழைப்பு விடுக்க அது நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது. வழக்கமாக செந்தியம்பலத்தின் தேரிப்பகுதியில் ஜெபக்குழு தவறாமல் ஒழுங்காக நடைபெற்றுவந்தபோதிலும், சில நாட்களில் இரவு நேரங்களில், மழை காலங்களில் கூடி ஜெபிக்கவும், பகல் நேரங்களில் விருப்பமுடைய வாலிபர்கள் இங்கு வந்து நூலகத்தின் உள் அறையில் தனித்து ஜெபம் செய்யவும் இந்நூலகம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது. செய்தியம்பலம் கிராமத்தில் நுகர்வோர் ஒவ்வொருவரையும் வரவேற்கும் இடத்தில் தனது வாசலைத் திறந்திருந்தது இந்நூலகம்.
முதல் நாள் ஜெப வேளையின்போது, வேதத்தை விரித்துவைத்தவனாக, எனது அனுதின வேத பாகத்தை வாசித்து நிறைவு செய்தவனாக ஜெபத்தைத் தொடங்கினேன். துதிகளுடன் ஜெபத்தை தொடங்கியபோதிலும், ஆராதனையுடன் ஜெபத்தின் ஆழத்திற்குள் நான் கடந்துசென்றபோதிலும், 'எனது வாழ்க்கையின் நோக்கம் என்ன?' என்ற கேள்விக்கு விடை கேட்பதிலேயே துடித்துக்கொண்டிருந்த எனது இதயத்துடிப்பு, உதடுகளிலும் ஒலியாக உருவெடுத்தது. ஒரு நாள் ஜெபத்திலேயே உள்ளத்தின் கேள்விக்கு விடை கிடைத்துவிடும் என்ற எண்ணத்தோடு உள்ளறையில் ஜெபித்துக்கொண்டிருந்தபோதிலும், ஜெபத்திலிருந்து விடைபெறும் நேரம் வந்தபோதிலும் உள்ளத்திற்கான விடை கிடைக்கவில்லை; அதிக நேரம் நூலகத்தின் உள்ளறையினைப் பூட்டிக்கொண்டிருக்க முடியாதே என்ற எண்ணத்தில், அன்றைய நாளின் ஜெபத்தினை நிறைவுசெய்தவனாக அறையை விட்டு வெளியேறினேன்; என்றபோதிலும், 'வாழ்ககைக்கான விடையறியும்' கேள்வி என்னை விட்டு விலகவில்லை. என்னசெய்வதென்று அறியாத நான், ஜெபத்தில் நான் அதிகம் பேசிவிட்டு அவரை பேசவிடாமல் விட்டுவிட்டேனோ அல்லது அவர் பேசுவதைக்கூட கேட்காமல் நான் பேசிக்கொண்டேயிருந்துவிட்டேனோ என்று நினைத்தவனாக, மறுநாளும் காலை உணவை மாத்திரம் தவிர்த்துவிட்டு வழக்கம்போல நூலகத்தின் உள்ளறையில் நுழைந்து ஜெபிக்கத் தொடங்கினேன்; ஜெபவேளை இனிமையாக அமைந்தது; என்றாலும், இதயம் விரும்பின இனிப்பு கிடைக்கவில்லை. மூன்றாம் நாளிலும் இதே நிலை; என்றபோதிலும், ஜெபத்தை விட்டுவிடும் எண்ணம் என்னிடத்தில் சற்றும் விலகவில்லை.
நான்காம் நாள், ஐந்தாம் நாள், ஆறாம் நாள், ஏழாம் நாள், எட்டாம் நாள் முடிந்து ஒன்பதாம் நாளிலும் எனது ஜெபம் தொடர்ந்தது. ஒன்பதாம் நாளின் ஜெப வேளையின் இடையில், 'விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்' (எசேக்கியேல் 3:5) என்ற வசனத்தின் மூலமாக தேவன் என்னோடு பேசத் தொடங்கினார். இதுவே என் இதயத்திற்கு இறைவன் கொடுக்கும் கேள்விக்கான விடை என்பதை புரிந்துகொண்ட நான், அந்த வசனத்தையே அழைப்பாக எனது வாழ்க்கையில் அறைந்துகொண்டேன். என்றபோதிலும், இந்த வசனத்தை எப்படி, எங்கு நான் தொடங்குவது? எவ்வாறு இவ்வசனத்தின் அடிப்படையில் என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு செயலாற்றுவது? என்பதை அறிய ஆர்வம் கொண்டவனாக, வசனம் காட்டின தரிசனத்தின் வழியிலேயே முன்னேறத் தொடங்கினேன். நாட்கள் செல்ல செல்ல இந்த வசனத்தின் அடிப்படையிலான எனது அழைப்பிற்கு உதவியாக கர்த்தரால் அருளப்பட்டிருக்கும் தாலந்துகளும் என்னிடத்தில் வெளிப்படுவதை அறிந்துகொண்டேன். பிரதானமானதாகவும், முதலாவதாகவும் ஆலோசனை அளிக்கும் ஊழியமும் (Counselling), இரண்டாவதாக கர்த்தருடைய எழுதுகோலாகவும் (Writing), மூன்றாவதாக அவருடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கவும் (Preaching) நான் அழைக்கப்பட்டிருப்பது எனக்கு தெளிவாயிற்று; எனது வாழ்க்கையின் நோக்கம் புரிந்த அந்நாள் எனக்கு ஆனந்தமான பொன்னாள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக