தினம் ஒரு மணம்
(P.J. கிருபாகரன்)
இலக்கை நோக்கிய பயணம்
இராஜஸ்தான் மாநிலத்தின் நீம்காதானாவிலிருந்து தொடங்கிய இரயில் பயணம், பீஹார் மாநிலத்தின் டெஹ்ரி ஆன் சோன் இரயில் நிலையத்தில் முடிந்தது. முதல் முறையாக பீஹாரில் காலடி எடுத்துவைத்த அனுபவம் உடலுக்கும் உணர்வுக்கும் சற்று புதிதாகவே இருந்தது. காலநிலையில் மாற்றம் ஏதும் இல்லை; என்றாலும், எனது காலடிகள் கனவின் எல்லைக்குள் நுழையும் தருணம் அது. இரயில் நிலையத்தின் சத்தங்கள் அனைத்தும் அடங்கியபோதிலும், தொடர்ந்து படபடத்துக்கொண்டிருந்த என் இதயம் எதையோ தேடுவதைப் போன்றே இயங்கிக்கொண்டிருந்தது. இரவு நேரம், டெஹ்ரி ஆன் சோன் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறி, ஜெம்ஸ் பணித்தளம் அமைந்திருக்கும் சிக்காரியா என்ற சிறியதோர் கிராமத்திற்குப் பயணப்பட, இரயில் நிலையத்திற்கு வெளியிலிருக்கும் மைதானத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்தோம். அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தவாறு நின்றுகொண்டிருந்த எங்களை நோக்கி, 'கஹாங் ஜானா ஹை?' (எங்கே போகவேண்டும்) என்று கூப்பிட்ட ஒரு ஆட்டோ ஓட்டுநரின் குரல் எங்கள் செவிகளில் விழ, சட்டென 'சானிட்டோரியம்' என்று நாங்கள் பதிலளித்ததும், எங்களை ஏற்றிக்கொண்டு பயணமானார் அந்த ஆட்டோ ஓட்டுநர்.
சிக்காரியா என்ற கிராமத்தில் ஜெம்ஸ் தலைமையகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அடுத்ததாக அரசு சயரோக மருத்துவமனை (TB) அமைந்திருந்த பகுதி 'ஜெக்ஜீவன்ராம் சானிட்டோரியம்' என்று அழைக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் அறிந்திருந்த மற்றும் அப்பகுதிவாழ் மக்களின் நிலக்குறியீடாகவும் விளங்கிவந்த இந்த 'சானிட்டோரியத்தின்' அருகிலேயே ஜெம்ஸ் தலைமை அலுவலகமும் அமைந்திருந்ததினால், ஆரம்ப நாட்களில் 'சானிட்டோரியத்தை' மையமாகக் கொண்டே ஜெம்ஸ் அலுவலகம் செல்ல வழிசொல்லப்பட்டது; ஆனால், இந்நாட்களிலோ, 'சானிட்டோரியம்' என்ற அடையாளத்திற்கு மேலாக வாழ்க்கைக்கே வழிகாட்டும் அறிவிப்புப் பலகையாகி நிற்பது ஆனந்தமே.
எங்கு போகின்றோம் என்று தெரிந்தும், எங்கோ போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதைப் போலத் தோன்றும் பாதை. ஆங்காங்கே ஆள் அரவமற்ற தெருக்கள் மற்றும் முடுக்குச் சந்துகள். நாங்கள் சென்றுகொண்டிருந்த பாதையில் 'தார் சாலை எங்கே?' என்று தேடும் நிலை. தண்ணீரில் மிதக்கும் படகு போல, மண்ணுக்குள் தனது சக்கரங்களைப் புதைத்துப் புதைத்துப் பயணித்துக்கொண்டிருந்தது ஆட்டோ. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன்னும் பின்னும் வாகனங்கள் எதுவுமே தென்படாத தனிமைப் பயணம் அது. வெளியியே பார்க்க விழிகளை விரித்தாலும், வலுக்கட்டாயமாக இமைகளைக் கீழே இழுத்து இறக்கும் அளவிற்கு புழுதியுடனானதோர் பரஸ்பர போராட்டம். பயணத்தின் ஊடே, புதிய ஊர் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக என் எண்ணத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது ஆட்டோவிலிருந்துகொண்டே குனிந்தவாறு தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்த்துக்கொண்டேவந்தபோதிலும், கண்களில் ஒளியிருந்தும் வெளியின் காட்சிகளைக் காண இயலாத நிலை; மின்சாரமின்றி வழியிலிருந்த அத்தனை கிராமங்களும் இருட்டியே மூழ்கிக்கிடந்தது எனக்கு வலியைத் தந்தது.
ஆட்டோ பயணம் நிறைவுற்று, சிக்காரியா கிராமத்திலுள்ள ஜெம்ஸ் வளாகத்தை வந்தடைந்ததும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது இல்லத்தை ஒட்டியமைந்த ஜெம்ஸ் விருந்தினர் வீட்டில் உள்ள ஓர் அறையில் தங்கவைக்கப்பட்டேன். இங்கிருக்கும் அனைவரும் ஹிந்தி மொழியைத்தான் பேசுவார்களோ என்ற பிரம்மையுடன் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, தமிழ் ஊழியர்களுடனான சந்திப்பு சற்று சந்தோஷத்தைக் கொடுத்தது. விருந்தினர் வீட்டினை ஒட்டியிருக்கும் ஜெம்ஸ் ஆலயத்தில், ஒவ்வொரு நாள் காலையிலும் 5 மணிக்கு நடைபெற்றுவந்த காலை தியானக் கூட்டங்களில் தவறாது பங்குபெறத் தொடங்கினேன். காலை தியான வேளையின்போது சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் அளித்த செய்திகள், ஆத்துமாவின் அஸ்திபாரத்தை அதிக வலுவாக்கியதுடன், ஜெம்ஸ்-ன் அஸ்திபாரத்தையும், தரிசனத்தையும், ஊழிய முறைகளையும், ஆத்தும பாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குக் காட்டிக்கொடுத்தன. நீண்டதோர் பயணத்தில், ஜெம்ஸ் ஊழியத்துடன் இணைந்து ஓட என்னை ஆயத்தப்படுத்தும் அடித்தளமாகவும், பயிற்சிக்களமாகவும் அமைந்தன அத்தியானக் கூட்டங்கள். அத்துடன், காலை நேரத்தின்போது, அத்தியானக் கூட்டத்திற்கு வருகைதரும் ஊழியர்களைச் சந்தித்து, அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவும், அவர்களது ஊழிய அனுபவங்களை கேட்டு அறிந்துகொள்ளவும் நல்லதோர் வாய்ப்பும் கிட்டியது.
மிஷனரியாகவேண்டும் என்ற வாஞ்சை ஒருபுறம் என் இதயத்தை விட்டு விலகாதிருக்க, ஜெம்ஸ் விருந்தினர் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த நான், கிடைக்கும் நேரத்தை வீணாக்க மனமின்றி, வேதவாசிப்பு மற்றும் ஜெபத்தினைத் தொடர்ந்து, தனிமையில் கிடைக்கும் அமைதியான நேரங்களில் கவிதைகளையும் மற்றும் கட்டுரைகளையும் எழுதத்தொடங்கினேன்.
நாட்களில சில கடந்தன, சகோதரரை நேரடியாகச் சந்தித்து பேசவேண்டும் என்ற விருப்பம் என்னில் அதிகரித்துக்கொண்டிருந்தபோது, தீடீரென்று ஒரு நாளின் மாலை நேரத்தில், விருந்தினர் வீட்டில் என்னைச் சந்தித்த சகோதரர் ஒருவர், 'நாளை காலையில் அண்ணணை நீங்கள் சந்திக்கவேண்டுமாம்' என்று கூற, அழைப்பினைக் கேட்டு ஆனந்தமடைந்தவனாக, அடுத்த நாள் காலைக்காகக் காத்திருந்தேன். மறுநாள் காலையும் பிறந்தது, சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் அமர்ந்திருக்கும் அலுவலக அறையின் முகப்பில் நுழைந்து, 'அண்ணன் என்னை வரச்சொல்லியிருந்தார்கள்' என்று சொல்ல, சற்று நேரத்தில் அவரைச் சந்திக்கும்படியாக அனுமதிக்கப்பட்டேன். சிரித்த முகத்துடன் வரவேற்று, அருகிலிருந்த நாற்காலியில் என்னை அமரச் செய்து, என்னைக் குறித்து அறிந்துகொள்ள சில கேள்விகளையும் கேட்டு என்னோடு பேசிக்கொண்டிருந்தார் சகோதரர். சந்திப்பின் இறுதியில், 'முன்னோடி மிஷனரியாக நீங்கள் அழைப்பினைப் பெற்றிருக்கிறீர்கள்' என்று சகோதரர் எழுதிய முடிவுரையுடன் அவரது அறையிலிருந்து விடைபெற்று விருந்தினர் வீட்டை அடைந்தேன் நான்.
மறுநாள் காலை, ஜெம்ஸ் வாலிபர் ஊழியத்தின் 'GEMS STORM' பொறுப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த சகோ. ஐசக் ஜெயக்குமார் விருந்தினர் வீட்டில் என்னைச் சந்திக்கும்படியாக வந்திருந்தார். ஜெம்ஸ் வாலிபர் ஊழியத்தைக் குறித்தும், வாலிபர் ஊழியத்தில் என்னை பயன்படுத்துவது குறித்தும் அவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தபோது, நான் அவரிடத்தில், மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்யவேண்டும் என்ற விருப்பம் என்னிடத்திலிருப்பது உண்மையே, வாலிபர் ஊழியத்திற்காகவே என் வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கின்றேன், என்றபோதிலும், அதற்காக சில தளங்களின் வாயிலாகவே நான் செயல்பட விரும்புகின்றேன் என்று கூறியதுடன், அத்தளங்களில் ஒன்றான 'ஜெம்ஸ் ITI'-ல் எனது ஊழியத்தைத் தொடரவும் தொடங்கவும் விரும்புகின்றேன் என்ற எனது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, அவர் மூலமாக எனது விருப்பத்தை அறிந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கருவந்தியாவில் அமைந்திருந்த ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 'GEMS ITI' ஊழியத்தைத் தொடர எனக்கு ஆலோசனை அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக