திங்கள், 4 அக்டோபர், 2021

அறிமுகம்

 www.sinegithan.in


P.J.KIRUBAGARAN


அறிமுகம்

FAMILY TREE


பரிசுத்தத்திற்கென்றும், அவர் வீற்றிருக்கும் பரலோகத்திற்கென்றும் நம்மை அழைத்து, முன்குறித்து, தெரிந்தெடுத்திருக்கின்ற ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு எனது அன்பின் வாழ்த்துகள். 

www.sinegithan.in என்ற இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செந்தியம்பலம் என்னும் ஓர் சிறிய கிராமத்தில், திரு. பால்மாசில்லாமணி மற்றும் திருமதி புஷ்பம் பூமணி ஜெபமணி ஆகியோரது ஆறாவது மகனாகப் பிறந்த என்னை தேவன் தனது பணிக்கென்று பயன்படுத்தும் பாத்திரமாக மாற்றிக்கொண்டது அற்புதமே. எனது தந்தை சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், தாயார் செந்தியம்பலம் கிராமத்தில் உள்ள தென்னிந்தியத் திருச்சபையின் துவக்கப்பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்துவந்தனர். 


Father Mr. J. Paul Masilamani, Mother Mrs. J. Pushpam Poomani Jebamani


Brothers and Sisters

From Left to right (Sitting) 
Mrs. Jancy, Mother Mrs. Pushpam Poomani Jebamani, Mr. Samuel Johnson, Mrs. Janet Vasanthy, 

From Left to right (Standing) 
Mr. Arul Selvan, Mr. Jason Gabriel Masilamani, Mr. Jeyasundar Kirubagaran


சிறு வயது முதலே கிறிஸ்தவ பண்பாடுகளில் பெற்றோரால் பக்திவைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டேன். காலையில் எழுந்ததும் வெதம் வாசிக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும், முதல் மணி அடிக்கும்போதே ஆலய ஆராதனைக்குச் சென்றுவிடவேண்டும், அங்கு ஆண்டவர் நமக்காகக் காத்திருப்பார் என்று எனது தாயார் என்னுள் சிறுவயதின்போது விதைத்த விதை இன்னும் நீங்கவில்லை. செந்தியம்பலம் பரி. மாற்குவின் ஆலயமே நான் பச்சிளங் குழந்தையாயிருந்தபோது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்த முதல் ஆலயம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வரை, ஒவ்வொரு ஞாயிறு ஆராதனையின்போதும், 'திருவசனம்' (மனப்பாட வசனம்) சொன்ன இடமும் அதுவே. ஆவிக்குரிய வாழ்க்கையினைப் பற்றி அவ்வளவாக நான் அறிந்திராத சிறு வயதில், ஆண்டவரைப் பற்றியும், அவரைக் குறித்த பயத்தைப் பற்றியும், ஆணித்தரமாக எனது உள்ளத்தில் அடித்தளமிட்டதும் அந்த ஆலயமே. ஞாயிறு பள்ளி வகுப்புகள், வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் விடுமுளை வேதாகமப் பள்ளியில் கலந்துகொண்ட நினைவுகள் இன்றும் எனது நினைவுகளை விட்டு நீங்கவில்லை. ஆராதனையின்  போது அக்கம் பக்கத்தில் பேசினதினால், வீட்டிற்கு வந்ததும் வசமாக பெற்றோரிடம் வாங்கிக்கொண்ட நிகழ்வினையும் நான் அத்தனை எளிதாக மறந்துவிடமுடியாது. பரி. மாற்குவின் ஆலயத்தில் நான் பாடல் பாடிய நாட்கள், பரிசு பெற்ற தினங்கள், பிரசங்கித்த நாட்கள் மற்றும் அதே ஆலயத்தில் உபதேசியாராகப் பணிபுரிந்த காலங்கள் என அனைத்தும் எனது வாழ்க்கையின் ஓர் மறக்க இயலாத பசுமையான நினைவே. 



பரி. மாற்குவின் ஆலயம், செந்தியம்பலம்


செந்தியம்பலத்திலுள்ள, தென்னிந்திய திருச்சபையின் தொடக்கப்பள்ளியிலேயே எனது பள்ளி வாழ்க்கை தொடங்கியது. தொடர்ந்து, 6 முதல் 12 வரையிலான வகுப்புகளை சாயர்புரத்திலுள்ள போப் நினைவு மேநிலைப் பள்ளியில் நிறைவு செய்தேன். 1991-ம் ஆண்டு, காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக்-ல் இயந்திரவியல் துறையில் சேர்ந்து பயிலத் தொடங்கினேன். அந்த நாட்களில், நான் தங்கியிருந்த கோட்டையூரில் சகோதரர் அலெக்ஸ் நடத்திவந்த ஜெபக்குழுவில் அவ்வப்போது கலந்துகொண்டேன். 1992-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள கிருபையின் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோ. பொற்செல்வன் ஆசீர் அவர்கள் மூலமாக எனது கிராமத்தில் நடைபெற்ற ஜெபக்குழுவில் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். 

சகோ. பொற்செல்வன் ஆசீர் 




தொடக்க கால ஜெபக்குழு நண்பர்கள்


இடமிருந்து வலம், சகோ. ஜெபராஜன் (ECI), சகோ. பாலு (Hosur), சகோ. ஜெனிபர் (Jharkhand), சகோ. ரவி (CSI), சகோ. செல்வின்துரை (IMS), சகோ. முத்துசாமி, சகோ. செல்வன் (Red Cross Ministries), சகோ. ஜான்சன், சகோ. அருள்தாஸ், சகோ. காந்தி, சகோ. மகிபா, சகோ. பாபு ராஜரீகன் (GEMS)




ஜெபக்குழு நடைபெற்ற தேரிக்காடு

1994-ம் ஆண்டு பட்டயப் படிப்பினை நிறைவு செய்து, பின்னர் சென்னையில் உள்ள சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவந்தேன். ஞானஸ்நானம் பெற்று ஆங்காங்கே ஊழியர்கள் நடத்திய பல்வேறு கூட்டங்களிலும், முகாம்களிலும் நான் பங்கேற்றபோது, எனக்குள் இருந்த ஆலோசனை சொல்வது, எழுதுவது, பிரசங்கிப்பது ஆகிய மூன்று தாலந்துகளைத் தீர்க்கமாக அறிந்துகொண்டேன். தொடர்ந்து பல ஆலயங்களிலும், கூடுகைகளிலும், ஜெபக்குழுக்களிலும் பிரசங்கித்து வந்தேன். சந்தித்த அநேக வாலிபர்களை மீட்டெடுக்கவும், அவர்கள் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கவும் ஆலோசனை வழங்கி வந்தேன்.  

1996-ம் ஆண்டு, சென்னையிலிலிருந்து அவ்வப்போது நான் எனது சொந்த ஊர் வந்து சென்றபோதெல்லாம், நான் இரட்சிக்கப்பட்ட இடத்திற்குச் சென்றுவருவதும், அங்கு நடைபெற்ற ஜெபக்குழுவினை நினைவுகூருவதும் வழக்கமாயிருந்தது. என்றபோதிலும், அப்போது என்னோடு ஜெபக்குழுவில் இருந்த அனைவரும் ஊழியத்தின் நிமித்தமாகவும், வேலையின் நிமித்தமாகவும், பல்வேறு பணிகளின் மற்றும் சூழ்நிலைகளின் நிமித்தமாகவும் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டபடியினால், ஜெபக்குழு நடைபெறுவது நின்றுபோயிருந்தது. அந்நாட்களில் மீண்டும் அவ்விடத்தில் வாலிபர்களை அழைத்து மீ;ண்டும் ஜெபக்குழுவை தொடங்க கர்த்தர் கிருபை செய்தார்; இன்றும் அது செந்தியம்பலத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது; தேவனுக்கே மகிமை உண்டாவதாக.


மீண்டும் தொடங்கப்பட்ட ஜெபக்குழு நண்பர்களுடன் நான்


2002-ம் ஆண்டு வரை ராஜஸ்தானிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றேன்; என்றபோதிலும், அங்கிருந்தும் கடிதங்கள் வாயிலாக ஜெபக்குழு நண்பர்களை உற்சாகப்படுத்திவந்தேன். பின்னர், 1996-ம் ஆண்டு முழு நேர ஊழியத்திற்காக கர்த்தருக்கென்று என்னை அர்ப்பணித்ததை 2002-ம் ஆண்டு நினைவுகூர்ந்து, 2002-ம் ஆண்டு முதல் கிறிஸ்துவின் பணியினைச் செய்துவருகின்றேன்.  2004 - ம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த சகோதரி பிரிஸ்கில்லாவை வாழ்க்கைத்துணையாக தேவன் எனது வாழ்க்கையோடு இணைத்தார். அத்துடன், ஜான் சாமுவேல் மற்றும் ஜெரின் கிரேஷியா என்ற இரு குழந்தைகளையும் கூடவே கொடுத்து ஆசீர்வதித்திருக்கின்றார். 

இந்நாட்களில், www.sinegithan.in என்ற இணைய தளம் வாயிலாக வேத தியானங்கள், செய்திகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி-பதில், அனுபவம் போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுத கர்த்தர் கிருபை செய்துவருகின்றார்.

(ஜெபக்குழுவினைப் பற்றிய விரிவான செய்திகளை எனது சுயசரிதையில் 'தினம் ஒரு மணம்' என்ற தலைப்பில் வரும் நாட்களில் எழுதுகின்றேன்.) 

கிருபாகரன்


 



மனைவி பிரிஸ்கில்லா, மகன் ஜான் சாமுவேல், மகள் ஜெரின் கிரேஷியா


இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் எந்தவொரு செய்தியும், கட்டுரையும் காப்பி ரைட் (COPY RIGHT) உள்ளது அல்ல, கருத்துக்களை இடையில் நுழைப்பதையும், நீக்குவதையும் தவிர்த்து, அப்படியே யார் வேண்டுமென்றாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், தங்களது பத்திரிக்கையில் பிரசுரித்துக்கொள்ளவும் முழு உரிமை உண்டு; ஏனெனில், தேவiனே என்னைக் கொண்டு எழுதுகின்றார் என்பதில் நான் இன்னும்  திண்ணமாக இருக்கின்றேன்.; நான் அவரால் பயன்படுத்தப்படும் ஓர் எழுதுகோல் அவ்வளவே. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக