கண் பார்வையில் கருவந்தியா
டிசம்பர் 5, 2002, மாலை சுமார் 5:30 மணி, ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியா பணித்தளத்தின் விருந்தினர் இல்லத்திலிருந்து, சொற்ப அளவில் இராஜஸ்தானிலிருந்து கொண்டுவந்திருந்த சில ஆடைகள் மட்டுமே அடங்கியே சூட்கேஸ் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு, சிக்காரியாவிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலிருந்த கருவந்தியா பணித்தளம் நோக்கித் தொடங்கியது என் பயணம். சிக்காரியாவை விட்டு வெளியேறி, சுமார் ஏழு கி.மீ தொலைவிலிருக்கும் டெஹ்ரி ஆன் சோன் நகரத்தை வெளிப்புறத்தில் கடந்து, டெல்லி – கல்கத்தா பிரதான சாலையில் பயணித்து, ரோஹ்தாஸ் மாவட்டத்தின் தலைநகரான சசராம் என்னும் நகருக்கு அருகில், சாலையிலிருந்து வலப்புறமாக விலகி மண் பாதையில் சற்று தூரம் பயணித்து, எதிரிலிருந்து ரயில்வே கேட்டினைக் கடந்ததும் எங்களை வரவேற்றது ஜெம்ஸ்-ன் கருவந்தியா பணித்தளம்.
கருவந்தியாவின் காட்சி
கண்ணுக்கெட்டும் தூரம் வரை கல்லுடைக்கும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருந்தன; இயந்திரங்களிலிருந்து உண்டாகும் மாசுகளினால், மேகமூட்டத்திற்குள் வந்துவிட்டதைப் போன்ற உணர்வு உண்டானது எனக்கு; எனினும், அவைகளின் ஆபத்தைக் குறித்த அறிவு அப்போது எனக்கு இல்லை. ஒருபுறம், இயந்திரங்களில் உடைப்பதற்கான கற்களை மலையிலிருந்து ஏற்றிய வண்ணம் வரிசையாக வந்துகொண்டிருந்தன டிராக்டர்கள்; மற்றொருபுறம், இயந்திரங்களில் உடைக்கப்பட்ட கற்களை, கட்டடப் பணிக்காக எடுத்துச் செல்லும் டிராக்டர்கள் சென்றுகொண்டிருந்தன. டிராக்டர்களில் பயணிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் மேனியின் நிறத்தைத் துறந்து, மேக்கப் போட்டுக்கொண்டவர்கள் போலவே காட்சியளித்தனர்.
வாகனத்தை விட்டு இறங்கியதும், குடியிருப்பு வளாகத்தில் இருந்த நான்கு வீடுகளில், இடப்புற முனையில் காலியாக இருந்த ஒரு வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டேன் நான். வலமிருந்து இடமாக முதல் வீட்டில் சகோதரி லீலாவும், அடுத்த வீட்டில் சகோதரர் பெல்வின் குடும்பமும், அடுத்த வீட்டில் சகோதரர் எட்வட் ராஜன் குடும்பமும் தங்கியிருக்க, இடப்புற முனையில் இறுதியாக இருந்த வீட்டில் தங்கியிருந்தேன் நான். குடியிருப்பு வளாகத்தில் நுழைந்ததும், என்னை வரவேற்ற உடனிருந்த ஊழியர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, மாலை மயங்கினதும் வீட்டினுள் அடைக்கலமானேன். அன்று மாலை, கருவந்தியா பணித்தளத்தில் தொழிற்பயிற்சி மையத்தின் வளாகத்தில் தங்கியிருந்த சகோதரி சோனி மசி மற்றும் சரவணன் தம்பதியர் என்னை அன்புடன் தங்கள் இல்லத்திற்கு வரவேற்று, தேனீர் அளித்து விசாரித்தது, இங்கு இருப்பவர்கள் என் உறவினர்களே என்ற உணர்வைக் கொடுத்தது. பணித்தளத்தைச் சற்று சுற்றிப் பார்த்துவிட்டு, இரவிலே படுக்கைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த எனக்கு, ஓர் அதிர்ச்சியான செய்தி உடன் ஊழியர்களிடமிருந்து கிடைத்தது; ஆம், அப்பணித்தளத்தில் மின்சாரம் எப்போதாவதுதான் வந்துசெல்லும் என்ற செய்திதான் அது. இரவை இருளிலேயே கழிக்க என்னை நான் பழக்கப்படுத்திக்கொண்ட நாட்கள் அவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக