வீட்டுச் சமையலும், மாட்டா (மோர்) தாத்தாவும்
வீட்டுச் சமையல்
எங்கு சென்றாலும், கைகளால் சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த நான், கருவந்தியா பணித்தளத்திற்குச் சென்றபோதும் உடனே வீட்டுச் சமையலுக்கான ஆயத்த வேலைகளைச் செய்தாகவேண்டும் என்ற எண்ணத்துடன், எரிவாயு இணைப்பினைப் பெற்றேன். சமையலுக்குத் தேவையான ஒரு குக்கர் மற்றும் வாணலி இவைகளை இராஜஸ்தானிலிருந்து நான் கொண்டுவந்திருந்ததால், சமையலறைக்கான பெரிய தேவைகள் என்று எதுவுமில்லை. மாலை நேரத்தில் அருகேயுள்ள அமர்தலாப்-ல் இருக்கும் மார்க்கெட்டிற்குச் சென்று தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வருவது எனது அனுதின வழக்கமாயிருந்தது; காய்கறிகளே எனது உணவில் அதிக இடத்தைப் பிடித்தன. ஒண்டியாகத்தானே இருக்கிறேன் என்ற எண்ணத்தில், ஒருநாளும் என் அடுப்பறை உறங்கியதில்லை. சில நேரங்களில், பச்சைக் காய்கறிகளுடனும், சில அவித்த முட்டைகளுடனும் ஆனந்தமாய் முடிந்தது என் காலை உணவு. சமைத்தேனா? சமைக்கவில்லையா? என்று என்னை நானே சந்தேகிக்கும் அளவிற்கு எப்போதும் சமையலறையினைச் சுத்தமாக வைத்திருக்கும் குணம், என் தாயாரிடமிருந்து எனக்குத் தொற்றிக்கொண்ட ஒன்று; அப்படித்தான் இருந்தது கருவந்தியா வீட்டின் சமையலறையும். ஒரு முறை, சிக்காரியா ஜெம்ஸ் வளாகத்திலிருந்து, எனது வீட்டிற்கு தற்செயலாக வந்திருந்த சகோதரர் மனோகரன், உங்கள் சமையலறையினை பெண்களுக்கு நிச்சயம் காட்டவேண்டும் என்று சொன்னது இன்றும் என் நினைவலைகளை விட்டு நீங்கவில்லை.
இராஜஸ்தானில் இருந்தபோது, நான் சமைத்த முதல் சப்பாத்தியை பத்திரமாகவும் மற்றும் அலங்காரமாகவும் வீட்டினுள் வைத்திருந்தேன். 'ஜீவ அப்பம் நானே' என்றும் அதிலே எழுதிவைத்திருந்தேன். கேட்பவரிடமெல்லாம், 'இது நான் செய்த முதல் சப்பாத்தி' என்று கூறிக்கொள்ளுவேன்; என்றாலும், அந்த சப்பாத்தியின் ஆயுட்காலத்தை ஒரு எலி காலி செய்துவிட்டது.
மாட்டா (மோர்) தாத்தா
நாட்கள் நகர்ந்தன; மாலை நேரத்தில் தங்கியிருந்த வீட்டிற்கு வெளியே சற்று உலாவும் விருப்பம் உள்ளத்தில் வந்தாலும், கல்லுடைக்கும் இயந்திரங்களினால் உண்டாகிக்கொண்டிருந்த மாசு என் விருப்பத்திற்கு விரோதியாயிருக்க, வீட்டு வாசலிலேயே, தனியே அமர்ந்தவனாக வெளிப்புறத்தையும் மற்றும் பாதையில் செல்வோரையும் பார்த்து ரசிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அது ஒரு மாலை நேரம், சுமார் 6 மணி, வெள்ளை நிறத்தைத் துறந்து மஞ்சள் நிறமாக மாறியிருந்த வேஷ்டியை மட்டுமே அரையில் கட்டியிருந்த முதியவர் ஒருவர் வேலிக்கு வெளியே நின்று என் வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது முகத் தோற்றத்தினைப் பார்த்து, ஏதோ என்னிடம் கேட்க வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டவனாக அருகில் சென்றேன் நான். குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்ட அவரை, என் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்து அமரச் செய்து தண்ணீர் கொடுத்தேன். சந்தோஷமாக தனது தாகத்தைத் தீர்த்துவிட்டு, தான் மேயவிட்டிருந்த எருமை மாடுகளைப் பார்த்த வண்ணம் எனது வீட்டின் வாசற்படியிலேயே அமர்ந்து சற்று இளைப்பாறி, சிரித்த முகத்துடன் விடைபெற்றுச் சென்றார். அடுத்த நாள் அதே நேரம், வீட்டு வாசலில் அமர்ந்திருந்த என்னை, மீண்டும் தேடி வந்தார் அந்த முதியவர். இன்றோ, தனது கரத்தில் ஒரு சில்வர் பாத்திரத்தை வைத்திருந்தார். ஒருவேளை, இன்று குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவந்துவிட்டாரோ, அல்லது கையிலிருக்கும் பாத்திரத்தில் தண்ணீர் கேட்க வருகிறாரோ? என்று நினைத்துக்கொண்டிருந்தேன் நான். அருகில் வந்ததும், என்னுடைய கரங்களில் அவர் அந்தப் பாத்திரத்தைக் கொடுத்தபோது, ஏன்? எதற்கு? என்று புரியாதவனாக அதனை வாங்கித் திறந்து பார்த்தபோது, அந்தப் பாத்திரத்தில் மோர் நிறைந்திருந்தது. உங்களுக்குத் தான் ஊற்றிவிட்டுத் தாருங்கள் என்ற அவரது அன்பு கலந்த வார்த்தைகள் அவர் என் மீது காட்டின பாசத்தை பிரதிபலித்தது. கருவந்தியா பணித்தளத்தில் நான் இருந்தவரை, மாலையில் அந்த முதியவரைத்தான் தேடியது என் முகம். ஒரு நாள் தாகத்தைத் தீர்த்ததற்கு, தினமும் பிரதிபலன் செய்த முதியவர் அவர். ஹிந்தி மொழியில் 'மோர்' என்பதற்கு 'மாட்டா' என்பதால், அவரை 'மாட்டா தாத்தா' என்று அழைப்பதே என் வழக்கமாயிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக