திங்கள், 4 அக்டோபர், 2021

எனது தந்தையின் முன்னோர்களைப் பற்றிய ஒரு முகவுரை

 தினம் ஒரு மணம்

(P.J. கிருபாகரன்)

www.sinegithan.in 


________________________________________________

எனது தந்தை 

திரு. பால் மாசில்லாமணியின் 

முன்னோர்களைப் பற்றிய 

ஒரு முகவுரை

________________________________________________


திரு. காருடையான் விக்கிரகங்களையே தெய்வமாக வணங்கிக்கொண்டிருந்த ஒரு நபர். அவரது பூர்வீகமும் சொந்தபூமியும் எனக்கு அறிவிக்கப்படவில்லை மற்றும் ஆராய்ந்தும் அறிந்துகொள்ள இயலவில்லை; என்றாலும், முன் நாட்களில், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை என் மண்ணில் அறிவித்த மேல் நாட்டு மிஷனரிகளின் மூலமாக இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டதுடன், தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராகவும் அவரை ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதும், 'காருடையான்' என்று இருந்த தனது பெயரை 'காபிரியேல்' என்று மாற்றிக்கொண்டார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஜனங்கள் தங்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட அந்நாட்களில், சொந்த பந்தங்களிலிருந்தும் விலக்கிவைக்கப்பட்ட அக்காலங்களில், இருப்பிடத்திலேயே தன் இனத்தாரோடு தொடர்ந்து வாழ இயலாத சூழ்நிலை உண்டானபடியினால், இடம்பெயர்ந்து 'செந்தியம்பலம்' கிராமத்தில் குடியேறினார். திரு. காபிரியேல் குடியிருந்த, தன்னுடைய வாழ்க்கையை இறுதிவரை கழித்த இல்லம் இன்றும் செந்தியம்பலம் கிராமத்தின் புதுக்கோவில் தெரு என்று அழைக்கப்படும் நடுத்தெருவில் அடையாளமாக நிற்கின்றது. கிறிஸ்துவை தன் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட திரு. காபிரியேல், அதிக ஜெப வாஞ்சையுடையவராகக் காணப்பட்டார். ஒவ்வொரு நாளும் தனது இல்லத்தில் ஆலயம் அமைந்திருக்கும் திசை நோக்கி முழங்கால் படியிட்டு பல மணிநேரம் ஆண்டவரை நோக்கிப் பிராத்திப்பது அவரது அனுதின வழக்கமாயிருந்தது. இவ்வாறு ஒருநாள் அவர், செந்தியம்பலம் கிராமத்திலுள்ள தனது இல்லத்தில் முழங்கால்படியிட்டு ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அருகிலே போடப்பட்டிருந்த பொன் நிறத்தினாலான சிங்காசனம் போன்ற நாற்காலியில் வெள்ளை வஸ்திரம் தரித்தவராக, உருவத்தைக் கூட கண்களால் பார்க்க இயலாத அளவிற்கு ஒளிவீசுபவராக ஆண்டவர் அவருக்குக் ஒளியாகக் காட்சியளிக்க, அந்த இடத்திலேயே தெண்டணிட்டுப் பணிந்து அவரை தொழுதுகொண்டார்; அத்துடன், ஆண்டவர் தனக்குக் காட்சியளித்த, தனது இல்லத்திலிருக்கும் அந்த இடத்திலேயே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஜெபிப்பதை தனது வழக்கமாக்கிக்கொண்டார். முன்னோர்கள் வாயிலாக இச்செய்தியைக் கேட்டறிந்த எனது தாயார், தான் உயிரோடிருந்த நாள்வரை அந்த இடத்தில் எப்போதும் ஒரு நாற்காலியை காலியாகப் போட்டுவைத்திருப்பதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த இடத்திலிருந்து நாற்காலியை அகற்றி யாராவது வீட்டின் பிற இடங்களில் வைத்துவிட்டாலோ, அல்லது நாற்காலி இன்றி அந்த இடம் காலியாக கிடந்தாலோ, உடனே ஒரு நாற்காலியை எடுத்துக்கொண்டுவந்து அதிலே போடுவது எனது தாயின் வழக்கமாயிருந்தது; அது ஆண்டவர் சிங்காசனத்தில் அமர்ந்திருந்த இடம் என்ற நினைவு எனது தாயின் நினைவினை விட்டும் நீங்கவில்லை; அது இன்றும், இன்னமும் என் மனதிலும் நீங்காது நின்றுகொண்டிருக்கின்றது. 

திரு. காருடையான் என்ற காபிரியேலின் மகன் திரு. மாசில்லாமணியும் அதே இல்லத்திலேயே தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். தனது தந்தையைப் போலவே, திரு. மாசில்லாமணியும் சிறு வயது முதல் இயேசு கிறிஸ்துவை அறிந்தவராக, பயபக்தியோடு வளர்க்கப்பட்டார். திருமதி. சுந்தரம் என்ற மனைவியோடு தனது திருமண வாழ்க்கையை செந்தியம்பலத்திலிருக்கும் தனது வீட்டிலேயே திரு. மாசில்லாமணி தொடர்ந்தார். திரு. மாசில்லாமணிக்கு 'பழயான்' என்ற செந்தியம்பலம் ஊரார் வழங்கிய பட்டப் பெயரும் உண்டு. செந்தியம்பலம் பரி.மாற்குவின் ஆலயத்தில் திரு. மாசில்லாமணி அவர்களது பிரசங்கம் என்றால், அன்று எல்லா வேலைகளையும் காலையிலேயே சீக்கிரமாக முடித்துவிட்டு, பிரசங்கத்தைக் கேட்க ஜனங்கள் சென்றுவிடுவார்கள் என்பதை முதியவர்கள் பலர் சொல்ல எனது காதுகளால் கேட்டிருக்கின்றேன். பிரசங்கத்திற்கு இடையில் அவர் பாடும் பாடல்கள் அனைத்தும் அவரால் இயற்றப்பட்டவைகளாகவே இருக்கும் என்பது அவரது பிரசங்கத்திற்கு இருக்கும் இன்னொரு சிறப்பு. ஒருபுறம், இறைபக்தியில் வளர்க்கப்பட்டு, இறைவனுக்காகத் தொண்டுசெய்வதை முக்கியமாகக் கருதி தனது வாழ்க்கையின் அநேக நாட்களை அதற்காகச் செலவழித்தபோதிலும், தனது சொந்த கைகளால் வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையிலேயே காணப்பட்டார் திரு. மாசில்லாமணி. தினம் தினம் நெசவு செய்த துணி மூட்டைகளைத் தலையில் சுமந்து சென்று, அருகிலிருக்கும் கிராமங்களில் அவைகளை விற்று, அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்திலேயே தனது குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். தன்னை அழைக்கும் குடும்பங்களுக்குச் சென்று ஜெபிப்பதும், தன்னைத் தேடி தன் வீட்டிற்கே வரும் ஜனங்களுக்காக ஜெபிப்பதும் திரு. மாசில்லாமணியின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைந்திருந்தது.  

ஒருமுறை, திரு. மாசில்லாமணி துணிகளைச் சுமந்து சென்று, அருகிலிருந்த கிராமங்களில் விற்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். மதிய நேரம், உச்சி வெயில் தலையைப் பிளக்க, தாகத்தோடு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார் திரு. மாசில்லாமணி. செந்தியம்பலம் கிராமத்திற்கு வடக்கேயிருக்கும் தேரி வழியாக அவர் நடந்துவந்துகொண்டிருக்கும்போது, தேரியில் பனையேறி ஒருவர் பதநீர் இறக்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, தனது தாகத்தைத் தீர்த்துக்கொள்ள கையிலிருந்த சில்லறைகளில் சிலவற்றைக் கொடுத்து பதநீர் அருந்தினார். கால்நடையாக இத்தனை தூரம் நடந்துசென்று வியாபாரத்தை முடித்து மீண்டும் வீடு நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார் திரு. மாசில்லாமணி. கொஞ்ச தூரம் சென்றதும், தேரியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் சிலர் திரு. மசில்லாமணியை நோக்கி ஓடிவந்து, 'தாத்தா, தாத்தா எங்களுக்கும் பதநீர்' என்று கெஞ்ச, மனமுருகிய திரு. மாசில்லாமணி, அந்த சிறு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு, பதநீர் இறக்கிக்கொண்டிருந்த பனையேறியிடம் சென்று, மேலும் சில சில்லறைகளைக் கொடுத்து, 'இந்த சிறு பிள்ளைகளுக்கு பதநீர் ஊற்றிவிடுங்கள்' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். திரு. மாசில்லாமணி கொஞ்ச தூரம் சென்றதும், அவருக்கு பின்னாலேயே ஒடி வந்த அந்த சிறு பிள்ளைகள், 'தாத்தா, தாத்தா நீங்க கொடுத்த காசுக்கு அவரு பதநீர் ஊற்றவில்லை' என்று சொல்ல, பனையேறியை நோக்கிச் சென்ற திரு. மாசில்லாமணி, பனையேறியை நோக்கி, 'நான் கொடுத்த காசுக்கு இந்த பிள்ளைகளுக்கு பதநீர் ஊற்றினீர்களா?' என்று கேட்க 'ஆம்' என்று பதிலளித்தார் அந்த பனையேறி. இந்த வார்த்தைகளைக் கேட்ட திரு. மாசில்லாமணி, 'நான் கொடுத்த காசுக்கு பதநீர் ஊற்றினால், நாளைக்கு நீ பனை ஏறுவாய்; இல்லையென்றால், கட்டையில் போய்விடுவாய்' என்று சொல்லிவிட்டு தனது நடைபயணத்தைத் தொடர்ந்தார். மறுநாள் காலை, ஆலயத்தில் துக்கமணி அடிக்கும் ஓசை, என்ன நடந்தது என்று அறிய திரு. மாசில்லாமணி முற்பட்டபோது, அவர் அறிந்துகொண்ட செய்தி, 'அந்த பனையேறி இறந்துபோனார்' என்பதே. இச்செய்தியினை அறிந்ததும், தனது வார்த்தையினால் தான் செய்துவிட்ட தவறை எண்ணி வருந்தினார் திரு. மாசில்லாமணி. 

மற்றும் ஒரு நாள், தனது இல்லத்தின் முன் இருக்கும் திண்ணையில் சற்றே இளைப்பாறி அமர்ந்திருந்தார் திரு. மாசில்லாமணி. அப்போது, தூரத்தில் மகன் யோவான் திரு. மாசில்லாமணியை நோக்கி ஓடிவந்தான். தந்தை திரு. மாசில்லாமணிக்கு அருகில் வந்ததும், 'அப்பா அப்பா நான் இன்னும் சில நாட்களில் இறந்துபோவேனாம்' என்று அழுதவாறு கூற, 'யார் சொன்னது?' என்று கேட்டார் தந்தை திரு. மாசில்லாமணி. அப்போது, மகன் யோவான் தனது மழலை மொழியில், செந்தியம்பலத்திலுள்ள ஒரு பாட்டியின் பெயரைச் சொல்லி, 'அந்த பாட்டி எனக்கு செய்வினை வைத்திருக்கிறார்களாம், எனவே நான் இறந்துவேனாம்' என்று சொல்ல, இதை உனக்கு யார் சொன்னது? என்று தந்தை திரு. மாசில்லாமணி வினவ, ஒரு நபரின் பெயரைச் சொன்னான் மகன் யோவான். எத்தனையோ சாந்தப்படுத்தியும், சமாதானப்படுத்தியும், உனக்கு ஒன்றும் நடக்காது தைரியமாயிரு என்று சொல்லியும், அப்பா இருக்கிறேன் என்று சொல்லியும் மகன் யோவானின் அழுகை நிற்காததைக் கண்ட தந்தை திரு. மாசில்லாமணி, மகன் யோவானைப் பார்த்து, 'சரி, இன்று முதல் தினமும் காலையில் விடிவதற்கு முன் அப்பா உடன் ஆலயத்திற்கு வரவேண்டும். ஆலயத்திற்கு வெளியே நின்றுகொண்டு, 'ஆண்டவரே, நான் யோவான் வந்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு நீ வந்துவிடவேண்டும், இப்படி நாற்பது நாட்கள் நீ செய்யவேண்டும். நாற்பதாவது நாளில் நீ சொன்னது உண்மையாயிருந்தால், அந்த பாட்டி பாடையில் போய்விடுவாள் என்று சொல்ல, தந்தையின் வார்த்தைக்கு இணங்கி, உயிர் பயத்துடன், ஒவ்வொரு நாளும் தந்தையுடன் எழுந்து காலையில் பரி. மாற்குவின் ஆலயத்திற்கு முன் சென்று நின்றவாறு, 'ஆண்டவரே, நான் யோவான் வந்திருக்கிறேன்' என்று சொல்லத் தொடங்கினார். நாற்பதாவது நாள் காலையிலும் அதே போன்று 'ஆண்டவரே, நான் யோவான் வந்திருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, ஆலயத்தை விட்டு தந்தையும் மகனும் வீடு வந்தடைந்ததும், ஆலயத்தில் துக்க மணி ஓசை கேட்க, வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் விசாரித்தபோது, அந்த பாட்டி மரணமடைந்திருந்த செய்தியைக் கேட்ட திரு. மாசில்லாமணி அதிர்ச்சியடைந்தார். ஊழியனான தனக்கு விரோதமாகவும், தனது குடும்பத்திற்கு விரோதமாகவும் அந்த பாட்டி செய்திருந்த சூழ்ச்சியைக் கேட்டு மனம் வருந்தினார். என்றாலும், மீண்டும் தனது வார்த்தையினால் மேலும் ஒரு உயிர் பறிபோய்விட்டதே என்ற வருத்தம் அவரை நிறைத்திருந்தது. 

திரு. மாசில்லாமணி எத்தனையாய் ஆண்டவரை இறுகப் பிடித்திருந்தாலும், ஆண்டவருக்காக ஊழியம் செய்தாலும், திரு. மாசில்லாமணியின் மனைவின் விசுவாசமோ கணவனுக்கு ஈடாக இருக்கவில்லை. ஆங்காங்கே சென்று ஊழியம் செய்துவிட்டு வீடு திரும்பும்போது, வீட்டில் இருக்கும் இல்லாமையைக் குறித்தே பேசிக்கொண்டிருப்பது திருமதி சுந்தரம் மாசில்லாமணியின் வழக்கமாயிருந்தது. ஒருமுறை, 'திரு. மாசில்லாமணியின் உறவினர்கள் வீட்டிற்கு வருகிறார்கள்' என்ற செய்தி, திருமதி சுந்தரத்தின் காதுகளை வந்தடைந்தது. வியாபாரத்தை முடித்துவிட்டு, ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்ளும் ஜனங்களின் வீடுகளுக்குச் சென்று ஜெபித்துவிட்டு, களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் திரு. மாசில்லாமணி. வீட்டின் வாசற்படியில் காலடியை எடுத்துவைத்ததும், 'நாளைக்கு உங்கள் உறவினர்கள் வருகிறார்களாம், வீட்டில் அரிசி ஒன்றும் இல்லை, ஏதாவது செய்யுங்கள்' என்று திருமதி சுந்தரம் சொல்ல, 'கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார்' என்று சாதாரணமாகப் பதிலுரைத்தார் திரு. மாசில்லாமணி. இரண்டு மூன்று முறை திருமதி சுந்தரம் தன் கணவினிடத்தில் கேட்டபோதிலும், 'கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார்' என்ற பதிலே திரு. மாசில்லாமணியின் வாயிலிருந்து வந்தது. மாலை மயங்கி இரவு தொடங்கியது, அவ்வப்போது சென்று அரிசிப் பானையைத் திறந்து பார்த்தவராக, தூக்கமின்றி தவித்துக்கொண்டிருந்தார் திருமதி சுந்தரம். என்றபோதிலும், உடல் சோர்வினால், உறக்கம் திருமதி சுந்தரத்தைத் தொற்றிக்கொள்ள. சற்று நேரம் கழித்து, மெல்ல எழுந்த திரு. மாசில்லாமணி, அருகிலிருந்த தனது நண்பரின் வீட்டிற்குச் சென்று தனது வீட்டின் நிலையைச் சொல்லி அரிசி வேண்டும் என கேட்க, ஆண்டவருக்கு பணிவிடை செய்யும் திரு. மாசில்லாமணியே தனது வீட்டிற்கு வந்து கேட்பதில் ஆனந்தமடைந்த நண்பர், போதுமான அளவு அரிசியை அள்ளிக் கொடுத்தார். நண்பர் கொடுத்த அரிசியை சுமந்துகொண்டு, மெல்ல வீட்டின் கதவினைத் திறந்து, அத்தனையையும் அரிசி பானைக்குள் கொட்டிவிட்டு, மனைவி அறியாதபடி மறுபடியும் தனது தூக்கத்தைத் தொடர்ந்தார் திரு. மாசில்லாமணி. காலை பிறந்தது, திரு. மாசில்லாமணி எழுவதற்கு முன், துயிலெழுந்த திருமதி சுந்தரம் நேராக அரிசிப் பானை இருக்கும் அறைக்குச் சென்று அதனைத் திறந்து பார்த்தபோது, அரிசிப் பானை நிறைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்துபோனார். 'கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார்' என்று தன் கணவன் சொன்னது உண்மையாகிவிட்டது என எண்ணியபோது, பயமும் திருமதி சுந்தரத்தைத் தொற்றிக்கொண்டது. அன்றுமுதல், கணவனுக்குக் கொடுக்கும் மரியாதையே மாறிப்போனது; என்றாலும், தான் இறக்கும்வரை இந்த செய்தியை தன் மனைவிக்கு திரு. மாசில்லாமணி அறிவிக்கவில்லை. திரு. மாசில்லாமணியின் நாட்களில் எந்த அறையில் அரிசிப் பானை இருந்ததோ, அதே இடத்திலேயே நான் சிறுவனாக இருக்கும்வரை எங்கள் வீட்டின் அரிசிப் பானை இருந்தது. ஒவ்வொரு நாளும் மாலையில் எனது அப்பா ஏதாவது தின்பண்டங்களை வாங்கி அதிலே வைத்துவிடுவார், காலையில் எழுந்ததும் அந்த பானையை நோக்கிச் செல்வதுதான் எனது வழக்கமாயிருந்தது.   

மரண நேரத்தின்போது, படுக்கையிலிருந்த திரு. மாசில்லாமணி, அருகிலிருந்த தனது குடும்பத்தினரை நோக்கி, 'எத்தனையாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்தாலும், இரண்டு உயிர்கள் மரிப்பதற்குக் காரணமாகிவிட்டேனே' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாராம். ஆண்டவரே நான் செய்த தவறை மன்னித்துவிடும் என்று அவரது உதடுகளிலிருந்து பிறந்த வார்த்தைகளைத் தொடர்ந்தே அவரது ஜீவன் அவரை விட்டுப் பிரிந்தது. 

திரு. மாசில்லாமணியில் வாழ்க்கையில் நடைபெற்ற இச்சம்பவத்தை அறிந்திருந்த எனது அத்தை (எனது தந்தையின் மூத்த அக்கா), ஒரு ஞாயிறு அன்று நான் அவசர அவசரமாக ஓர் ஆலய ஆராதனையில் செய்தியளிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, என்னை அழைத்து, என் கரத்திலிருந்த வேதாகமத்தை வாங்கிக்கொண்டு, 'உன் வாயினால் யாரையும் திட்டமாட்டேன், சபிக்கமாட்டேன்' என்று சொல்லிவிட்டு இந்த வேதாகமத்தை வாங்கிக்கொள் என்று சொல்ல, நான் அவர்களை நோக்கி, 'ஏன் அத்தை திடீரென்று இப்படி என்னை சொல்லச் சொல்லுகிறீர்கள்?' என்று கேட்டபோது, திரு. மாசில்லாமணியைக் குறித்த இந்த வாழ்க்கை நிகழ்வை எனக்கு எடுத்துச் சொன்னார்கள். ஓவ்வொரு நிமிடமும், என் வாயை எச்சரிக்கும் இந்த குரலை இன்றும் என் உள்ளத்தில் நான் கேட்கின்றேன்.  

திரு. மாசில்லாமணியின் மகனும் எனது தந்தையின் தந்தையுமான திரு. யோவானும் அதே இல்லத்திலேயே தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். குடும்பம் விரிவடைந்து, இடத்தேவை உண்டானபோது, தனது வீட்டிக்குக் கிழக்கே அடுத்திருந்த வீட்டு மனையினை யாரும் வாங்க முன்வராததை அறிந்த திரு. யோவான், அதனையும் வாங்கி குடியேறினார். திரு. யோவானின் மகனும் எனது தந்தையுமான திரு. பால்மாசில்லாமணியின் இறுதி நாட்கள் வரை நான் குடியிருந்த மண் அதுவே.    



எனது தாத்தா

திரு. யோவான்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக