வெள்ளி, 6 மே, 2022

இயேசுவை நோக்கி...

 இயேசுவை நோக்கி...


ஜெபக்குழுவாகக் கூடி ஜெபிப்பதோடு கூட மாத்திரமல்லாமல், செந்தியம்பலம் கிராமத்தில் உள்ள மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையினையினையும் கருத்தில் கொண்டவர்களாக, பொதுக்கூட்டங்களை மாதம் ஒருமுறை நடத்துவது என தீர்மானித்தோம். செந்தியம்பலம் கிராமத்தில் அதற்கு ஏற்ற இடத்தை நாங்கள் தேடிக்கொண்டிருந்தபோது, செந்தியம்பலத்தின் வட பகுதியில் உள்ள பரி.மாற்கு நகரில் இருந்த தென்னிந்தியத் திருச்சபைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று அப்போது காலியாகக் இருப்பது தெரிந்து, அதில் அக்கூட்டத்தினை நடத்தலாம் என முடிவெடுத்தோம். செந்தியம்பலம், பரி.மாற்குவின் ஆலயத்திற்குச் சொந்தமான அக்கட்டிடத்தை, ஆலய கமிட்டி உறுப்பினர்களிடம் சென்று கேட்டபோது, அவர்கள் உற்சாகமாக அக்கட்டிடத்தை எவ்வித வாடகைத் தொகையும் இன்றி மனமுவந்து கொடுத்தனர். ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை அன்று மாலையில் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்தோம். அக்கூட்டத்திற்கு ஏதாகிலும் பெயர் கொடுக்கவேண்டுமே என்ற எண்ணம் எங்களுக்குள் உண்டானபோது, ஒரு மாலைப்பொழுதில் அமர்ந்து பல்வேறு பெயர்களை ஜெபத்துடன் யோசித்துக்கொண்டிருந்தோம்; இறுதியில், 'இயேசுவை நோக்கி...' என்று பெயரை அக்கூட்டத்திற்குப் பொருத்தமானதாகக் கண்டோம். விரைவில் கூட்டத்தை தொடங்கத் திட்டமிட்டோம். கூட்டம் நடக்கவிருந்த அக்கட்டிடத்தினை சுத்தம் செய்யும் பணி பிரதானமாக இருந்ததால், ஒரு சில நாட்கள் வாலிபர்கள் குழுவாக அக்கட்டிடத்திற்குச் சென்று அதனை சுத்தம் செய்து, ஜனங்கள் அமரத்தக்க அறையாக அதனை மாற்றினோம். அக்கட்டத்தினைச் சுற்றிலும் இருந்த செடிகளை அகற்றி, ஜனங்கள் வருவதற்கான பாதையையும் உண்டாக்கி ஆயத்தங்களை விறுவிறுப்பாகச் செய்தோம்

.முதல் கூட்டத்தை விரைவில் தொடங்கத் திட்டமிட்டபோது, அதற்கான செலவினங்களை எப்படி சந்திப்பது என்ற சிந்தனை பெரியதாக எங்கள் முன் நின்றது. வாலிபர்களான நாங்கள் அப்போது படித்துக்கொண்டிருந்தபடியினால், பணஉதவிக்காக பரத்தையே நோக்கி ஜெபித்துக்கொண்டிருந்தோம். ஒலிபெருக்கி மற்றும் கூட்டத்திற்கு வருகை தருவோர்க்கான தேனீர் செலவுகள் என ஒரு சிறு தொகையினை முன் வைத்து தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தோம். அப்போது, உற்சாகமாகக் கொடுக்கக்கூடிய கிராமத்து நபர்களிடத்தில் காணிக்கைகளைப் பெறலாம் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டானது. செந்தியம்பலம் கிராமத்திலுள்ள சில நபர்களைச் சந்தித்தோம். முதன் முதலாக ஒரு நபரைச் சந்தித்து கூட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தபோது, அவர் 100 ரூபாயை காணிக்கையாக எழுதினார்; பணத்தையோ பிற்பாடு தருவதாக வாக்களித்தார். அவர் எழுதியதைக் கண்டதும், எங்களுடைய சந்தோஷத்திற்கோ அளவில்லை. ஆம், அப்போது ஒலிபெருக்கிக்கான செலவு ரூ.100 மாத்திரமே. தொடர்ந்து மேலும் சில நபர்களும் அக்கூட்டத்திற்கு உதவி செய்தனர். 

'இயேசுவை நோக்கி...' முதல் கூட்டத்திற்கு நாங்கள் ஆயத்தமானோம். கைப்பிரதிகளை அச்சடித்து, செந்தியம்பலம் கிராமம் முழுவதும் கொடுத்து, ஜனங்களை கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். முதல் கூட்டம் தொடங்கியது, நாங்கள் எதிர்பார்த்தது போலவே கிராமத்து மக்களில் பலர் அக்கூட்டத்திற்கு வருகைதந்திருந்தனர். ஜெபக்குழுவில் சகோதரர்களையும், நண்பர்களையும் மாத்திரமே பார்த்து பார்த்து பழகியிருந்த எங்களுக்கு புதியதோர் அனுபவம். கிராமத்து ஜனங்களுக்கு முன் நின்று பாடல்களைப் பாடியபோது, கூட்டத்திற்கு வந்திருந்த கிராமத்தினரும் உற்சாகமாக பாடல்களைப் பாடினர்; அவர்களது பாடல் சத்தத்தில் நாங்களும் உற்சாகமடைந்தோம். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ஊழியர்களை செய்தி கொடுப்பதற்காக அழைத்தோம். கூட்டத்தின்போது, கிராமத்தினர் பலர் ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றனர், பலர் பிசாசின் பிடியிலிருந்து விடுதலையடைந்தனர். இக்காட்சிகளையெல்லாம் கண்ட எங்கள் உள்ளம் சந்தோஷம் கொண்டது. 'இயேசுவை நோக்கி..' கூட்டத்திற்கு கிராமத்தினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக