2004-ம் ஆண்டு, பீஹாரில், டெஹ்ரி ஆன் சோன் நகரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலுள்ள, ஜெம்ஸ் ஊழியத்தின் பணித்தளத் தலைமையிடம் அமைந்திருக்கும் சிக்காரியா என்னும் சிறியதோர் கிராமத்தில் திருமணம் முடிந்து மனைவியுடன் புதியதோர் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய நாட்கள் அவை. இராஜஸ்தான் மாநிலத்தில் தங்கியிருந்து, தனியார் கம்பெனியில் பணிபுரிந்த முன் அனுபவம் எனக்கு இருந்ததினால், வட இந்திய காலச்சூழ்நிலைக்கும் மற்றும் கலாச்சாரத்திற்கும் என் உடல் ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தது. எனவே, 2002 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெம்ஸ் மிஷனரி ஸ்தாபனத்தில் ஊழியனாக இணைந்து, முதன் முதலாக கருவந்தியாவிலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியிருந்த நாட்களில் பீஹாரின் தட்பவெட்ப நிலை எனக்கு புதிதாயிருக்கிவில்லை. குளிரும் வெயிலும் இராஜஸ்தானைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்டபோதிலும், தாங்குவதற்கு பெலனுடைய வயதிலிருந்த நான் அனைத்தையும் ஆனந்தமாகவே அனுபவித்தேன். எனினும், புதிதாக பீஹார் மண்ணில் காலடி எடுத்துவைத்திருந்த எனது மனைவிக்கோ பீஹாரின் தட்பவெட்பநிலை புரியாத புதிராகவே காட்சியளித்தது; என்றபோதிலும், மிஷனரியாக தன்னை அர்ப்பணித்து மிஷனரியையே மணமுடிப்பேன் என்ற மனஉறுதியிலிருந்த அவளை அது அசைக்கவில்லை.
குடும்பத்தினர்களையும், உறவினர்களையும் மற்றும் ஊனுயிராய்ப் பழகிய நண்பர்களையும் விட்டு வந்திருக்கின்றோம் என்ற தூரத்தை குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது நாங்கள் உணர்ந்தபோதிலும், அது எங்களுக்கு துயரத்தைக் கொடுக்கவில்லை. கைபேசிகளோ அல்லது தொலைபேசிகளோ இல்லாத அந்நாட்களில் கடிதத்திற்குக் காத்திருந்ததும், நண்பர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் அவைகள் வந்துசேரும்போது கணக்கில்லாத மகிழ்ச்சியடைவதும் இன்றும் நீங்காமல் என் நெஞ்சில் நிற்கிறது, அது மறக்கஇயலாதது. ஊரிலிருந்து ஒருமுறை வரும் கடிதத்தைக்கூட பத்திரப்படுத்தி வைத்திருந்து பலமுறை வாசித்து ருசித்த அனுபவம் இன்றும் எனது நினைவினை விட்டு நீங்கவில்லை. இன்றும், இன்னமும், அவைகள் அனைத்தையும் பத்திரமாகவே பாதுகாத்துவருகின்றேன்; என்னிடம் வந்து சேர்ந்த ஒரு கடிதத்தைக் கூட என்னைத் தாண்டி குப்பைத் தொட்டிக்குக் கூளமாகச் செல்ல நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. உறவின் பசி ஒருபுறம் இருந்தாலும், ஊழியத்தின் ருசியினால் அவைகள் அனைத்தையும் அவ்வப்போது அணைக்கப் பழகிக்கொண்டோம்.
எனது மனைவி சிக்காரியாவிலிருக்கும் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் ஆசியராக மாணவர்கள் மத்தியிலும், நான் ஜெம்ஸ் மீடியாவின் வெளியீட்டுத் துறையிலும் எங்களது ஊழியத்தைத் சிறப்பாகச் செய்யத் தொடங்கினோம். சிக்காரியா பணித்தளத்தில் உடனிருந்த ஊழியர்கள் அனைவரும் எங்கள் உறவுகளாக மாற, அவர்களது பாசமும் அன்பும் அனுதினமும் எங்களை வந்து சேர, குடியிருந்த இடமே குடும்பமாகவும் மற்றும் உடனிருக்கும் உயிர்கள் அனைத்தும் எங்கள் உறவாகவும் மாற சில நாட்களே பிடித்தன.
நாட்கள் சென்றன, ஊரிலிருந்து உறவினர் ஒருவர் வருகிறார் என்ற செய்தி திடீரென எங்கள் காதுகளை வந்து எட்டியது. கேட்ட மறுகணமே வீட்டிலிருந்த எங்களை சந்தோஷம் தொற்றிக் கொண்டது. வேறொரு ஊழியரின் வீட்டிற்கு அவர் வருவதாயிருந்தபோதிலும், நிச்சயம் எங்கள் வீட்டிற்கும் வருவார் என்ற எண்ணத்தில், அந்த நாளுக்காகக் காத்திருந்தோம்; வந்ததும் அவர்களைச் சந்தித்து எங்கள் சந்தோஷத்தைப் பறிமாமறிக்கொண்டதுடன், அவர்களுக்கு எப்படியாகிலும் ஒருநாள் சாப்பாடும் பறிமாறிவிடவேண்டுமே என்று விரும்பிய நாங்கள், வீட்டிற்கு வருகைதரவும், விருந்தினை ஏற்றுக்காள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம்; அவர்களும் உளம் நிறைந்த மகிழ்சியோடும் உற்சாகத்தோடும் ஒத்துக்கொள்ள, விருந்தளிக்கும் நாளும் நெருங்கியது. திருமணம் முடிந்து, புதுக்குடித்தனம் தொடங்கியிருக்கும் நாட்கள் அவை, நாங்கள் சமைக்கும் எதனையும் சுவைத்து உண்ண எங்கள் நாவுக்குப் பெலன் இருந்தது; ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் அன்பினால், சமையலில் அவ்வப்போது உண்டான பிழைகளும் அப்போது எங்களுக்குப் பெரிதாகத் தென்பட்டதில்லை. ஆனால், விருந்தினர் ஒருவருக்கு சமைக்கும் அளவிற்கு சமையலில் அச்சமையம் நாங்கள் தேர்ச்சி அடையாததினால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வது புதிதாக வீடு கட்டுவதற்கு அஸ்திபாரம் போடுவதுபோலிருந்தது.
ஒருவழியாக, 'பிரியாணி' செய்து விருந்தினரை அசத்திவிடலாம் என திட்டமிட்டோம். வாங்கவேண்டிய பொருட்கள் அனைத்தையும் நான் வாங்கிக்கொண்டுவர, அடுப்பறையில் அதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்யத் தொடங்கினாள் என் மனைவி. தனியாக, நான் விரும்பும் அளவிற்கு உணவினைச் சமைக்கும் திறமை என்னிடத்திலிருந்தபோதிலும், அது விருந்துக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்த நான் அடுப்பறையிலிருந்து ஒரமாக சற்று ஒதுங்கிக்கொண்டேன். அடுப்பறையில் சமையலில் இருக்கும் மனைவிக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அறையிலிருந்த வண்ணம், அவள் கேட்க கேட்க செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். கோழிப் பிரியாணி ஒருவழியாக தன் வாசனையை வீசத் தொடங்கியது. வாசனையை நுகர்ந்ததும், 'செய்துவிட்டாள் என் மனைவி; ஜெயித்துவிட்டாள்' என்ற சந்தோஷம் என் உள்ளத்தை நிறைத்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது சென்று பிரியாணிச் சட்டியைத் திறந்து பார்த்துவிட்டு வந்தாள் என் மனைவி. இன்னமும் சற்று வேகவேண்டும் என்றாள்; கொஞ்ச நேரம் கழித்து 'அவ்வளவுதான் முடிந்துவிட்டது, மூடிவைத்திருக்கிறேன்' என்றாள். அடுப்பறையில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, திறந்து பார்த்து, 'வாங்க, வாங்க, வாங்க' என்று விருந்தினரை வரவேற்றேன் நான். நலம் விசாரித்து நாலு வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்கும்போதே, சாப்பிட்டுட்டுப் பேசலாம் என்றாள் என் மனைவி. விருந்தினரை அமரச் செய்துவிட்டு, அடுப்பிலிருந்து, பிரியாணியை இறக்கி மூடியைத் திறந்த எங்களுக்கோ அதிர்ச்சி. தண்ணீர் அதிகமாகிவிட்டதினால், பக்குவத்தை இழந்து பரிதாபமாயிருந்தது பிரியாணி. எனினும், ஒருவழியாக விருந்தினரை அமரச் செய்து, பிரியாணியைப் பறிமாறிவிட்டோம்.
சாப்பிட்டு முடித்ததும், உறவுகளை விசாரித்து, ஊர்க் காரியங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென பீஹாரை நோக்கி திரும்பியது அந்த விருந்தினரின் வார்த்தைகள். பீஹார் எப்படியிருக்கிறது? இங்கு இருப்பவர்கள் எப்படியிருக்கிறார்கள்? எப்படி ஊழியம் செய்கிறீர்கள்? தட்பவெட்ப நிலையினை எப்படித் தாங்கிக்கொள்ளுகிறீர்கள்? மீண்டும் எப்பொழுது ஊருக்கு வருவீர்கள்? போன்ற கேள்விகளைத் தொடுத்து, எங்களிடம் விடைகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்த விருந்தினருக்கு, நாங்கள் வந்து சில நாட்களே ஆனபோதிலும் எங்கள் சிந்தையில் ஏறியிருந்தவைகள் அனைத்தையும் விடையாகத் தொடுத்துக் கொடுத்தோம். அச்சமையம், திடீரென அவர் எங்களை நோக்கி, 'நீங்கள் இங்கே வேலைதானே செய்கிறீர்கள்? மிஷனரியாக அர்ப்பணிக்கவில்லைதானே' என்று கேட்டதுடன், 'நீங்கள் மிஷனரியாக மாறிவிட்டால் உங்கள் சம்பளம் இங்கே குறைந்துவிடும், தனித்தனியாக இப்போது நீங்கள் வாங்கும் சம்பளம் மிஷனரியாகிவிட்டால் குடும்பத்திற்கு என ஒரு உதவித்தொகையாகவே கொடுக்கப்படும்; அதுவும், இப்போது இருவரும் நீங்கள் பெறும் சம்பளத்திற்கு மிகவும் குறைவாக இருக்கும்; எனவே, மிஷனரியாக மாறவேண்டாம், வேலை செய்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தை நடத்துங்கள்' என்று எங்களுக்கு அறிவுரை சொன்னார். பீஹாருக்கு செல்லவேண்டும் என்ற விருப்பம் எனது உள்ளத்தில் எழுந்ததும், 'மிஷனரியாகத்தான் நான் அங்கே செல்லவேண்டும்' என்ற அர்ப்பணமும் கூடவே என்னைத் தொற்றிக்கொண்டிருந்தது. அப்படியிருக்க, விருந்தினராக வந்திருக்கும் இவருக்கு இத்தனை அறிவு எப்படி கிடைத்தது? என்பது எங்களுக்கு ஒருபுறம் புதிராயிருந்தபோதிலும், ஏற்கனவே மிஷனரியாக எங்களை ஏற்றுக்கொள்ளும்படியாக ஜெம்ஸ் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த எங்கள் தலையிலோ அந்த விருந்தினரின் வார்த்தைகள் இடி விழுந்ததைப் போல இருந்தது.
அந்த விருந்தினருக்குப் பறிமாறிய பிரியாணியின் பதம் தவறியிருந்தபோதிலும், அவரது வார்த்தைகள், 'நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது' (யோவான் 4:34) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, எங்களுடைய பிரியாணியில் பெரிய ஆணியை அறைந்ததைப்போல இருந்தது.
என்றபோதிலும், அந்த விருந்தினரின் வார்த்தைகள் எங்களது அர்ப்பணிப்பிற்கு அணைபோடவில்லை, காதுவரை வந்த அவரது வார்த்தைகளை காற்றோடு விட்டுவிட்டு, மிஷனரிகளாகவே கர்த்தருடைய பணியைத் தொடர்ந்தோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக