புதன், 6 அக்டோபர், 2021

செந்தியம்பலம் ஓர் அறிமுகம்

 

  தினம் ஒரு மணம்

(P.J. கிருபாகரன்)

www.sinegithan.in


மண், மதில், மடி

(கிராமம், வீடு, பெற்றோர்)


செந்தியம்பலம் ஓர் அறிமுகம்


மண், மதில், மடி என்ற தலைப்புகள் அடங்கிய இந்த அத்தியாயத்தில் பிறந்த கிராமத்தையும், வாழ்ந்த வீட்டையும், வளர்த்த பெற்றோரையும் குறித்த குறிப்புகளை அடக்கியிருக்கிறேன். என்னை உருவாக்க, இறைவனே இவைகளை உருவாக்கி அமைத்ததாகப் பார்க்கிறேன். எங்கு, யாருடன், யாரிடத்தில் என நிர்ணயித்து, அதனை நிச்சயித்து, நிறைவாய் வடிக்கும் என்னைப் பிறப்பித்த இறைவனுக்கே கனம், துதி, மகிமை அனைத்தும் உண்டாவதாக. இந்த அத்தியாயம், எனது கிராமத்தையோ, வீட்டையோ அல்லது பெற்றோரையோ பெருமை பாராட்ட புரட்டப்படும் வரலாறு அல்ல; மாறாக, ஒவ்வொரு மனிதனும் வசிக்கும், வாழும் மற்றும் வளரும் இடங்கள் வௌ;வேறானாலும், அத்தனை பேருக்கும் தத்தம் சந்ததி உத்தமமானவரின் உன்னதமான உருவாக்கமே என்பதனைப் புலப்படுத்தவே. 

மண்ணிலிருந்து முதல் மனிதன் ஆதாமை தேவன் உருவாக்கினதுபோலவே, எந்த மண்ணில் என்னை தேவன் உருவாக்கினாரோ அந்த மண்ணிலிருந்தே புறப்படுகிறேன். ஆதி தாய் தந்தையாகிய ஆதாம், ஏவாள் வம்சத்தில் வந்த நான் என் வசத்திலிருக்கும் எஞ்சியிருக்கும் வரலாற்றை இங்கே எழுத்தாக்கிப் பதிக்கிறேன். ஏதேனிலிருந்து இந்தியா பயணமாகி, இந்திய தேசத்தில் மனிதர்களும் மதங்களும் வந்த விதத்தையும், ஜனங்களும் ஜாதிகளும் உருவான விதத்தையும் கருத்துக்களையும் இக்கட்டுரையின் தொடக்க அத்தியாயத்தில் வெளியிட எண்ணியிருந்தேன், 'மதமாகிவிட்ட மனிதன்' 'ஆரியர்களின் அரசாங்கம்' 'புத்தமத்தின் வித்து' 'புளியமரமும் போதிமரமும்' 'கட்டியதை இடிக்கும் கடவுள்' என்பது போன்ற குறுந்தலைப்புகளின் கீழ் நான் எழுதியுள்ள கட்டுரைகள் அனைத்தும் இந்தியாவில் வாழும் மனிதர்கள் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவைகளே; எனினும், உறுதியான அக்கருத்துக்களை பலர் எதிராகப் பார்ப்பதினாலும், சத்தியமான அதனை பலர் சர்ச்சையாக்குவதினாலும், உண்மை என்றாலும் ஒத்துக்கொள்ள தயங்குவதினாலும் அப்பகுதியினை இத்தொடரில் வெளியிடாது விட்டுவிடுகிறேன். இத்தொகுப்புகள் அடங்கிய இந்திய வரலாற்றை சமயம் வருங்கால் புரட்டிக் காட்டுகிறேன். இந்தியனுக்கு இறைவனைத் தெரியும், ஆனால் சந்தி சிரிக்கும் அளவிற்கு சறுக்கி விழுந்து, சறுக்கிய இடத்தை சத்தியமாக்கி போதனை வழியாக்கித் தொடரும் சந்ததியின் சரித்திரம் அது. ஆணிகள் ஏற்றவரைக் கண்ட இறைஞானிகளான மூதாதையர்கள் பலரின் முடிவுக்குப் பின், அந்த வரலாறு வேறு பல புராணங்களாக முடிச்சு போடப்பட்டுவிட்டது. யாரைக் கண்டு எழுதினார்கள் என்பதை அறியா பலர், மண்ணோடு அதனை கலந்துவிட்டதால், இன்று முக்கியமான அச்சரித்திரம் மக்கிப்போய்க் கிடக்கிறது. முடிந்ததை அவிழ்ப்பது முனைந்தவனுக்குத்தானே தெரியும்; எனவே, அதனை அவித்தவிழ்க்க என் தொகுப்பும் ஓர் நெருப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதனை வரைந்து வைத்திருக்கிறேன்; எனது மணித்துளிகள் பல அதில் கரைந்திருந்தாலும், வரலாறு எழுத்தாக உறைந்துவிட்டது என உளம் நிறைந்திருக்கிறேன்; இன்னமும் அதனைத் தொடருக்கின்றேன்.... 

இந்தியன் என்ற எல்லைக்குள் என்னை வைத்தல்ல, மனிதன் என்ற உலகுக்குள் என்னை வைத்தே எனது வரலாற்றைத் தொடருகிறேன். மனிதன் தனிமையாய் இருப்பதையும், நிர்வாணமாயிருப்பதையும் விரும்பாதவர் படைத்த தேவன். மகிமையால் மூடப்பட்டிருந்த அவர்கள் கீழ்ப்படியாமையினால் மர இலைகளால் மூடிக்கொள்ளும் அளவிற்குத் தள்ளப்பட்டனர். அரைகுறையாய் காய்ந்து சருகாகிப்போகும் இலைகளால் ஆதாம் ஏவாள் இருவரும் தங்கள் நிர்வாணத்தை மறைத்தபோது, தோல் ஆடைகளைச் செய்து கொடுத்த நம்மைப் படைத்தவர்; ஆண்டவர், என்னையும் ஆடைகளை ஆயத்தப்படுத்தும் நெசவாளர்கள் வாழும் சிறியதோர் கிராமத்திலேயே பிறக்கச் செய்தார். 

தமிழ்நாட்டில், முத்து நகர் எனப்படும் தூத்துக்குடி மாவட்டத்தின், சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட செந்தியம்பலம் கிராமமே எனது பிறப்பிடம். தென் புறத்திலே சாயர்புரம் பேரூராட்சி. சிதம்பரனார் மாவட்டம் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தூர தொiலைவு; ஏறக்குறைய 45 நிமிட பேருந்து பயண நேரம். போக்குவரத்து, கொள்முதல் என அனைத்திற்கும் சாயர்புரமே அக்கிராமத்தினருக்குப் பிரதான ஸ்தானம். முள்ளன்விளை, குமாரபுரம், கட்டாலங்குளம், நடுவைக்குறிச்சி, புளியநகர், செபத்தையாபுரம், பேய்க்குளம், கூட்டாம்புளி, ஜெபஞானபுரம், சக்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம், காமராஜ் நகர், நம்மாழ்வார் நகர் என்ற பல கிராமங்களுக்கும், சிற்றூர்களுக்கும் இடையிலே நெருக்கமாய்ச் சுருங்கிக் கிடக்கிறது செந்தியம்பலம் என்னும் கிராமம். 

இக்கிராமத்தைப் பற்றி நான் எழுதும்போதெல்லாம் என்னுள் எழும் எண்ணங்களுள், கிராமத்தின் தேரிப்பகுதி செம்மண் வண்ணமும் ஒன்று. இக்கிராமத்தின் தேரி சிகப்பு மண் படர்ந்த தரையினைக் கொண்டது. சிகப்புக் கம்பளம் போன்று தோற்றமளிக்கும் அம்மண்ணை பாதபடிகள் தொட்டாலே பளிச் எனத் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு உறவாக நம்மோடு ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது அச்செம்மண்ணின் நிறம்;.  வீடுகளைக்கூடக் கட்டும் அளவிற்கு ஏழைகளின் சிமென்ட்டாகவும் விளங்கியது அதன் தரம். என்றபோதிலும், இத்தேரியின் ஒரு சில இடங்கள் செம்மண் அற்ற வெள்ளை நிற மண்ணையும் உள்ளடக்கியது. படர்ந்த வீதி, வீடுகளற்ற வனம்; எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த பனை மரங்கள், காற்றரிப்புத் திட்டம் என்ற பெயரில் அரசினால் நடப்பட்ட விராலிச் செடிகள் மற்றும் முந்திரி மரங்கள் என அத்தேரியின் கானகக் காட்சி கண்கொள்ளாதது. முந்திரி மரங்களைக் காக்கும் அரசுப் பணியாட்களுக்கு அத்தேரியே பணித்தளம். நாங்கள் சிறுவர்களாக அக்காட்டுப் பகுதிக்குச் செல்லும்போதெல்லாம், முந்திரி மரத்தின் பழங்களைச் சாப்பிட காவலாளிகளால் அனுமதிக்கப்பட்டோம்; ஆனால், முந்திரிக்கொட்டைகளையோ மரத்தின் அடியிலேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். ஆனால், சில நேரங்களில், முந்திரிக் கொட்டைகளைத் திருடி, சட்டைப் பைகளில் மறைத்து எடுத்துவரும்போது காவலர்களால் அடித்து விரட்டப்பட்ட நிகழ்வும் நடந்ததுண்டு. தேரிக்குப் போய்வரும் பல சிறுவர்களின் வீட்டில் முந்திரி பருப்பு சுடுவதின் வாசம் வீசும். முந்திரிக்கொட்டைகளைச் சுடும்போது, அது சீறிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடும் காட்சி இன்றும் மறக்க முடியாதது. சிறுவர்கள் நாங்கள் அதனை 'கொல்லாங் கொட்டை' என்றே சொல்வது வழக்கம். பல நேரங்களில் முந்திரியை முந்தி வெளியெ நிற்கும் அதன் கொட்டையினை மாத்திரம் அப்படியே திருகி திருடி பழங்களை மட்டும் மரத்தில் தொங்கவிட்டுவிட்டு வந்துவிடுவோம். இத்தேரியில், கௌதாரி, முயல் போன்றவைகளை வேட்டையாடும் வேடர்கள் சுற்றித் திரிவதையும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் காண முடியும்.

தேரியின் மேற்கு முனையில் விவசாயத்திற்கென நீரை சேமித்துவைக்க உருவாக்கப்பட்டதோர் குளம், இதற்கு புதுக்குளம் எனப் பெயர். வனத்திற்குள்ளே வழியாக ஆங்காங்கே ஒற்றையடிப்பாதைகள்; அதில், தலைமேல் விறகுக் கட்டுகளுடன் நடந்துவரும் ஆண்கள் மற்றும் பெண்கள்;. மாலையாகிவிட்டால் சிறார்களும் ஏன் வாலிபரும் கூட களைக்க விளையாடும் காட்சி. தேர்வு நேரங்களில் புத்தகங்களுடன் வனத்தில் பாடங்களை மனனம் செய்துகொண்டிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள்;. மனிதர்கள் இல்லாததினால் உண்டாகும் மனநிம்மதியோ! என சந்தேகிக்கும் அளவிற்கு, அந்த வனத்தில் சுற்றி நடந்தால் மௌனத்தில் மனதில் உண்டாகும் ஓர் அமைதி. குளிக்கவும் தாகம் தீர்க்கவும் தேரியின் ஒரு சில இடங்களில் மரங்களிடையே அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் அடிபம்புகள்.

ஒரு சில பராமரிக்கப்படும் தோட்டங்கள்; வனத்தில் பரவியிருக்க, மறுபுறமோ பனை ஓலையினால் வேயப்பட்ட குடில்களும் ஆங்காங்கே கண்களுக்குத் தென்படுகின்றன. ஆம், பனை மரங்கள் ஏறுகிறவர்களின் வசிப்பிடங்கள்; அவை; பனை மரங்களடங்கிய தேரியே இவர்களது பிழைப்பிடம். எனினும், செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்த்த பனை ஏறும் மக்களின் குடிசைகளை அத்தேரியில் காண்பது அரிது. நான் சிறுவனாக இருந்தபோது அதிகாலையில் எழுந்து இதுபோன்ற குடில்களுக்குச் சென்று பதனீர் வாங்கிக் குடித்த இனிப்பான நினைவு இன்றும் நீங்காதது. எலுமிச்சம் பழம், மாம்பழம் போன்றவைகளை உடன் எடுத்துச் சென்று, பனை ஓலையினால் செய்யப்பட்ட 'பட்டை' யில் ஊற்றப்படும் பதனீரில் அப்பழங்களை வெட்டி பிழிந்துவிட்டுப் பதனீர் அருந்துவதின் சுவை அலாதியானது. தேரிக்குச் செல்லும்போது, சில நேரங்களில் நான் சில்லரைகளைக் கொண்டு செல்ல மறந்துவிடுவேன்;. எனவே, இதனைச் சமாளிக்க அத்தேரியில் இருந்த ஒரு வேப்பம் மரத்தின் கீழ் குழி தோண்டி கொஞ்சம் சில்லரைகளை எப்போதும் புதைத்து வைத்திருப்பேன். காலைப் பதனீர், மாலைப் பதனீர் இவை இங்கு கிடைக்கும் இயற்கையின் பானம். எங்கள் குடும்பத்திற்கென்றும் சில பனை மரங்கள் இத்தேரியில் இருந்தன. அதில் கிடைக்கும் பதனீரை காலையிலும், மாலையிலும் பனையேறியிடமிருந்து வாங்கிக்கொண்டுவந்த ஞாபகமும் இன்னும் என் நினைவில்...

மேலும், செந்தியம்பலம் தேரிக்குள் நுழைந்ததும் கண்ணில் தென்படும் செங்கற்களால் ஆன உயாந்த சுவர், இதற்கு 'குண்டுகோட்டை' எனப் பெயர்.  காவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கும் இடம். துப்பாக்கிப் பயிற்சி முடிந்ததும், அச்சுவற்றின் அருகே கீழே விழுந்து கிடக்கும் ஈயத்தினாலான துப்பாக்கிக் குண்டுகளைப் பொறுக்கி கடையில் கொடுத்து அதனைக் காசாக்கிக்கொள்ள சிறுவர்களாயிருந்த நாங்கள் ஓடிச்செல்வொம். அதுமாத்திரமல்ல, 1916 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகள் இத்தேரியில் நடைபெற்ற ஆராய்ச்சின்போது, கிறிஸ்துவுக்கு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகளும், அவர்கள் பயன்படுத்திய கூர்மையான கற்களான ஆயுதங்களும் அகழ்வாராய்ச்சியாளர்களால் இத்தேரியில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தேரிக்கும் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலைக்கும் இடையிலேயே செந்தியம்பலம் கிராமத்திற்கு அருகாமையிலேயே தூத்துக்குடி விமான நிலையமும் அமைந்துள்ளது.

'உச்சித்தேரி' இது செந்தியம்பலம் தேரியின் உட்புறத்தின் பெயர்; ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாதது, ஆனால் வேடர்களின் கால் தடங்கள் ஆங்காங்கே காணப்படும். மரங்களைத் தவிர மனிதர்கள் நடை குறைந்த இட அது. கிராமத்தினருக்கு விறகாக பல பட்ட மரங்கள், பனை மரத்திலிருந்து விழுந்து கிடக்கும் பனை ஓலைகள், கூந்தல்கள் (பனையிலிருந்து கீழே விழுந்த முற்றாத நொங்குகள்), அலவரைகள் (ஆண் பனையிலிருந்து விழுந்தவை) மற்றும் சில்லாட்டைகள் (பனையிலிருந்து விழும் அரிப்பு போன்ற தோற்றமுடையது) இத்தேரியிலிருந்து கிராமத்தினருக்குக் கிடைக்கும் விறகுகளில் முக்கியமானவை. முள் மரங்களும், விராலிச் செடிகளும் கூட இப்பகுதியில் நிறைந்து காணப்படும். சாயர்புரத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி நகரத்திற்கு செல்லும் பாதை தொடங்கும் இடத்திலேயே இக்கிராமத்தினருக்கான கல்லறைத் தோட்டம் உள்ளது. இதுவே செந்தியம்பலத்தை ஒட்டிய தேரியின் காட்சி; இத்தேரியில் ஜெபித்து எழும்பியதே அக்கிராமத்து பல வாலிபரின் சாட்சி. 

கிராமத்தின் வட முனையில், தேரியை ஒட்டி அரசால் அமைக்கப்பட்ட நெசவுக்கூடம், அக்கிராமத்தில் பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் ஓர் இடம். கதர் ஆடைகள், சேலைகள், லுங்கிகள், கைத்துண்டுகள் என விதவிதமாக அந்த நெசவுக்கூடத்தில் துணிகள் ஆயத்தப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. வெளி ஊர்களிலிருந்தும் கொள்முதல் செய்ய கடை வியாபாரிகளின் வரத்து அதிகம் உள்ள ஓர் கூடம் அது. இந்த நெசவுக் கூடத்தின் பின்புறமுள்ள நடை பாதை 'உப்புக்காரன் பாதை' என்றே ஊராரால் அழைக்கப்பட்டது. வியாபாரிகள் பலர் அருகாமையிலுள்ள கிராமங்களுக்கு நடந்து செல்லும் பாதை அது. அதற்கு வடக்கே உள்ள தேரிப்பகுதி 'நம்மாழ்வார் தேரி' என அழைக்கப்பட்டது. இப்பெயர் இத்தேரிக்கு வரக் காரணம் எனது முன்னோர்களில் ஒருவரான நம்மாழ்வார் இங்கு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக