புதன், 10 மே, 2023

விபத்தும் விளைவும்

தினம் ஒரு மணம்

(P.J. கிருபாகரன்)

www.sinegithan.in


விபத்தும் விளைவும்


2016 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னிந்திய திருச்சபை ஒன்றின் காலை ஆராதனையில் செய்தியளிக்கும்படியாக மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். நாங்குநேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கடந்த பள்ளம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானேன்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின், பல மாதங்கள் கழித்து, எழுந்து நடமாடும் பெலன் வந்ததும், சேதப்பட்டுக் கிடந்த இருசக்கர வாகனத்தை சரிசெய்ய விரும்பினேன். என்றபோதிலும், அச்சமயம் அதற்கான பணம் இல்லாததினால், அருகிலுள்ள கடைக்கு வாகனத்தை கொண்டு சென்று, எவ்வளவு செலவாகும் என்ற தோராயமான ஒர் மதிப்பீட்டைத் தரும்படி கேட்டுக்கொண்டேன். கடை ஊழியர்களோ,  வாகனத்தை கடையில் விட்டு விட்டுச் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குள் மதிப்பீடு தருகிறோம் என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்கள் வாகனத்தின் வேலை முடிந்துவிட்டது, உடனே வந்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று மறுமுனையிலிருந்து வந்த குரலைக் கேட்டதும், அதிர்ந்துபோனேன். மதிப்பீடுதானே கேட்டிருந்தேன், வேலை செய்யும்படி நான் சொல்லவில்லையே என்றேன். 'சார், இரண்டு நாட்களாக கடையில் வாகனங்கள் பழுது பார்க்கும் வேலை அதிகம் நடைபெறவில்லை, எனவே உங்கள் வாகனத்தின் வேலையை உடனே முடித்துவிட்டோம் என்று உற்சாகமாகச் சொன்னார் கடை ஊழியர். 

கையில் காசு இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், நான் 'நிற்பது கூட பிடிக்காமல், காலை வாரி கீழே விழவைத்துதிட்டார்களே' என்று உதறத்தொடங்கிய என் உள்ளத்தின் சத்தத்தை கடைக்காரரிடம் உதடுகள் சொல்லவில்லை. என்றாலும், எவ்வளவு பணம் என்று கேட்டபோது, 11584.00 ரூபாய் என்ற அடி செவியில் விழுந்தது.

சாத்தியமே இல்லை என்பதை அறிந்துகொண்டவனாக, என்ன செய்வது? என்ற கேள்வியே மாத்திரமே மனதில் கேட்டுக்கொண்டு, வீட்டில் படுத்திருந்தேன். 

கர்த்தரின் கைவிரல் எழுத்துக்கள் ராஜாவை கலங்கப்பண்ணினது போல, கடைக்காரர் சொன்ன 11584.00 ரூபாய் என்ற வார்த்தைகள் என்னைக் கலங்கப்பண்ணினது. வாகனத்தை யாரிடமாவது விற்றுவிட்டு, அவர் தரும் தொகையினைக் கொண்டு வாகனத்தை எடுத்து வாங்குபவரிடம் கொடுத்துவிடவேண்டியதுதான் என்ற முடிவினையே என் மனம் இறுதியாக எடுத்தது.

விற்பனை செய்வதற்காக தகுந்த நபரைத் தேடிக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஆனது. கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடுமோ என யோசித்துக்கொண்டேயிருந்தேன். 

அப்போது திடீரென அயல்நாட்டிலிருந்து ஒர் தொலைபேசி வந்தது. மகளுக்குப் பிறந்தநாள், எனவே  யாராவது ஒரு ஊழியருக்கு காணிக்கை கொடுக்க நினைத்தோம், கடைசியாக உங்கள் பெயர் தான் நினைவுக்கு வந்தது, எனவே, இரண்டு நாட்களுக்கு முன் உங்களது வங்கிக் கணக்கில் 12000 ரூபாய் போட்டிருக்கிறோம், கிடைத்ததா? என்று அந்த சகோதரர் என்னிடத்தில் கேட்டபோது, ''பார்க்கவில்லை'' என பதில் சொன்னேன்.

அந்த சகோதரருடன் பேசி முடித்ததும், ATM க்குச் சென்று பார்த்தபோது, ரூபாய் 12000 எனது கணக்கில் வந்திருந்தது. அதனை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். எனது வாகனத்தை மெக்கானிக் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்து, பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுத்தார். 11584 ரூபாயை கடைக்குக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த பணத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன். 

'ஆபத்திலும் அவர் ஆயத்தம் செய்பவர் என்பதை என் மனது அன்று புரிந்து கொண்டது.'

என்றபோதிலும், விபத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நான் மீண்டும் இருசக்கர வாகனம் ஓட்டுவதை விரும்பாமல், அதை விற்றுவிட நினைத்தபோது, அது இருவரது திருமண உடன்படிக்கையை வெளிப்படுத்தும் நிச்சயதார்த்த மோதிரத்திற்குப் பதிலாக வாங்கப்பட்ட வாகனம் என்பதை அறிந்திருந்ததினால், வாகனத்தை விற்பதினால் கிடைக்கும் தொகை எனக்குச் சொந்தமானதல்ல என்பதை உணர்ந்துகொண்டபோது, வாகனத்தின் விற்பனைத் தொகையை என் கிராமத்தின் அருகில் புதுப்பிக்கப்பட்டுக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 'சர்ச் ஆப் காட்' ஆலயத்தின் பணிக்காகக் கொடுத்துவிட அர்ப்பணித்தவனாக, கீழ்க்கண்ட கடிதத்துடன் அனுப்பிவைத்தேன்.  


சபை போதகருக்கு நான் எழுதிய கடிதம்


கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் அவர்களுக்கு, 


ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இக்கடிதத்தின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் உவகையடைகிறேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான் (பிர 3:11) என்ற வார்த்தையின்படியும், அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம 8:28) என்ற வார்த்தையின்படியும் இம்மட்டும் எங்களை வழிநடத்தின யெகோவா தேவனுக்கு ஸ்தோத்திரம். 

நான் தூத்துக்குடியில் இருந்தபோது, ஊழியத்திற்காக ஓர் இருசக்கர வாகனம் தேவைப்பட்டது. நானும் எனது மனைவியும் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் இருவரின் கரங்களிலிருக்கும் மோதிரம் என் சிந்தையில் உதிக்க, எனது மனைவியிடம் அனுமதி கேட்டேன். அவளும் உடனே சரி என்று சொல்லிவிட்டாள். இரண்டு மோதிரங்களையும் கழற்றினவர்களாக, இருவரும் தூத்துக்குடியிலுள்ள ஓர் நகைக்கடைக்குச் சென்றபோது, அது எங்களது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்பதை அறிந்துகொண்ட கடைக்காரர் எங்களை நோக்கி, 'கட்டாயம் விற்கவேண்டுமா?' என்று கேட்டார். நாங்கள் இருவரும் ஒருமிக்க ஆம் இப்போது அவசியம் என்றோம். அதை கொடுத்துவிட்டு, அதன் கிரயத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம். 

2015-ம் ஆண்டு, பிரசங்கிக்கும்படியாக நான் ஒரு கிராமத்திற்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானேன். நானும் எனது மனைவியும் பலத்த காயமுற்றோம். மரணத் தருவாயில் போராடிக்கொண்டிருந்த என்னை பல மருத்துவமனைகள் சிகிச்சைக்கு ஏற்க மறுத்தன. என்றபோதிலும், கர்த்தருடைய கிருபையினால் திருநெல்வேலியில் உள்ள ஓர் மருத்துவமனையில் வாசல் திறக்க, பல நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். வீடு திரும்பினதும், அந்த வாகனத்தை விற்றுவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, 'அது இருவரின் திருமண உடன்படிக்கைக்கு உட்பட்டதாயிற்றே' என்ற எண்ணம் எனக்குள் எழ, அந்த பங்கு தேவனிடத்திலேயே சேரவேண்டும் என்று தீர்மானித்தேன். அப்போது, உங்களுடைய ஆலத்தின் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த என்னை சட்டென கர்த்தர் முடிவெடுக்கச் செய்தார். என்ன சொல்லி கொடுக்கவேண்டும்? என்ற விண்ணப்பத்திற்கு, 'என் வார்த்தை பிரசங்கம் செய்யப்படும் பீடத்திற்கென்று' என்ற உறுதி உடனே கிடைத்தது. எனவே, தயவு செய்து இதனை ஏற்றுக்கொள்ளவும். ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்படும் முன்பே இதனைக் கொடுக்க மிகவும் பிரயாசப்பட்டேன். என்றாலும், வண்டியை எடுத்த நபர் இத்தனை ஆண்டுகளாகக் கடத்திவிட்டார்; மன்னிக்கவும். 

இப்படிக்கு,

கர்த்தரின் ஊழியன்


செவ்வாய், 9 மே, 2023

'பிரியாணியும், பெரிய ஆணியும்'


www.sinegithan.in


2004-ம் ஆண்டு, பீஹாரில்,  டெஹ்ரி ஆன் சோன் நகரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலுள்ள, ஜெம்ஸ் ஊழியத்தின் பணித்தளத் தலைமையிடம் அமைந்திருக்கும்  சிக்காரியா என்னும் சிறியதோர் கிராமத்தில் திருமணம் முடிந்து மனைவியுடன் புதியதோர் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய நாட்கள் அவை. இராஜஸ்தான் மாநிலத்தில் தங்கியிருந்து, தனியார் கம்பெனியில் பணிபுரிந்த முன் அனுபவம் எனக்கு இருந்ததினால், வட இந்திய காலச்சூழ்நிலைக்கும் மற்றும் கலாச்சாரத்திற்கும் என் உடல் ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தது. எனவே, 2002 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெம்ஸ் மிஷனரி ஸ்தாபனத்தில் ஊழியனாக இணைந்து, முதன் முதலாக கருவந்தியாவிலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியிருந்த நாட்களில் பீஹாரின் தட்பவெட்ப நிலை எனக்கு புதிதாயிருக்கிவில்லை. குளிரும் வெயிலும் இராஜஸ்தானைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்டபோதிலும், தாங்குவதற்கு பெலனுடைய வயதிலிருந்த நான் அனைத்தையும் ஆனந்தமாகவே அனுபவித்தேன். எனினும், புதிதாக பீஹார் மண்ணில் காலடி எடுத்துவைத்திருந்த எனது மனைவிக்கோ பீஹாரின் தட்பவெட்பநிலை புரியாத புதிராகவே காட்சியளித்தது; என்றபோதிலும், மிஷனரியாக தன்னை அர்ப்பணித்து மிஷனரியையே மணமுடிப்பேன் என்ற மனஉறுதியிலிருந்த அவளை அது அசைக்கவில்லை. 

குடும்பத்தினர்களையும், உறவினர்களையும் மற்றும் ஊனுயிராய்ப் பழகிய நண்பர்களையும் விட்டு வந்திருக்கின்றோம் என்ற தூரத்தை குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது நாங்கள் உணர்ந்தபோதிலும், அது எங்களுக்கு துயரத்தைக் கொடுக்கவில்லை. கைபேசிகளோ அல்லது தொலைபேசிகளோ இல்லாத அந்நாட்களில் கடிதத்திற்குக் காத்திருந்ததும், நண்பர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் அவைகள் வந்துசேரும்போது கணக்கில்லாத மகிழ்ச்சியடைவதும் இன்றும் நீங்காமல் என் நெஞ்சில் நிற்கிறது, அது மறக்கஇயலாதது. ஊரிலிருந்து ஒருமுறை வரும் கடிதத்தைக்கூட பத்திரப்படுத்தி வைத்திருந்து பலமுறை வாசித்து ருசித்த அனுபவம் இன்றும் எனது நினைவினை விட்டு நீங்கவில்லை. இன்றும், இன்னமும், அவைகள் அனைத்தையும் பத்திரமாகவே பாதுகாத்துவருகின்றேன்; என்னிடம் வந்து சேர்ந்த ஒரு கடிதத்தைக் கூட என்னைத் தாண்டி குப்பைத் தொட்டிக்குக் கூளமாகச் செல்ல நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. உறவின் பசி ஒருபுறம் இருந்தாலும், ஊழியத்தின் ருசியினால் அவைகள் அனைத்தையும் அவ்வப்போது அணைக்கப் பழகிக்கொண்டோம். 

எனது மனைவி சிக்காரியாவிலிருக்கும் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் ஆசியராக மாணவர்கள் மத்தியிலும், நான் ஜெம்ஸ் மீடியாவின் வெளியீட்டுத் துறையிலும் எங்களது ஊழியத்தைத் சிறப்பாகச் செய்யத் தொடங்கினோம். சிக்காரியா பணித்தளத்தில் உடனிருந்த ஊழியர்கள் அனைவரும் எங்கள் உறவுகளாக மாற, அவர்களது பாசமும் அன்பும் அனுதினமும் எங்களை வந்து சேர, குடியிருந்த இடமே குடும்பமாகவும் மற்றும் உடனிருக்கும் உயிர்கள் அனைத்தும் எங்கள் உறவாகவும் மாற சில நாட்களே பிடித்தன. 

நாட்கள் சென்றன, ஊரிலிருந்து உறவினர் ஒருவர் வருகிறார் என்ற செய்தி திடீரென எங்கள் காதுகளை வந்து எட்டியது. கேட்ட மறுகணமே வீட்டிலிருந்த எங்களை சந்தோஷம் தொற்றிக் கொண்டது. வேறொரு ஊழியரின் வீட்டிற்கு அவர் வருவதாயிருந்தபோதிலும், நிச்சயம் எங்கள் வீட்டிற்கும் வருவார் என்ற எண்ணத்தில், அந்த நாளுக்காகக் காத்திருந்தோம்; வந்ததும் அவர்களைச் சந்தித்து எங்கள் சந்தோஷத்தைப் பறிமாமறிக்கொண்டதுடன், அவர்களுக்கு எப்படியாகிலும் ஒருநாள் சாப்பாடும் பறிமாறிவிடவேண்டுமே என்று விரும்பிய நாங்கள், வீட்டிற்கு வருகைதரவும், விருந்தினை ஏற்றுக்காள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம்; அவர்களும் உளம் நிறைந்த மகிழ்சியோடும் உற்சாகத்தோடும் ஒத்துக்கொள்ள, விருந்தளிக்கும் நாளும் நெருங்கியது. திருமணம் முடிந்து, புதுக்குடித்தனம் தொடங்கியிருக்கும் நாட்கள் அவை, நாங்கள் சமைக்கும் எதனையும் சுவைத்து உண்ண எங்கள் நாவுக்குப் பெலன் இருந்தது; ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் அன்பினால், சமையலில் அவ்வப்போது உண்டான பிழைகளும் அப்போது எங்களுக்குப் பெரிதாகத் தென்பட்டதில்லை. ஆனால், விருந்தினர் ஒருவருக்கு சமைக்கும் அளவிற்கு சமையலில் அச்சமையம் நாங்கள் தேர்ச்சி அடையாததினால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வது புதிதாக வீடு கட்டுவதற்கு அஸ்திபாரம் போடுவதுபோலிருந்தது. 

ஒருவழியாக, 'பிரியாணி' செய்து விருந்தினரை அசத்திவிடலாம் என திட்டமிட்டோம். வாங்கவேண்டிய பொருட்கள் அனைத்தையும் நான் வாங்கிக்கொண்டுவர, அடுப்பறையில் அதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்யத் தொடங்கினாள் என் மனைவி. தனியாக, நான் விரும்பும் அளவிற்கு உணவினைச் சமைக்கும் திறமை என்னிடத்திலிருந்தபோதிலும், அது விருந்துக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்த நான் அடுப்பறையிலிருந்து ஒரமாக சற்று ஒதுங்கிக்கொண்டேன். அடுப்பறையில் சமையலில் இருக்கும் மனைவிக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அறையிலிருந்த வண்ணம், அவள் கேட்க கேட்க செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். கோழிப் பிரியாணி ஒருவழியாக தன் வாசனையை வீசத் தொடங்கியது. வாசனையை நுகர்ந்ததும், 'செய்துவிட்டாள் என் மனைவி; ஜெயித்துவிட்டாள்' என்ற சந்தோஷம் என் உள்ளத்தை நிறைத்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது சென்று பிரியாணிச் சட்டியைத் திறந்து பார்த்துவிட்டு வந்தாள் என் மனைவி. இன்னமும் சற்று வேகவேண்டும் என்றாள்; கொஞ்ச நேரம் கழித்து 'அவ்வளவுதான் முடிந்துவிட்டது, மூடிவைத்திருக்கிறேன்' என்றாள். அடுப்பறையில்  நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, திறந்து பார்த்து, 'வாங்க, வாங்க, வாங்க' என்று விருந்தினரை வரவேற்றேன் நான். நலம் விசாரித்து நாலு வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்கும்போதே, சாப்பிட்டுட்டுப் பேசலாம் என்றாள் என் மனைவி. விருந்தினரை அமரச் செய்துவிட்டு, அடுப்பிலிருந்து, பிரியாணியை இறக்கி மூடியைத் திறந்த எங்களுக்கோ அதிர்ச்சி. தண்ணீர் அதிகமாகிவிட்டதினால், பக்குவத்தை இழந்து பரிதாபமாயிருந்தது பிரியாணி. எனினும், ஒருவழியாக விருந்தினரை அமரச் செய்து, பிரியாணியைப் பறிமாறிவிட்டோம். 

சாப்பிட்டு முடித்ததும், உறவுகளை விசாரித்து, ஊர்க் காரியங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென பீஹாரை நோக்கி திரும்பியது அந்த விருந்தினரின் வார்த்தைகள். பீஹார் எப்படியிருக்கிறது? இங்கு இருப்பவர்கள் எப்படியிருக்கிறார்கள்? எப்படி ஊழியம் செய்கிறீர்கள்? தட்பவெட்ப நிலையினை எப்படித் தாங்கிக்கொள்ளுகிறீர்கள்? மீண்டும் எப்பொழுது ஊருக்கு வருவீர்கள்? போன்ற கேள்விகளைத் தொடுத்து, எங்களிடம் விடைகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்த விருந்தினருக்கு, நாங்கள் வந்து சில நாட்களே ஆனபோதிலும் எங்கள் சிந்தையில் ஏறியிருந்தவைகள் அனைத்தையும் விடையாகத் தொடுத்துக் கொடுத்தோம். அச்சமையம், திடீரென அவர் எங்களை நோக்கி, 'நீங்கள் இங்கே வேலைதானே செய்கிறீர்கள்? மிஷனரியாக அர்ப்பணிக்கவில்லைதானே' என்று கேட்டதுடன், 'நீங்கள் மிஷனரியாக மாறிவிட்டால் உங்கள் சம்பளம் இங்கே குறைந்துவிடும், தனித்தனியாக இப்போது நீங்கள் வாங்கும் சம்பளம் மிஷனரியாகிவிட்டால் குடும்பத்திற்கு என ஒரு உதவித்தொகையாகவே கொடுக்கப்படும்; அதுவும், இப்போது இருவரும் நீங்கள் பெறும் சம்பளத்திற்கு மிகவும் குறைவாக இருக்கும்; எனவே, மிஷனரியாக மாறவேண்டாம், வேலை செய்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தை நடத்துங்கள்' என்று எங்களுக்கு அறிவுரை சொன்னார். பீஹாருக்கு செல்லவேண்டும் என்ற விருப்பம் எனது உள்ளத்தில் எழுந்ததும், 'மிஷனரியாகத்தான் நான் அங்கே செல்லவேண்டும்' என்ற அர்ப்பணமும் கூடவே என்னைத் தொற்றிக்கொண்டிருந்தது. அப்படியிருக்க, விருந்தினராக வந்திருக்கும் இவருக்கு இத்தனை அறிவு எப்படி கிடைத்தது? என்பது எங்களுக்கு ஒருபுறம் புதிராயிருந்தபோதிலும், ஏற்கனவே மிஷனரியாக எங்களை ஏற்றுக்கொள்ளும்படியாக ஜெம்ஸ் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த  எங்கள் தலையிலோ அந்த விருந்தினரின் வார்த்தைகள் இடி விழுந்ததைப் போல இருந்தது.

அந்த விருந்தினருக்குப் பறிமாறிய பிரியாணியின் பதம் தவறியிருந்தபோதிலும், அவரது வார்த்தைகள், 'நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது' (யோவான் 4:34) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, எங்களுடைய  பிரியாணியில் பெரிய ஆணியை அறைந்ததைப்போல இருந்தது. 

என்றபோதிலும், அந்த விருந்தினரின் வார்த்தைகள் எங்களது அர்ப்பணிப்பிற்கு அணைபோடவில்லை, காதுவரை வந்த அவரது வார்த்தைகளை காற்றோடு விட்டுவிட்டு, மிஷனரிகளாகவே கர்த்தருடைய பணியைத் தொடர்ந்தோம். 

   



 

ஞாயிறு, 7 மே, 2023

மனதைத் தொட்ட மரணம்

 மனதைத் தொட்ட மரணம்


ஒரு மாலைப் பொழுது, கருவந்தியா பணித்தளத்தின் சிசு கல்யாண் கேந்திரா என்னும் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில், ஒரு சிறுமி சுகவீனமாயிருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்றேன். அதுவரை நன்றாக விiளாடிக்கொண்டும் மற்றும் சக நண்பிகளோடு பேசிக்கொண்டும் இருந்த சிறுமிக்கு, உணவு அருந்தும் வேளையின்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டதை அங்குள்ள ஊழியர்கள் சொல்லக் கேட்டறிந்தேன். சிகிச்சைக்காக சிக்காரியா பணித்தளத்திலிருக்கும் ஜெம்ஸ் மருத்துவமனைக்கு உடனே அச்சிறுமியைக் கொண்டுசென்றாகவேண்டும் என்ற அவசரத்தில், தொழிற்பயிற்சி மையத்தின் ஜீப்-ல் சிறுமியை ஏற்றியவாறு, சிக்காரியாவை நோக்கி விரைந்து ஓட்டிவந்தேன். ஆனால், பிரதான சாலையோ வாகனங்களால் ஸ்தம்பித்துக் கிடந்தது. என்ன செய்வதென்று அறியாதவனாக, சிறுமியின் உயிரை எப்படியாகிலும் காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு, சாலையை விட்டு வாகனத்தைக் கீழேயிருக்கும் மண் பாதையில் இறக்கி ஓட்டியவனாக, ஒருவழியாக இரவு சுமார் 8 மணிக்கு சிக்காரியா ஜெம்ஸ் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். சிகிக்சை தொடங்கியது, சாப்பாட்டு நேரத்தில், சக தோழிகளுடன் பேசிக்கொண்டே உணவருந்தியதால், உணவின் பெரும் பங்கு மூச்சுக் குழல் வழியாக உள்ளே சென்று அடைத்துக்கொண்டது என்பதை சிகிச்சையின்போது புரிந்துகொண்டேன் நான். 

இரவு சுமார் 9 மணி, அவசர அவசரமாக, டெஹ்ரி ஆன் சோன்-க்குச் சென்று, மருந்து ஒன்றினை வாங்கிவரும்படியாக மருத்துவர் என்னைக் கேட்டுக்கொண்டபோது, துணைக்கென்று யாரையாவது கூட்டிச் செல்லலாம் என்ற எண்ணத்துடன், மருத்துவமனைக்குப் பின்புறத்திலிருந்த வாலிபர்கள் தங்கும் பகுதிக்குச் சென்று, சகோ. ஜாண் என்ற சகோதரனின் அறைக் கதவைத் தட்டினேன். தூக்கத்திலிருந்து எழுந்து, கதவைத் திறந்து என்ன? என்று கேட்டார் என்னிடத்தில். டெஹ்ரி ஆன் சோன் வரைச் செல்லவேண்டும், கருவந்தியா இல்லத்திலிருந்த ஒரு சிறுமிக்கு உடல் நிலை சரியில்லை, இங்கே ஜெம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றோம் என்றேன் நான். அவரோ, தூக்கமாக இருக்கிறது, நீங்கள் போய்வாருங்கள் என்று எனக்கு விடைகொடுத்தனுப்பினார். பரிதாபத்துடன் அவரை விட்டுப் பிரிந்து சென்று, தனியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு டெஹ்ரி ஆன் சோன் சென்று மருந்தினை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். சிறுமியின் அருகிலேயே நின்றுகொண்டு சிகிச்சையைக் கவனித்துக்கொண்டிருந்தேன், என்றாலும் சிகிச்சை பலனின்று அவளது மரணத்தைத்தான் கண்ணால் காண நேரிட்டது. மறுநாள் சிக்காரியாவில் நடைபெற்ற அடக்க ஆராதனையில், அவளது உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் கல்லறைத் தோட்டத்திற்கு நானே ஓட்டிக்கொண்டு சென்றேன். இறுக்கமான மனதுடன், கல்லறையில் அச்சிறுமியை வைத்துவிட்டு கருவந்தியா திரும்பினேன்.  


குலை நடுங்கும் கொலையும், வலியுடன் விளம்பரமும்

 குலை நடுங்கும் கொலையும்,

வலியுடன் விளம்பரமும்


குலை நடுங்கும் கொலை

அது ஒரு இரவு நேரம், வீட்டினுள் மின்சாரம் இல்லாததினால், அருகிலிருந்த கோழிப் பண்ணையின் மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்திருந்தேன் நான். நள்ளிரவு, திடீரென யாரோ கூச்சலிடும் சத்தம் கேட்க, எழுந்து பார்த்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. கூச்சல் சத்தம் வரும் திசையோ முழுவதும் இருளாயிருந்தது. காலையில் எழுந்து விசாரித்தபோது, யாரோ கொலை செய்யப்பட்டு விட்ட செய்தி எனது காதுகளில் விழுந்தது; அப்போது, இந்த இடம் இத்தனை பயங்கரமானதா? என்ற கேள்வியும் என் மனதில் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவ்வப்போது, ஜாதிச் சண்டைகளையும், குடித்துவிட்டு அவ்வழியாய்ச் செல்லும் மனிதர்களின் சண்டைகளையும் கண்டபோது, மாற்றத்தை ஏற்படுத்தவே இங்கே வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டேன் நான்.

திருடர்களின் பயமும் அங்கே நிறைந்து காணப்பட்டது, தீவிரவாதிகளின் போக்குவரவும் அப்போது அங்கே அதிகரித்திருந்தது. இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, டார்ச் அடிக்கக்கூடாது என்று எனக்கு அப்போது அங்கிருந்த சிலர் ஆலோசனை அளித்திருந்தனர். அவ்வாறு, டார்ச் அடித்துக்கொண்டு சென்றால், யாரோ செல்லுகிறார்கள் என்று அடையாளம் கண்டுகொண்டு, அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் வந்துவிடுவார்கள் என்பதே அதற்குக் காரணம். ஒருமுறை சிக்காரியாவிலிருந்து கருவந்தியா சென்ற நான், ஆட்டோவிலிருந்து சாலையில் இறங்கி மாலை நேரமாகிவிட்டதினால் கையில் டார்ச் லைட் இருந்தும் அதனை அடிக்காமல், மெல்ல மெல்ல நடந்து அங்கிருந்த முட்செடிகளுக்குள் சிக்கிக்கொண்டேன்; இரவு நேரம், வெளியேற வழியும் தெரியவில்லை. டார்ச் அடித்துவிட்டால் யாராவது திருடர்கள் வந்துவிடுவார்கள், முட்செடிகளுக்குள் இருப்பதினால் ஓடவும் முடியாது என்ற நிலையில், சுமார் இரண்டு மணி நேரத்தைக் கழித்தேன். பின்னர் ஒரு வழியாத தடுமாறி காயங்களுடன் வீடு வந்து சேர்ந்தேன்; அன்று முதல், மாலை நேரங்களில் தனியாக வருவதைத் தவிர்த்துக்கொண்டேன். 

வலியுடன் விளம்பரம்

ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்திருந்த நேரம் அது, சற்று வலியுடன் வீட்டில் படுத்திருந்தேன் நான். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தைப் பற்றி விளம்பரப்படுத்தும்படியாக, அச்சடிக்கப்பட்டிருந்த துண்டுப் பிரதிகளை அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்குக் கொண்டு சென்று கொடுக்கும்படியாகக் கேட்டுக்கொண்டார் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வர் சகோதரர் ஜேசுதாசன். நான் பயன்படுத்திக்கொள்ளும்படியாக, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கொடுத்திருந்த ஸ்கூட்டரில் சென்று கொடுக்கலாமா? என்று நான் கேட்டபோது, மற்ற ஆசிரியர்களெல்லாம் சைக்கிளில்தான் செல்லுகிறார்கள்; எனவே, நீங்கள் மட்டும் ஸ்கூட்டரில் சென்றால் வித்தியாசமாயிருக்குமே என்ற அவரது ஆலோசனையின்படி, கொஞ்சம் சகித்துக்கொண்டு நானும் சைக்கிளிலேயே கிராமங்களுக்குச் சென்று துண்டுப்பிரதிகளை விநியோகித்துவிட்டு வீடு திரும்பினேன். மற்ற ஆசிரியர்கள் செல்லும்போது, நான் செல்லாமலிருக்கக்கூடாதே, என்ற வைராக்கியத்தோடு நான் எடுத்த முடிவு அது. 

ஒருமுறை, அருகிலிருந்த ஒரு கிராமத்தில் வசித்துவந்த ஓர் ஏழைக் குடும்பத்திற்கு, ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் உதவியோடு வீட்டைப் புணரமைத்துக் கொடுத்திருந்தோம். பணிகள் முடிந்த பின், கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களை தொழிற்பயிற்சி மையத்திற்குக் கொண்டுவர முதல்வர் சகோதரர் ஜேசுதாஸன் சொன்னபோது, 'ஜீப் மூலமாகவா?' என்று கேட்டேன் நான். அதற்கு அவர், இல்லை, அருலேதானே இருக்கிறது, இரண்டு மாணவர்களைக் கூட்டிக்கொண்டு, மூன்று சக்கர சைக்கிளைக் கொண்டு சென்று எடுத்துக்கொண்டுவந்துவிடுங்கள் என்று ஆலோசனை கூறினார். மாணவர்களுடன் சென்று, பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, ரயில் பாதையில் மூன்றுசக்கர சைக்கிளின் ஒரு சக்கரம் சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் போராடியும் பலனளிக்கவில்லை; அது அடிக்கடி ரயில்கள் வந்து செல்லும் பாதை என்பதை அறிந்திருந்ததினால், சைக்கிளை விட்டுவிட்டு சென்றுவிடலாம் என நாங்கள் யோசித்து, இறுதியாக எங்களால் இயன்றமட்டும் முழுபெலத்துடன் தள்ளினபோது, தேவ கிருபையினால் சைக்கிள் வெளியே வந்தது; நாங்களும் தப்பித்தோம், பொருட்களும் தப்பித்தன.   

முதல் ஓவியமும், உரிமைகளும்

முதல் ஓவியமும், உரிமைகளும் 


முதல் ஓவியம் 

விடுமுனை நாளன்று, அருகிலிருக்கும் எங்காவது சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்ற விருப்பத்துடன், கருவந்தியாவிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில், சசராம் நகரில் அமைந்திருந்த ஷெர்ஷா கல்லறைக்குச் சென்றேன். நுழைவுச் சீட்டினை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்ததும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்திருந்த அதன் காட்சி வாசலிலேயே என்னை சற்று ஸ்தம்பித்து நிற்கச் செய்தது. உள்ளே சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, அழகான அதன் சுவர்களில் எழுதப்பட்டிருந்த, பலரது காதல் மொழிகளையும் வாசித்தவனாக நடந்துகொண்டிருந்த எனது கண்களில், ஆங்காங்கே ஒளிப்பிடத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் இளஞ்ஜோடிகளும் கண்ணில் பட்டன. ஒருபுறம், சுற்றுலா ஸ்தலங்கள் இவ்வாறு கைளாளப்படுகின்றதே என்ற மனவருத்தம் உண்டானாலும், உடனே அதன் வாசலை விட்டு வெளியேறிவிடவில்லை நான். ஷெர்ஷா கல்லறை அமைந்திருந்த வளாகத்தினுள் ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தவனாக, சட்டைப் பையிலிருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்து, ஷெர்ஷா கல்லறையையும் அதைச் சுற்றியிருந்த நீர் நிலைகளையும் மற்றும் மரங்களையும் ஓவியமாகத் தீட்டத் தொடங்கினேன்; இதுவே, பீஹாரில் நான் வரைந்த முதல் ஓவியம்.  

ஊரைச் சுற்றியவை உரிமையானது

கருவந்தியா பணித்தளத்தில் நான் தங்கியிருந்த ஆரம்ப நாட்களில், வீட்டிலிருந்து தொழிற்பயிற்சி மையத்திற்குச் செல்லும்போது, வழியில் ஆங்காங்கே படுத்துக் கிடந்த மற்றும் எதிர்ப்பட்ட சில நாய்களுக்குச் சில பிஸ்கட்டுகளைக் கொடுக்கத் தொடங்கினேன்; அதைக் கண்ட அவைகள், என்னை அடையாளம் கண்டுகொண்டு, தினமும் நான் வெளியில் செல்லும்போது, பிஸ்கட் கிடைக்கும் என என்னிடத்தில் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டன. நானும் அவைகளை ஏமாற்றிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு, என்னுடைய வீட்டில் அவைகளுக்கென்று ஒரு டப்பாவில் பிஸ்கட்டுகளை வாங்கிவைத்து தினமும் அவைகளுக்குக் கொடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். தினமும் காலை சுமார் ஐந்து மணிக்கு எனது வேத வாசிப்பு மற்றும் ஜெப வேளையை முடித்ததும், என் வீட்டு வாசற்படிக்கு முன் அவைகள் அனைத்தும் ஆஜராகிவிடுவதும், பிஸ்கட்டுகளைக் கொடுத்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதும் அவைகளுக்கு வழக்கமாயிருந்தது. அதுமாத்திரமல்ல, வீட்டிலிருந்து தொழிற்பயிற்சி மையத்திற்கு தினமும் நான் நடந்து செல்லும்போதும், பாதுகாவலர்களைப் போல அவைகள் அனைத்தும் என்னைச் சுற்றியே வருவது, நண்பர்களோடு செல்லும் உணர்வைத்தான் அப்போது எனக்குக் கொடுத்தது. ஒருமுறை, நான் தொழிற்பயிற்சி மையத்தின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, ஜன்னலுக்கு வெளியே சோனி நாய் வித்தியாசமாகக் குரல் எழுப்புவதைக் கேட்டு நான் வெளியே வந்து பார்த்ததும், என்னை அழைத்துக்கொண்டு, என் இல்லத்திற்கு அருகே சென்றது சோனி. அது குட்டி போடுவதற்கு இடம் தேடித்தான் என்னைக் கூட்டிச் செல்லுகின்றது என்பதைப் புரிந்துகொண்ட நான், அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொடுத்தேன்; ஆறு குட்டிகளை ஈன்றது; அவைகளில் உயிரோடிருந்தவைகளுக்கு மிராண்டா, பெப்சி, ஸ்பிரைட் மற்றும் கொக்ககோலா என்று பெயரிட்டேன் நான். அவைகள் இன்றும் என் நினைவில் நிற்கின்றன. அவை அனைத்தும், தெரு நாய்களாக அங்கே சுற்றித் திரிபவைகள்தான்; என்றாலும், உரிமையாக என்னை அனுதினமும் தேடிவருபவைகள். பாசத்தின் மிகுதியினால், சில நேரங்களில், அழுக்குக் கால்களால் என் மீது ஏறி, ஆடைகளை அழுக்காக்கிவிடுவதும் உண்டு; என்றாலும், அது எனக்கு ஆனந்தமான அனுபவமாகவேயிருந்தது. 

ஒருமுறை, கருவந்தியாவிற்கு அருகிலிருக்கும் அமர்தலாப் வழியாக நான் வந்துகொண்டிருந்தபோது, பசியோடு தனியாகக் கிடந்த ஓர் நாய்க் குட்டியைக் கண்டு, அதனை வீட்டிற்குக் கொண்டுவந்தேன். அதற்கு 'ஜாலி' என்று பெயரிட்டு வளர்த்தேன். மற்ற நாய்களைப்  போல அதற்கு சுதந்தரம் கொடுக்காமல், வீட்டிற்குள் வைத்து வளர்த்ததினால், சற்று கண்டிப்போடு வளர்த்தேன். என்றபோதிலும், சில நாட்களுக்குப் பின், அது காணாமற்போனது. 2004-ம் ஆண்டு திருமணத்திற்குப் பின் நான், சிக்காரியா பணித்தளத்தின் ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கு மாற்றப்பட்டதினால், அதற்குப் பின் அவைகளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. 

வீட்டுச் சமையலும், மாட்டா தாத்தாவும்

 வீட்டுச் சமையலும், மாட்டா (மோர்) தாத்தாவும்


வீட்டுச் சமையல்

எங்கு சென்றாலும், கைகளால் சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த நான், கருவந்தியா பணித்தளத்திற்குச் சென்றபோதும் உடனே  வீட்டுச் சமையலுக்கான ஆயத்த வேலைகளைச் செய்தாகவேண்டும் என்ற எண்ணத்துடன், எரிவாயு இணைப்பினைப் பெற்றேன். சமையலுக்குத் தேவையான ஒரு குக்கர் மற்றும் வாணலி இவைகளை இராஜஸ்தானிலிருந்து நான் கொண்டுவந்திருந்ததால், சமையலறைக்கான பெரிய தேவைகள் என்று எதுவுமில்லை. மாலை நேரத்தில் அருகேயுள்ள அமர்தலாப்-ல் இருக்கும் மார்க்கெட்டிற்குச் சென்று தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வருவது எனது அனுதின வழக்கமாயிருந்தது; காய்கறிகளே எனது உணவில் அதிக இடத்தைப் பிடித்தன. ஒண்டியாகத்தானே இருக்கிறேன் என்ற எண்ணத்தில், ஒருநாளும் என் அடுப்பறை உறங்கியதில்லை. சில நேரங்களில், பச்சைக் காய்கறிகளுடனும், சில அவித்த முட்டைகளுடனும் ஆனந்தமாய் முடிந்தது என் காலை உணவு. சமைத்தேனா? சமைக்கவில்லையா? என்று என்னை நானே சந்தேகிக்கும் அளவிற்கு எப்போதும் சமையலறையினைச் சுத்தமாக வைத்திருக்கும் குணம், என் தாயாரிடமிருந்து எனக்குத் தொற்றிக்கொண்ட ஒன்று; அப்படித்தான் இருந்தது கருவந்தியா வீட்டின் சமையலறையும். ஒரு முறை, சிக்காரியா ஜெம்ஸ் வளாகத்திலிருந்து, எனது வீட்டிற்கு தற்செயலாக வந்திருந்த சகோதரர் மனோகரன், உங்கள் சமையலறையினை பெண்களுக்கு நிச்சயம் காட்டவேண்டும் என்று சொன்னது இன்றும் என் நினைவலைகளை விட்டு நீங்கவில்லை. 

இராஜஸ்தானில் இருந்தபோது, நான் சமைத்த முதல் சப்பாத்தியை பத்திரமாகவும் மற்றும் அலங்காரமாகவும் வீட்டினுள் வைத்திருந்தேன். 'ஜீவ அப்பம் நானே' என்றும் அதிலே எழுதிவைத்திருந்தேன். கேட்பவரிடமெல்லாம், 'இது நான் செய்த முதல் சப்பாத்தி' என்று கூறிக்கொள்ளுவேன்; என்றாலும், அந்த சப்பாத்தியின் ஆயுட்காலத்தை ஒரு எலி காலி செய்துவிட்டது. 

மாட்டா (மோர்) தாத்தா

நாட்கள் நகர்ந்தன; மாலை நேரத்தில் தங்கியிருந்த வீட்டிற்கு வெளியே சற்று உலாவும் விருப்பம் உள்ளத்தில் வந்தாலும், கல்லுடைக்கும் இயந்திரங்களினால் உண்டாகிக்கொண்டிருந்த மாசு என் விருப்பத்திற்கு விரோதியாயிருக்க, வீட்டு வாசலிலேயே, தனியே அமர்ந்தவனாக வெளிப்புறத்தையும் மற்றும் பாதையில் செல்வோரையும் பார்த்து ரசிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அது ஒரு மாலை நேரம், சுமார் 6 மணி, வெள்ளை நிறத்தைத் துறந்து மஞ்சள் நிறமாக மாறியிருந்த வேஷ்டியை மட்டுமே அரையில் கட்டியிருந்த முதியவர் ஒருவர் வேலிக்கு வெளியே நின்று என் வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது முகத் தோற்றத்தினைப் பார்த்து, ஏதோ என்னிடம் கேட்க வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டவனாக அருகில் சென்றேன் நான்.  குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்ட அவரை, என் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்து அமரச் செய்து தண்ணீர் கொடுத்தேன். சந்தோஷமாக தனது தாகத்தைத் தீர்த்துவிட்டு, தான் மேயவிட்டிருந்த எருமை மாடுகளைப் பார்த்த வண்ணம் எனது வீட்டின் வாசற்படியிலேயே அமர்ந்து சற்று இளைப்பாறி, சிரித்த முகத்துடன் விடைபெற்றுச் சென்றார். அடுத்த நாள் அதே நேரம், வீட்டு வாசலில் அமர்ந்திருந்த என்னை, மீண்டும் தேடி வந்தார் அந்த முதியவர். இன்றோ, தனது கரத்தில் ஒரு சில்வர் பாத்திரத்தை வைத்திருந்தார். ஒருவேளை, இன்று குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவந்துவிட்டாரோ, அல்லது கையிலிருக்கும் பாத்திரத்தில் தண்ணீர் கேட்க வருகிறாரோ? என்று நினைத்துக்கொண்டிருந்தேன் நான். அருகில் வந்ததும், என்னுடைய கரங்களில் அவர் அந்தப் பாத்திரத்தைக் கொடுத்தபோது, ஏன்? எதற்கு? என்று புரியாதவனாக அதனை வாங்கித் திறந்து பார்த்தபோது, அந்தப் பாத்திரத்தில் மோர் நிறைந்திருந்தது. உங்களுக்குத் தான் ஊற்றிவிட்டுத் தாருங்கள் என்ற அவரது அன்பு கலந்த வார்த்தைகள் அவர் என் மீது காட்டின பாசத்தை பிரதிபலித்தது. கருவந்தியா பணித்தளத்தில் நான் இருந்தவரை, மாலையில் அந்த முதியவரைத்தான் தேடியது என் முகம். ஒரு நாள் தாகத்தைத் தீர்த்ததற்கு, தினமும் பிரதிபலன் செய்த முதியவர் அவர். ஹிந்தி மொழியில் 'மோர்' என்பதற்கு 'மாட்டா' என்பதால், அவரை 'மாட்டா தாத்தா' என்று அழைப்பதே என் வழக்கமாயிருந்தது. 

தொழிற்பயிற்சி மையத்தில் ஒரு தொடக்கம்

 தொழிற்பயிற்சி மையத்தில் ஒரு தொடக்கம்



ஒரு வழியாக அன்றைய இரவினைக் கழித்துவிட்டு, டிசம்பர் 6, 2002 காலையில் எழுந்து அந்த நாளுக்காக ஆயத்தமானேன். பக்கத்து வீட்டிலிருந்து பறிமாறப்பட்ட காலை உணவினை உண்டு முடித்து, ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தைச் சென்றடைந்தேன். அப்போது ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாஸன் என்னை அன்புடன் வரவேற்று, என்னை விசாரித்து, தொழிற்பயிற்சி மையத்தில் எனக்கான பணியினையும் விவரித்துச் சொன்னார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக ஆரம்பமானது எனது மிஷனரிப் பணி. ஆசிரியர் பணியில் ஆவல் அதிகமுள்ள எனக்கு, மாணவர்களைக் கண்டதும் மனம் நிறைந்திருந்தது. எனினும், ஹிந்தி மொழியினை நான் அறியாதிருந்ததது, மாணவர்களோடு ஒன்றுவிட்டு உரையாட முட்டுக்கட்டையாவேயிருந்தது. ஆங்கிலத்திலேயே அங்கிருந்தவர்களோடு முடிந்தவரை காரியங்களைப் பகிர்ந்துகொள்ள முயற்சித்தேன்; எனினும், அது அந்நிய மொழி என்பதை அவர்களது முகங்கள் என்னிடம் சொல்லிக்கொண்டேயிருந்தன. தொழிற் பயிற்சி மையத்தில் உடன் பணியாற்றிக்கொண்டிருந்த பீஹார் மாநிலத்தின் ஆசிரியர்களைப் புரிந்துகொள்ளவும் சற்று கால அவகாசம் எடுத்தது எனக்கு; எனினும், தேவனது கிருபையினால் சீக்கிரத்தில் அது சாத்தியமாயிற்று. ஆசிரியர்களோடு மாத்திரமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களுடனும் உரையாடி உரையாடி ஹிந்தி மொழியினைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன் நான். மாணவர்களைக் கையாள்வதில் விருப்பமும் ஆர்வமும் என்றும் எனக்கு விலகாதது; எனவே, மாணவர்களை வசப்படுத்திக்கொள்வது என்பது எனக்கு கடினமாயிருக்கவில்லை. ஒவ்வொரு நாள் வருப்பறையிலும், பாடங்களைத் தெடங்குவதற்கு முன், மாணவர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற பாதைகளைக் காட்டும் சில சிந்தனைக்குரிய காரியங்களைச் சொல்லிவிட்டுத் தொடங்குவது மாணவர்களை என்பக்கம் ஈர்த்திருந்தது; சுவிசேஷத்தின் சாற்றினையும் அவர்கள் உள்ளத்தில் ஊற்ற அது அவர்களது உள்ளத்தை ஈரமாக்கியது. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களுடனான ஐக்கியமும் என்னை அவர்களுள் ஒருவனாக்கிற்று. இதனால், மாணவர்கள் சிலரின் குடும்பத்தில் ஒருவனாகவும் மற்றும் உடன்பிறந்த மூத்த சகோதரனாகவும் நான் எண்ணபட்டது ஆண்டவரால் அருளப்பட்ட பாக்கியம். ஒருமுறை, வெளியூரிலிருந்து இரவு நான் கருவந்தியா வந்தபோது, மாணவர்களில் சிலர் ரயில் நிலையத்திற்கு வந்து என்னை அழைத்துச் சென்று, அவர்கள் சமைத்துவைத்திருந்த உணவினைப் பரிமாறி, என்னோடு கூட ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிகழ்வு நினைவினை விட்டு இன்னமும் நீங்காதது.

கருவந்தியா ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் நான் பணியாற்றிய நாட்களில், உடன் பணியாற்றிய ஆசிரியர்களும் மற்றும் உள்ளே பயின்ற மாணவர்களுமே அப்போது எனக்குக் கிடைத்த உறவினர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதும், அன்பினைப் பரிமாறிக்கொள்வதும், அவர்களை விசாரிப்பதும் மற்றும் என்னால் இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் அவர்களுக்கு அளிப்பதை அவ்வப்போது நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்; உள்ளூர்வாசிகளான அவர்களிடமிருந்தும் அநேக உதவிகளையும் ஒத்தாசைகளையும் அங்கிருந்த நாட்களில் அன்புடன் நான் பெற்று அனுபவித்தது மறக்க இயலாதது. கிராமவாசிகளான அவர்களுடன் உரையாட ஆரம்ப நாட்களில் என் உதடுகளில் மொழி இல்லை; என்ற போதிலும், "அன்பிற்கு அடைக்கும் தாழ் உண்டோ" என்ற வழக்கின்படி, என் இல்லத்திற்கும் அவர்கள் இல்லத்திற்கும் இடையிலான போக்குவரத்தும் மற்றும் போஜனமும் அவ்வப்போது தொடர்ந்துகொண்டிருந்தன. இதனால், தமிழகத்தை விட்டு பிஹாரில் இத்தனை தூரத்தில் இருக்கிறோமே என்ற தனிமை உணர்வு தகர்ந்துபோனது.