வெள்ளி, 6 மே, 2022

ஊழிய அழைப்பு

ஊழிய அழைப்பு


ஒருமுறை, டிசம்பர் மாத இறுதி நாட்களில்‌, சாயர்புரம்‌ வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்தில்‌ வருடாந்திர ஸ்தோத்திரக்‌ கூடுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது; முழு இரவு ஜெப ஐக்கியத்தின்‌ சகோதரர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ அக்கூடுகைக்கு வருகைதந்திருந்தனர்‌. சாயர்புரம்‌ ஏற்காட்டுத்‌ தெருவில்‌ அச்சமயம்‌ இருந்த முழு இரவு ஜெப ஐக்கியத்தின்‌ அலுவலகத்தின்‌ கீழ்த்‌ தளத்தில்‌ அமைந்திருந்த அறை ஒன்றில், வட்டமாக சகோதரர்கள்‌ அனைவரும்‌ அமர்ந்திருந்தனர்‌. நானும்‌ அக்கூடுகையில்‌ பங்கேற்கச்‌ சென்றிருந்தேன்‌. ஆனந்தமாய்‌ பாடல்களைப்‌ பாடினோம்‌, ஆண்டவர்‌ செய்த நன்மைகளை நினைத்துத்‌ துதித்தோம்‌, வரும்‌ ஆண்டிலும்‌ அவரே வழி நடத்தவேண்டும்‌ என்ற தாகத்துடன்‌ அவர்‌ மேலேயே விழியினை வைத்தவாறு ஜெபத்தில்‌ தரித்திருந்தோம்‌. ஒன்றிரண்டு பாடல்களுக்கு இடையில்‌, ஆவிக்குரிய வாழ்க்கையிலும்‌, குடும்ப வாழ்க்கையிலும்‌, தனி வாழ்விலும்‌ கர்த்தர்‌ செய்த அற்புதங்களையும்‌, நன்மைகளையும்‌ சகோதரர்கள்‌ சாட்சியாக சொல்லிக்கொண்டிருந்தனர்‌. அத்துடன்‌, ஜெப வேளையின்போது, ஆவியானவர்‌ வெளிப்படுத்தும்‌ வேதபகுதிகளையும்‌, தீர்க்கதரிசனங்களையும்‌, எச்சரிப்பின்‌ வார்த்தைகளையும்‌ மூத்த சகோதரர்கள்‌ இடையிடையே பகிர்ந்துகொண்டனர்‌. அப்போது, செபத்தையாபுரத்தைச்‌ சேர்ந்த சகோதரர்‌ ஜீவா எழுந்து நின்று. அங்கிருந்த சகோதரர்கள்‌ ஒவ்வொருவரைக்‌ குறித்தும்‌ கர்த்தர்‌ வெளிப்படுத்தும்‌ காரியங்களைச்‌ தீர்க்கதரிசனமாகச்‌ சொல்லத்‌ தொடங்கினார்‌. பலரைக்‌ குறித்து அவர்‌ சொல்லிக்கொண்டுவந்ததை நான்‌ கேட்டுக்கொண்டிருந்த வேளையில்‌, “சுந்தர்‌, உன்னை ஊழியத்திற்கென்று நான்‌ தெரிந்துகொண்டேன்‌. என்‌ நாமத்தை அறிவிப்பதற்காக உன்னைத்‌ தெரிந்துகொண்டேன்‌, தைரியமாயிரு, என்‌ பணியை நிறைவேற்று, ஏற்ற நாட்கள்‌ வரும்போது அதனைச்‌ செய்யத்‌ தொடங்கு” என்று சொன்னார்‌. 

அந்தக்‌ கூடுகைக்கு செல்வதற்கு முன்னரே நான்‌ ஊழியத்திற்கென்று என்னை ஒப்புத்கொடுத்திருந்தேன்‌, என்றபோதிலும்‌, கர்த்தர்‌ யார்‌ முலமாகவாவது அதனை இன்னொரு முறை உறுதிப்படுத்தட்டும்‌ எனக்‌ காத்திருந்தேன்‌. அந்த உறுதிப்பாடு அன்று சகோதரர்‌ ஜீவா அவர்களின்‌ மூலமாக வந்தது. இப்படியாக, சாயர்புர முழு இரவு ஜெப ஐக்கியத்துடன்‌ அன்று தொடங்கிய உறவு, இன்றும்‌ நண்பர்கள்‌ ஜெப ஐக்கியத்திற்குத்‌ தொடர்கிறது. இந்நாட்களிலும்‌ நண்பர்கள்‌ ஜெப ஜக்கியத்தின்‌ நண்பர்கள்‌ தவறாமல்‌ முழு இரவு ஜெபங்களில்‌ பங்கேற்றுவருகின்றனர்‌.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக