சுவிசேஷகர்களாகிய நண்பர்கள்
சாயர்புரத்தை ஒட்டிய கிராமங்கள் எங்கும் சுவிசேஷத்தை அறிவித்துவிடவேண்டும் என்ற ஆவலில் நண்பர்களாக முனைப்புடன் செயல்படத் தொடங்கியபோது, எதிர்ப்புகள் பல வந்தாலும் ஜெபக்குழு வாலிபர்கள் ஊழியத்திற்கு அவைகள் முட்டுக்கட்டைகளாகிவிடவில்லை. எதிர்ப்புகள் நண்பர்கள் நெஞ்சில் வீரத்தையும், வைராக்கியத்தையும் உருவாக்கியதால் தெரு பிரசங்கங்களும், சுவிசேஷப் பணிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. சாயர்புரத்திலிருந்து வாகைக்குளம் செல்லும் வழியில் உள்ள முடிவைத்தானேந்தல் என்ற ஊரில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஓர் குடும்பத்தினர் வசித்துவந்தனர். கிருபையின் ஊழியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அக்குடும்பத்தினரின் வீட்டில் வாராந்திர ஜெபக்கூடுகையினை நடத்திவந்தனர். வைராக்கியமான பாரம்பரிய பரம்பரை இந்து மக்களால் நிறைந்திருந்த அவ்வூரில் அக்குடும்பத்தினர் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக ஜீவியம் செய்துவந்தனர்; ஆவிக்குரிய சபையின் ஆராதனைகளிலும் பங்கேற்றுவந்தனர். இக்குடும்பத்தில் நடைபெற்ற வாராந்திர ஜெபக்கூடுகையில் கிருபையின் ஊழிய ஊழியர்களோடு செந்தியம்பலம் ஜெபக்குழுவின் நண்பர்களும் உடன் சென்று ஜெபக்கூடுகையில் உதவி வந்தனர். ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் செந்தியம்பலம் ஜெபக்குழு வாலிபர்களே அந்த வீட்டின் ஜெபக்கூடுகையினை முழுப் பொறுப்பேற்று தொடர்ந்து நடத்தி வந்தனர். பள்ளி நாட்களில் ஜெபக்குழு நண்பர்களுடன் பயின்ற அவ்வூரைச் சேர்ந்த சில மாணவர்களின் உறவும் அக்கிராமத்தில் கிடைத்தது. பல கிறிஸ்தவ கூட்டங்களை நடத்தியபோது ஊழியர்கள் பலர் அக்கிராமத்தில் எதிர்ப்புகளைச் சந்தித்திருந்தபோதிலும், ஜெபக்குழு நண்பர்கள் அத்தகைய எதிர்ப்புகள் எதனையும் எதிர்கொள்ளவில்லை.
வீட்டு ஜெபக்கூட்டங்களில் ஆவல் கொண்ட நமது ஜெபக்குழு நண்பர்கள், செந்தியம்பலம் கிராமத்திலும் வீட்டுக் கூடுகைகளைத் தொடங்கினர். ஜெபக்குழு நண்பர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் ஜெபக்கூடுகைகளை மாதம் ஒருமுறை நடத்தத் திட்டமிட்டனர். வீட்டு ஜெபக் கூடுகை தொடங்கியது; பெற்றோரும், உற்றாரும், மற்றோரும் ஜெபக்குழு நண்பர்களை அறிந்துகொள்ள இக்கூடுகை வழிவகுத்தது. ஜெபக்குழு வாலிபர்களே பாடல் பாடி, ஆராதனையினை நடத்தி, செய்தியும் வழங்கிவந்தனர். செந்தியம்பலம் கிராமத்தில் பல குடும்பங்களில் ஜெபக்குழுவின் மூலம் மகிழ்ச்சி உண்டானது. நண்பர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் கூடுகைகளை நடத்துவதைக் கண்ட மற்றோரும், அண்டை வீட்டாரும், தங்கள் வீடுகளிலும் ஜெபக்கூடுகை நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். தேரியில் பலரின் கண்களுக்குத் தென்படாதிருந்த ஜெபக்குழு ஊருக்குள் உலாவரத் தொடங்கியது; உன்னதருக்கு மகிமை பெருகியது. செந்தியம்பலத்தின் வடபகுதியில் உள்ள நம்மாழ்வார் குடியிருப்பில் உள்ள ஓர் குடும்பம் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தங்கள் வீட்டில் ஜெபக்கூடுகையினை நடத்தும்படி கேட்டுக்கொண்டதற்கு இசைந்து, நம்மாழ்வார் குடியிருப்பில் வாராந்திர ஜெபக்கூடுகை தொடங்கியது. அக்குடியிருப்பில் ஐம்பது வீடுகள் இருந்தன; அங்கிருந்த பலர் அந்த கூடுகையில் பங்கேற்றதுடன், தங்கள் வீடுகளிலும் கூடுகையினை நடத்தும்படி கேட்டுக்கொண்டனர்.
அந்நாட்களில், செந்தியம்பலத்தில் உள்ள ஓர் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் ஜெபக்கூடுகையை நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். ஜெபக்குழு வாலிபர்கள் அதற்கு ஒத்துக்கொண்டபோதிலும், கிறிஸ்துவுக்கு விரோதமான காரியங்களைச் செய்துவரும் அக்குடும்பத்தினர் எப்படி ஜெபக்குழு வாலிபர்களை ஜெபக்கூட்டம் நடத்தும்படி அழைத்தனர் என்று மனதில் கேள்வியோடு இருந்தனர். ஜெபக்கூடுகைக்கான நாள் குறிக்கப்பட்டது; சில வாலிபர்களின் பெற்றோர்கள், அக்குடும்பத்தினர் ஏன் உங்களை அழைத்தார்கள் என்று ஜெபக்குழு வாலிபர்களைக் கேட்கத்தொடங்கினர். ஜெபக்குழு வாலிபர்களோ எதையும் குறித்து கவலைகொள்ளாதவர்களாக, 'தேவன் எங்களோடு, மாம்சமான, இருளான யாதொன்றும் எங்களை அணுகுவதில்லை' என்ற எண்ணத்துடனிருந்தனர். அந்த கூடுகையில் செய்தியளிக்கும்படியாக ஜெபக்குழு வாலிபன் ஒருவன் தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருந்தான். அந்த வீட்டில் ஜெபக்குழு நடக்கும் அன்று காலையில் செய்திகொடுக்கவிருந்த அந்த வாலிபன் பிற வாலிபர்களை நோக்கி, 'நான் செய்தியளிக்கும்படி ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன், அதற்காக ஊக்கமாக ஜெபித்துவிட்டு நேற்று இரவு நித்திரை செய்துகொண்டிருந்தபோது, செய்தியளிக்கும் நேரத்தில் என் நாவு வாயோடு ஒட்டிக்கொள்வதைப் போல சொப்பனம் கண்டேன், எனவே உங்களில் யாராவது இந்த வீட்டில் செய்தியினைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்று சொன்னார். அவனது வார்த்தைகளை ஜெபக்குழு நண்பர்கள் உள்வாங்கிக்கொள்வதற்குத் தயங்கினர்; நீயே செய்தி கொடு என்று அந்த வாலிபனை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டபோதிலும், அந்த வாலிபன் தொடர்ந்து மறுத்தபோது, வேறோரு வாலிபன் தான் செய்தியளிப்பதாக ஒத்துக்கொண்டான். மாலை சுமார் 6.30 மணிக்கு அந்த வீட்டில் ஜெபக்கூடுகை தொடங்கியது. பாடல்களைத் தொடர்ந்து, ஆராதனையினை ஆனந்தமாக நடத்தி முடித்தனர் வாலிபர்கள்; தொடர்ந்து செய்தி பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடும்பத்தினருக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. திட்டமிட்டபடியும், தீர்மானித்திருந்தபடியும் ஜெபக்கூடுகை சிறப்பாக நிறைவுற்றது. அந்த குடும்பத்தினர் ஆயத்தம் செய்துவைத்திருந்த இனிப்புகளையும், தேனீரையும் ஜெபக்குழு நண்பர்களுக்குக் கொடுத்தனர். கூடுகை இன்பமாகவும் இனிதாகவும் நிறைவுற்றது, தேவ நாமமும் மகிமைப்பட்டது.
கிறிஸ்துவின் வசனத்தை கிராமங்களில் அறிவிக்கவேண்டும் என்று வைராக்கியம் கொண்ட நாங்கள் மற்றுமொரு வழியைத் தெரிந்தெடுத்தோம். அந்நாட்களில் மிகக் குறைவான வீடுகளிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தன. எனவே, கிறிஸ்தவ ஊழியர்கள் பலரின் செய்திகளையும், கிறிஸ்தவப் படங்களையும் மாதம் ஒரு முறை இரவு 8 மணிக்கு தெருக்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் மூலமாகக் காண்பிக்கத் திட்டமிட்டோம். ஜனங்கள் ஆவலுடன் தெருக்களில் கூடிவந்து ஒன்றாக அமர்ந்து, ஒவ்வொரு மாதமும் காண்பிக்கப்படும் செய்தியினைக் ஆவலுடன் கேட்டுவந்தனர். பல ஊழியர்களின் தேவ வார்த்தைகளைக் கேட்கும் அரியதோர் வாய்ப்பு செந்தியம்பலம் கிராமத்தினருக்குக் கிடைத்தது. இவ்வூழியத்தினை ஜெபத்தோடும் உற்சாகத்தோடும் ஜெபக்குழு வாலிபர்கள் செய்துவந்தனர். வீட்டுக் கூடுகைகளும், தெருக்களில் செய்யப்பட்ட தொலைக்காட்சி ஊழியங்களும் ஜெபக்குழு நண்பர்களை கிராமத்தில் அனைவோரும் ஏற்றுக்கொள்ள வழி வகுத்தனர். குடும்பத்தினர் பலர் தங்கள் ஜெப தேவைகளை ஜெபக்குழு நண்பர்களிடம் சொல்லிவந்தனர்; இத்தகைய ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபக்கூடுகைகளிலும், முழு இரவு ஜெபங்களிலும், உபவாசக் கூடுகைகளிலும் ஜெபக்குழு நண்பர்கள் பாரத்துடன் ஜெபித்து வந்தனர். ஆங்காங்கே எதிர்ப்புகள் முளைத்தெழும்பியபோதிலும், வாலிபர்களின் பணி வளர்சியடைந்துகொண்டே சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக