மேல்நிலைப் பள்ளி நாட்கள்
செந்தியம்பலத்திலும், அண்டை கிராமங்களிலும் உள்ள வாலிபர்கள் சிலரின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கி அவர்களை கிறிஸ்துவுக்குள் நடத்திவந்த சகோதரர் நெப்போலியன் ஊழியத்தின் நிமித்தம் வேறு இடத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த இடத்தை கிருபையின் ஊழியத்தில் தன்னார்வமாக தன்னை இணைத்துக்கொண்டு பணிசெய்துவந்த சாயர்புரம் திரு.மணிராஜபாண்டியன் அவர்களது மகன் சகோதரர் ஐசக் நிரப்பினார். அதனைத் தொடர்ந்து, கிருபையின் ஊழியத்தின் முழு நேர ஊழியராகப் பணி செய்த சகோதரர் பொன்னாச்சிநாதன் ஜெபக்குழுவை பொறுப்பெடுத்தார். சகோதரர் பொன்னாச்சிநாதன் சாயர்புரத்திற்கு அருகாமையிலுள்ள பண்ணைவிளையில் தங்கி செந்தியம்பலம் உட்பட பல கிராமங்களின் வாலிபர் ஜெபக்குழுக்களைச் சந்தித்துவந்தார். அனைவருடனும் அன்பாக சிரித்துப் பழகும் சுபாவமுடையவர் அவர்.
அந்நாட்களில், தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்திலுள்ள போப் நினைவு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவுசெய்ததைத் தொடர்ந்து, என்னோடு பயின்ற மாணவ நண்பர்களில் சிலர் தொழிற்பயிற்சி மையத்திலும், தொழிற்நுட்பக் கல்லூரியிலும் தங்களது மேற்படிப்பினைத் தொடர பல்வேறு இடங்களுக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தனர். எனக்கும் தொழிற்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பயில ஆசை உண்டானது; என்றபோதிலும், என்னுடைய தந்தை என்னைக் குறித்து மேலான சில திட்டங்களை மனதில் வைத்திருந்ததினாலும், பன்னிரெண்டாம் வகுப்பினை முடித்துவிட்டால் மருத்துவம் உட்பட பல்வேறு மேற்படிப்புகளுக்குச் செல்லமுடியும் என்று நினைத்ததினாலும், பதினோராம் வகுப்பில் சேரும்படியாக எனக்கு ஆலோசனை கூறினார். தந்தையின் வார்த்தைக்கு இணங்கினவனாக பதினோராம் வகுப்பில் சேர நான் ஒத்துக்கொண்டபோதிலும், பதினோராம் வகுப்பில் 'பொறியியல் வகுப்பில்' சேர்ந்து பயில தந்தையிடம் விருப்பம் தெரிவித்தேன். ஆனால், எனது தந்தையோ, 'அதில் சேர்ந்து பயின்றால், எல்லா மேற்படிப்பிற்கும் நீ செல்லமுடியாது' என்று எனது கோரிக்கையை நிராகரித்து, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் அடங்கிய முதல் குரூப்பில் சேர்த்துவிட்டார். தந்தையின் வார்த்தையை தட்டுவதற்குப் பெலனில்லாத நாட்கள் அவை; வேறு வழியின்றி, பதினோராம் வகுப்பில் முதல் குரூப்பில் எனது மேல்நிலைப் பள்ளி நாட்களைத் தொடர்ந்தேன். விருப்பமில்லாததினால் பாடங்களின் மீது என்னால் அதிக கவனம் செலுத்துவது இயலாததாயிருந்தது. இடைத்தேர்வு, அரையாண்டு மற்றும் பிற தேர்வுகளில் ஒற்றை இலக்கங்களிலேயே மதிப்பெண்களைப் பெறத்தொடங்கினேன். எனது தந்தையும் அதே பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்ததினால், என்னுடைய நிலையைக் கண்டு மிகவும் கவலைப்படத் தொடங்கினார். இறுதித் தேர்விற்கான நாட்கள் வந்தன; என்னால் இயன்ற அளவு முயற்சி செய்து பாடங்களைப் படித்து தேர்வினை ஒருவழியாக எழுதி முடித்தேன்.
பன்னிரெண்டாம் வகுப்பினை முடித்து தேர்வு முடிவிற்காகக் காத்திருந்தேன். நெஞ்சையோ பயம் சூழ்ந்திருந்தது. முடிவு செய்தித்தாளில் வருவதற்கு முன்னரே, தேர்வில் தேர்ச்சி பெறுவோமா மாட்டோமா என்று அறிய நானும் எனது நண்பர்கள் இருவரும் முற்பட்டோம். செந்தியம்பலம் கிராமத்திற்கு அருகே இருக்கும் லூக்காபுரம் கிராமத்தில் அப்போது குறி சொல்லிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குச் சென்றோம். அது ஒரு செவ்வாய் கிழமை இரவு ஏழு மணி. அந்தப் பெண்ணின் வீட்டின் வாசலில் நின்றுகொண்டு நண்பர்களாக மூவரும் உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்தோம். கூட்டமாக ஜனங்கள் உட்கார்ந்திருந்தனர்; அவர்களுக்கு அந்தப் பெண் குறி சொல்லிக்கொண்டிருந்தார். உள்ளே சென்றதும் என்ன செய்யவேண்டும் என்று அறிய முற்பட்டோம். நாங்கள் நின்றுகொண்டிருந்தபோது எங்களைத் தாண்டி உள்ளே நுழைந்த ஒருவரிடம் விபரங்களைக் கேட்டோம். அவர் எங்களிடம், நீங்கள் உள்ளே நுழைந்ததும் அந்த மாதா படத்திற்கு முன்னால் மெழுகுவர்த்தியைக் கொழுத்தி வைத்துவிட்டு உட்கார்ந்துகொள்ளுங்கள் அந்தப் பெண் உங்களைக் கூப்பிட்டுக் கேட்பார் என்று சொன்னார். எனக்குத் தெரிந்த யாராவது உள்ளே இருப்பார்களோ என்ற பயம் ஒருபுறம் என்னைச் சூழ்ந்திருந்தது. ஒரு வழியாக மூவரும் உள்ளே நுழைந்து மெழுகுவர்த்தியை மாதா படத்தின் முன் கொழுத்தி வைத்துவிட்டு உட்கார்ந்தோம். அங்கிருந்த மற்றவர்களிடம் கேள்விகள் பலவற்றைக் கேட்டு குறி சொல்லிக்கொண்டிருந்தார் அந்தப் பெண். தீடீரென அந்தப் பெண் எங்களை நோக்கி, 'நீங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள், என்னிடம் என்ன கேட்கவேண்டும்' என்றார். நாங்கள் மூவரும் மெதுவான குரலில், 'பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருக்கிறோம், அதில் தேர்ச்சி பெறுவோமா, மாட்டோமா என்பதை கேட்கும்படி வந்திருக்கிறோம்' என்று பதிலுரைத்தோம். சற்று நேரம் அமைதி காத்த அந்தப் பெண், பின்னர் சத்தமாக 'வினாத்தாள் இன்னும் திருத்தப்படவில்லை, திருத்திய பின்னர் சொல்லுகிறேன், தொடர்ந்து வாருங்கள்' என்று சொன்னார். நானும் எனது நண்பர்கள் இருவரும் ஒருவழியாக வெளியே வந்தோம்; பின்பு அந்தப் பெண்ணிடம் செல்லவில்லை.
தேர்வு முடிவுகள் வரும் நாள் நெருங்கியது; எனது நண்பன் ஒருவன் மாலை முரசு பத்திரிக்கையில் முடிவுகள் வந்துவிட்டன நான் புதுக்கோட்டைக்குச் சென்று செய்தித்தாளை வாங்கிக்கொண்டு வருகின்றேன் என்று சாயர்புரத்திலிருந்து சுமார் ஏழு கி.மீ தொலைவிலுள்ள புதுக்கோட்டைக்குச் சென்று செய்தித்தாளை வாங்கிக்கொண்டு திரும்பினான். நானோ, சாயர்புரம் பஜாரில் அவனுக்காக எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தேன். செய்தித்தாள் எனது கையில் கிடைத்ததும், சாயர்புரம் பஜாருக்கு அருகில் உள்ள சாதுராக் தெருவில் இருந்த வாழைத்தார் கமிஷன் கடைக்கு உள்ளே சென்று எனது எண்ணைத் தேடத் தொடங்கினேன், என்ன ஆச்சரியம் நான் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளிக்குச் சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கியபோது 1200 க்கு 575 மதிப்பெண் பெற்றிருந்தேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக