வெள்ளி, 6 மே, 2022

நடிகனும், நாடகமும்

நடிகனும், நாடகமும்


சகோதரர் நெப்போலியன் செந்தியம்பலத்தில் உள்ள வாலிபர்கள் ஜெபக்குழுவை நடத்தும்படி, கிருபையின் ஊழியத்தினால் நியமிக்கப்பட்டபோது, ஜெபக்குழுவுடன் எனக்கு தொடர்பு உண்டானது. வாலிபர்களுடன் எளிதில் பழகும் குணம் கொண்டவர் அவர். செந்தியம்பலத்தின் தேரியில் தொடர்ந்து அவர் ஜெபக்குழுவை நடத்திவந்ததுடன், கிராமத்தின் வாலிபர்கள் பலரையும் சந்திக்கத் தொடங்கினார். வாலிபர்களுடன் வாலிபனாக வாழ்ந்த அவரது வாழ்க்கை வாலிபர்கள் பலரைக் கவர்ந்தது. ஜெபக்குழுவிற்குச் செல்லாவிட்டாலும், கிராமத்தின் பல வாலிபர்கள் அவருடன் பேசி உரையாடி வந்தனர். வாலிபர்களை அவர்களது வீட்டிற்கு தேடிச் சென்று ஜெபக்குழுவிற்கு அழைத்துச் செல்வார். பல வாலிபர்கள் மறுத்தாலும், சில வாலிபர்களை அவர் கிறிஸ்துவுக்குச் சொந்தமாக்கினார். 

ஒருமுறை தெருமுனையில் நான் நின்றுகொண்டிருந்தபோது, என்னை சந்தித்த அவர், நயமாகப் பேசத் தொடங்கி ஜெபக்குழுவிற்கு என்னை அழைத்தபோது, நான் மறுத்துவிட்டேன். அடுத்த வாரம் ஜெபக்குழு நடக்கும் நாளில் அவரது பார்வையில் பட்டுவிடக்கூடாது என்று கவனமாயிருந்தேன்; எனினும், அவரைச் சந்திக்கும் நிலை உண்டானது. அவருடன் பேசுவது எனக்குப் பிடித்திருந்தது, ஆனால் அவர் அழைக்கும் இடத்தை என் மனது வெறுத்திருந்தது. சகோதரர் நெப்போலியன் வேண்டும், ஆனால் அவர் நடத்தும் ஜெபக்குழு வேண்டாம் என்ற நிலையிலேயே நான் காணப்பட்டேன். தெரு முனையில் மட்டும் அவரோடு பேசிவிட்டு, ஜெபக்குழுவிற்குச் செல்லாமல் கழன்றுவிட பல பிரயத்தனங்களைச் செய்தேன். தெருமுனை சந்திப்பு போதும் எனது வீட்டை அவர் சந்திக்கக் கூடாது என்பதற்காக, ஜெயசுந்தர் கிருபாகரன் என்ற எனது பெயரை அவர் கேட்கும்போது, 'ஜெயா' என்று சொன்னேன், மற்றொருமுறை 'கிருபாகரன்' என்று சொன்னேன். சுந்தர் என்ற பெயரிலேயே நான் வீட்டிலும் கிராமத்திலும் அறியப்பட்டிருந்தபடியால், ஜெயா என்று அவர் விசாரிக்கும்போது என்னையும் எனது வீட்டையும் கண்டுபிடிப்பது அரிதாயிருந்தது. என்றபோதிலும், என்னை அவர் தொடர்ந்து சந்தித்து பேசி வந்தார், எனது வீட்டிற்கும் வந்து பெற்றோருடன் பேசத் தொடங்கினார். அப்போது எனது தகப்பனார் 'good son' என்ற பெயரில் என்னை அழைப்பதைக் கண்டு, அவரும் 'good son' என்று கூப்பிடத் தொடங்கினார். அவருடன் தொடங்கிய உறவு என்னை ஜெபக்குழுவின் உள்ளே இழுத்தது. அவருக்காக ஜெபக்குழுவிற்குச் செல்லத் தொடங்கினேன். ஆனால், இரட்சிப்பைக் குறித்தும், அபிஷேகத்தைக் குறித்தும், பாவமன்னிப்பைக் குறித்தும் கரிசனையற்றவனாக, கவலையற்றவனாகவே ஜெபக்குழுவில் அமர்ந்திருந்தேன். என்னுடைய வாழ்க்கை ஜெபக்குழுவில் இப்படியே தொடர்ந்தது. 

வேறு வழியில்லாமல் ஜெபக்குழுவிலும் அவர் சொல்லுவதைச் செய்வது போன்று நடிக்கத் தொடங்கினேன். சக வாலிபர்களோ நான் உண்மையிலேயே ஜெபக்குழுவிற்கு வருகிற வாலிபர்களுள் ஒருவன் என எண்ணத் தொடங்கினர். இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாரும் கை உயர்த்துங்கள் என்று சொல்லும்போதும், ஆவியானவரின் அசைவாடுதலை உணர்ந்தவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று சொல்லும்போதும், நான் மெதுவாக ஓரக்கண்ணால் யாரெல்லாம் கை உயர்த்துகிறார்கள் என்பதைப் பார்ப்பேன், எனக்குத் துணையாக கை உயர்த்தாதவர்கள் யாரும் இல்லை என்ற நிலை வரும்போது நானும் உயர்த்திவிடுவேன். சில மாற்றங்கள் என்னிடத்தில் உண்டாகத் தொடங்கிய போதிலும், அக மாற்றம் எனக்குத் தூரமாயிருந்தது. 

ஒருமுறை ஜெபக்குழு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அனைத்து வாலிபர்களும் கண்களை மூடி ஜெபித்துக்கொண்டிருந்தனர். அப்போது எனக்கோ அதிர்ச்சி, நெடுநாளாக நான் பகைத்து வந்த பேசாத வாலிபன் ஒருவன் நடந்து வந்துகொண்டிருந்தான். அவன் வேறு எங்கோ செல்கிறான் ஜெபக்குழுவிற்கு அல்ல என்பதை என் மனம் அழுத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், எதிர்மறையாய் நடந்தது; அந்த வாலிபன் ஜெபக்குழுவிற்கு வந்து ஜெபித்துக்கொண்டிருந்த வாலிபர்களோடு முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினான். எனக்கோ, மிகுந்த வேதனையாகிப்போனது, இவன் எப்படி ஜெபக்குழுவிற்கு வந்தான் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. ஜெபக்குழுவில் எல்லாரையும் போல அவனும் கைகளை உயர்த்தி ஜெபித்தான், நானும் வழக்கம்போல கைகளை உயர்த்தி ஜெபித்தேன், அப்போது எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சகோதரர் நெப்போலியன், 'ஆவியானவரின் தொடுதலை உணர்ந்தவர்கள் சாட்சி சொல்லுங்கள்' என்று ஒரு குண்டை போட்டார்.  அவ்வளவுதான் எனக்கோ வியர்த்துவிட்டது. அவருடனான உறவை வளர்க்க இப்படி கஷ்டப்பட்டு நடிக்கவேண்டியதிருக்கிறதே என்று நொந்துகொண்டேன். ஒவ்வொரு வாலிபர்களும் ஒவ்வொரு விதமாக ஆவியானவர் தங்களோடு இடைபட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தனர். எனது பகைவனாயிருந்த அந்த வாலிபனும் ஆவியானவர் தன்னுடன் இடைபட்டதைச் சொன்னபோது, எனக்கு இருதயமே நின்றுவிடும்போலிருந்தது. விட்டுவிடக்கூடாது, எப்படியாகிலும், எதையாகிலும் சொல்லிவிடவேண்டும், இல்லையென்றால் வெட்கமாகிவிடும், மற்ற வாலிபர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்பதற்காக, 'ஆவியானவர் ஐஸ் மாதிரி எனது தலையில் இறங்குவதை உணர்ந்தேன்' என்று பொய் சொன்னேன். அந்த ஜெபக்குழுவின் முடிவில், அந்த வாலிபனிடம் நானாக சென்று பேசத் தொடங்கினேன். இனி பகைவர்களாக அல்ல நண்பர்களாக இருப்போம் என்பதுதான் எங்களது அப்போதைய உரையாடல். நான் பகைவனாக நினைத்த ஒருவனுடன் எனது நட்பு மலர்ந்ததை நினைத்து சந்தோஷம் கொண்டேன். பகைவர்கள் நண்பர்களானதுதான் ஜெபக்குழுவில் எனக்கு நடந்த உண்மையான முதல் நிகழ்வு. 

ஜெபக்குழு முடிந்து வீட்டிற்கு வந்த எனக்கு மிகுந்த போராட்டம், இனி இந்த ஜெபக்குழு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்பதுதான் அப்போது எனது தீர்மானமானது. ஏதோ ஒன்றைச் சொல்லி திடீரென கையை உயர்த்துங்கள் என்று ஜெபக்குழுவில் சொல்லுதை நினைத்து பயம் எனது நெஞ்சை நிறைத்திருந்தது. பல நாட்கள் ஜெபக்குழு செல்வதை நிறுத்தினேன். சகோதரரைச் சந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டேன். ஆனால், என் மனமோ எனக்குள் புழுங்கிக்கொண்டிருந்தது. மார்ச் 2, 1989 அன்று தூத்துக்குடியில் உள்ள கிருபையின் ஊழிய அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினேன், என் உண்மை நிலையை அக்கடிதத்தில் குறிப்பிட்டேன். நான் எழுதிய அந்தக் கடிதம் கிருபையின் ஊழிய மாதாந்திர பத்திரிக்கையான ஆத்தும ஆதாயகர் பத்திரிக்கையில், பின்னதாக வெளியிடப்பட்டது. மார்ச் 2, 1989 அன்று கிருபையின் ஊழிய அலுவலகத்திற்கு நான் எழுதிய கடிதம் இதோ. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக