வெள்ளி, 6 மே, 2022

சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியம்

வளர்ச்சிக்குத் துணை நின்ற 

சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியம்


ஜெபக்குழு நண்பர்களின் வளர்ச்சிக்கு மேலும் உற்ற துணையாய் மாறியதில் சாயர்புரம் முழு இரவு ஜெப வட்டார ஊழியத்திற்கும் பெரும் பங்கு உண்டு. சாயர்புரம் பகுதியில் செயல்பட்டுவந்த சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்தில், சாயர்புரம் மற்றும் அதனைச் சுற்றிய அண்டை ஊர்களைச் சேர்ந்த மூத்த சகோதரர்கள் அங்கம் வகித்தனர். மாதாந்திர முழு இரவு ஜெபம், சுவிசேஷ ஊழியம், மிஷனரிகளைத் தாங்குவது மற்றும் ஏழை ஜனங்களுக்கு உதவி செய்வது போன்ற ஊழியங்களை அவர்கள் செய்துவந்தனர். இந்த ஐக்கியத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் போப் நினைவு மேல் நிலைப் பள்ளியின் நூற்றாண்டு அரங்கத்தில் முழு இரவு ஜெபம் நடைபெற்றுவந்தது. அநேக மக்கள் வெளி ஊர்களிலிருந்தும் வாகனத்தில் வந்து இந்த முழு இரவு ஜெபத்தில் பங்கெடுத்தனர். இந்த முழு இரவு ஜெபத்தில் ஒவ்வெரு மாதமும் ஜெபக்குழுவின் நண்பர்களாகிய நாங்களும் தவறாது பங்கெடுக்கத் தொடங்கினோம்; அத்துடன், முழு இரவு ஜெபத்தின்போது தேவையான சிறு சிறு உதவிகளையும் செய்துவந்தோம். முழு இரவு ஜெபத்திற்காக ஒவ்வொரு மாதமும் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஜெபக்குழு நண்பர்களாகிய நாங்கள் எங்களை ஈடுபடுத்திக்கொண்டோம். முழு இரவு ஜெபம் நடைபெறவிருக்கும் ஒரு சில நாட்களுக்கு முன்னால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில், சுவரொட்டிகளையும், வாளியில் பசையினையும் எடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஊழியத்தின் ஒரு பகுதியை சந்தோஷமாகவும், உற்சாகத்துடனும் நிறைவேற்றிய நாட்கள் இன்றும் என் நெஞ்சினை விட்டு அகலாதவை. ஜெப ஐக்கியத்தின் நண்பர்களில் ஒருவரான சகோதரன் பாலுவும், நானும் அந்நாட்களில் அப்பணியினை எங்களுடையதாக்கிக்கொண்டு தவறாமல் செய்துவந்தோம். 

தொடக்கத்தில் முழு இரவு ஜெபங்களில் மட்டுமே பங்கேற்று வந்த நாங்கள், நாட்கள் செல்லச் செல்ல, உதவிசெய்யும் நிலைக்கு எங்களை உயர்த்திக்கொண்டோம். சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்தின் மூத்த சகோதரர்களோடு ஐக்கியம் கொள்ளும் வாய்ப்பும், நண்பர்களாக பழகும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. அவர்களது அழைப்பின் பேரில், பின் வரும் நாட்களில், மாதாந்திர முழு இரவு ஜெபங்களில் மட்டுமல்லாது, ஐக்கியத்தின் பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கினோம். அது எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் வித்திட்டது. அங்கு நடைபெற்ற அனுதின மாலை கூடுகையிலும், வாராந்திர வேதபாட வகுப்புகளிலும், மாதாந்திர உபவாசக் கூடுகையிலும் தவறாமல் பங்கேற்றுவந்தோம். ஒருமுறை உபவாசக் கூடுகையின்போது தனது மகளுடன் வந்திருந்த சகோதரர் பக்கிள்துரை, தனது மகள் வாசிக்கத் தெரியாத சிறிய வயதிலும், அவளுக்கு ஒரு வேதாகமத்தை வாங்கிக்கொடுத்து அதனை ஜெபத்திற்கும் கொண்டுவந்திருந்தார். அவளுக்கு வாசிக்கத் தெரிகிறதோ இல்லையோ, அவளுக்கென்று தனியாக ஒரு வேதாகமம் இருக்கவேண்டும், அதை அவள் சுமக்கவேண்டும் என்று சகோதரர் அன்று சொன்னது அப்படியே எனது நெஞ்சில் நின்றுவிட்டது. முழு இரவு ஜெப ஐக்கியத்தின் அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த சகோதரர் விஜய் குமார் அவர்களிடம் பழகுவதே இனிமையான அனுபவம். அத்தனையாய் உறவுக்கு உயிர்கொடுக்கும் சகோதரர் அவர். எங்களைக் காட்டிலும் மூத்த வயதுடையவராயிருந்தபோதிலும், எப்பொழுதும் தாழ்ந்தே நிற்கும் அவரது குரல் தாழ்மைக்கு மாதிரியானது. அப்படியே, சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சகோதரர் அருள் அவர்கள் செய்தியளிக்கும்போது, அவரது அமைதியான சத்தத்தில் வரும் ஆண்டவரின் வசனத்தை கேட்பதில் இருந்த சுகத்தை நான் இங்கு குறிப்பிடாமலிருக்க முடியாது. சரீரத்தில் எத்தனையோ உபாதைகள் இருந்தபோதிலும், அன்போடு பழகுபவர் அவர். மேலும், சகோ.ஜீவா, சகோ.சுந்தர் (ஸ்பிக் நகர்), சகோ.பாண்டி, சகோ.பாலசிங், சகோ.தர்மராஜ், சகோ.இம்மானுவேல் இன்னும் பல சகோதரர்களின் பெயரை நான் எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை பேருடனும், கிறிஸ்துவின் அன்பைச் சுவைக்க அத்தருணம் எங்களுக்கு ஆனந்தமான அனுபவம். 

முழு இரவு ஜெப ஐக்கியத்தின் அலுவலகத்தில், சகோ.ஜேக்கப் ராஜன் அவர்களின் தந்தை, போதகர் சாலமோன் அவர்கள் வாரம் ஒருமுறை வேதத்தைக் கற்றுக்கொடுத்துவந்தார். நாங்களும் அந்த வேத பாட வகுப்பில் தவறாமல் பங்கேற்கத் தொடங்கினோம். வேதபாட வகுப்பு எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாயிருந்தது. வேதபாட வகுப்போடு மாத்திரமல்லாமல், தனிப்பட்ட விதத்திலும் போதகர் சாலமோன் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் போதகராயிருந்த குலையன்கரிசல் சபைக்கு அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று அவருடைய வேதபாட வகுப்பில் பங்கேற்றிருக்கிறேன். போதகர் சாலமோன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் மூலமாக அநேக காரியங்களையும் நான் கற்றிருக்கிறேன். ஒருமுறை, சகோதரர் தினகரன் அவர்கள் பாடல் பாடுவது இத்தனை இன்பமான குரலிலிருப்பதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியை அவரிடத்தில் நான் கேட்டேன்; அதற்கு அவர், 'சுட்ட பானை அது, சத்தம் அப்படித்தான் இருக்கும்' என்று சுருக்கமாகப் பதிலளித்தார். ஒரு பெரிய வெள்ளிக்கிழமை அன்று செந்தியம்பலத்தில் உள்ள பரி.மாற்குவின் ஆலயத்தில் செய்தியளித்துவிட்டு, அன்று மாலை போதகர் சாலமோன் அவர்களைச் சந்தித்த நான், 'எனது செய்தி எப்படி இருந்தது?' என்று கேட்டேன், அதற்கு அவர், 'அது உனது செய்தியல்ல, தேவச் செய்தி' என்று எனது சிந்தைக்கு சரியான அஸ்திபாரமிட்டார். அவர் மூலமாகவே நான் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன். நான் ஞானஸ்நானம் எடுக்கவிருந்த அந்த நாளில், கண்ணாண்டிவிளையில் உள்ள தென்னிந்தியத் திருச்சபையின் உபவாசக் கூடுகையினை முடித்துவிட்டு, ஸ்ரீவைகுண்டத்திலுள்ள சபைக்குச் சென்றிருந்தேன். சபைக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிலர், போதகர் சாலமோன் கர்த்தருக்குள் நித்திரையடைந்துவிட்டார் என்ற செய்தியை எனக்குத் தெரிவிக்கவும் அதிர்ச்சியடைந்தேன். அதனைத் தொடர்ந்து, செந்தியம்பலம் விரைந்து அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றேன். அவரது மரணத்திற்குப் பின்னர் அவர் நின்று பிரசங்கித்த குலையன்கரிசல் சபைக்குச் சென்று செய்திகொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, அவரது எண்ணமே என்னைச் சூழ்ந்திருந்தது. சில மாதங்களுக்குப் பின்னர், சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்தின் நண்பர்களுடன் இணைந்து ஞானஸ்நானம் பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 

சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்தின் மூத்த நபராக ராஜமணி தாத்தா அவர்களே முன்னின்று காரியங்களை நடத்திவந்தார். அவருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல நாட்கள் அவரது இல்லத்திற்குச் சென்று அவருடன் அமர்ந்து பேசி பல ஆவிக்குரிய காரியங்களைக் கற்றிருக்கிறேன். வயதில் மூத்தவராக இருந்தாலும், வாலிபர்களோடு ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு வாலிபம் இருந்தது. என்னுடன் மட்டுமல்ல, எனது வீட்டாருடனும் நெருங்கிப் பழகியவர் அவர். எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டி, எங்கு கண்டாலும் தவறாமல் சுகநலம் விசாரிக்கும் குணம், என ஆவிக்குரிய தந்தையின் ஸ்தானத்தில் அவர் தன்னை வைத்து எங்களுடன் பழகிவந்தார். ஒருமுறை நான் வியாதியாயிருந்தபோது, பலமுறை என்னை வந்து பார்த்து ஜெபித்து, ஆறுதல் கூறிச் சென்றதை இன்றும் நான் மறக்கவில்லை. செந்தியம்பலம் என்ற ஒரு சிறிய கிராமத்திற்குள் இருந்த நாங்கள், கிறிஸ்துவை அறிந்த மூத்தோர் பலர் இருந்த சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்தினுள் நுழைந்தது எங்களுக்கே ஆசீர்வாதமாக அமைந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக