வெள்ளி, 6 மே, 2022

மாற்றம்

மாற்றம்



அது ஓர் மாலை நேரம், சுமார் 6.30 மணி, வழக்கமாக நடைபெறும் செந்தியம்பலம் பரி.மாற்குவின் ஆலய மாலை ஆராதனையில் பங்கேற்கச் சென்றிருந்தேன். கட்டியிருந்த லுங்கியுடன் கையில் வேதத்தையும் எடுத்துக்கொண்டு ஆலயத்தினுள் சென்று அமர்ந்தேன். ஆராதனை தொடங்க இன்னும் சுமார் ஐந்து நிமிடங்கள் இருந்தது. அப்போது, ஆலயத்தின் உள்ளே நுழைந்த சில ஜெபக்குழு வாலிபர்கள் எனது பார்வைக்கு வித்தியாசமாகத் தென்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த ஆடை அவர்களிலிருந்து என்னை வித்தியாசப்படுத்திக் காட்டியது. அதுவரை என்னுடன் அதே ஆலயத்தில் ஆராதனைகளில் பங்கெடுத்த வாலிபர்களே அவர்கள்; எனினும், அன்று அவர்கள் அனைவரும் லுங்கியைத் தவிர்த்து வெள்ளை வேஷ்டியில் ஆராதனைக்கு வந்திருந்தனர். ஒரு சில வாலிபர்கள் பேன்ட் அணிந்திருந்தனர். நான் மட்டுமே அந்த ஆராதனையில் லுங்கியுடன் அமர்ந்திருந்தேன். ஆராதனையின் தொடக்கம் முதல், முடிவு மட்டும் என் மனமும் சிந்தையும் அவர்களின் ஆடையிலேயே பதிந்திருந்தது. ஆராதனை முடிந்ததும் அவர்களின் மாற்றத்தை அறிந்துகொள்ள முற்பட்டேன். அனைவரும் ஆலய வளாகத்தை விட்டு நகர்ந்துகொண்டிருந்தனர். ஜெபக்குழு செல்லும் வாலிபர்களுள் நானும் ஒருவன்தான் எனினும் நானோ, அப்போது, காரைக்குடியில் பயின்றுகொண்டிருந்தேன். அவ்வப்போது, விடுமுறைகளில் கிராமத்திற்கு வருகை தரும் நேரங்களில் தேரியில் நடைபெறும் ஜெபக்குழுவிற்குச் சென்று கலந்துகொள்ளுவேன். இவர்களிடம் உண்டான இத்திடீர் மாற்றத்தை நான் அறியாதிருந்தேன். ஆராதனை முடிந்ததும் ஜெபக்குழு வாலிபர்களிடத்தில் நான் கேட்டபோது, 'இனி ஆலயத்திற்கு லுங்கியுடன் வரக்கூடாது என நாங்கள் தீர்மானித்திருக்கிறோம், எனவே அனைவரும் இப்படி வருகிறோம்' என்ற பதில் வந்தது. இவர்களது, ஆடையில் இருந்த அந்த திடீர் மாற்றம் அன்று என்னையும் மாற்றியது. அடுத்த நாள் முதல் நானும் அவர்களுள் ஒருவனாக ஆலயத்தின் இரவு ஆராதனைகளில் பங்கெடுக்கச் சென்றாலும், வேஷ்டியிலோ அல்லது பேன்ட் அணிந்துகொண்டோ செல்லும்படி என்னை பழக்கப்படுத்திக்கொண்டேன். 

அப்பொழுது ஜெபக்குழுவை பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்த சகோதரர் பொன்னாச்சிநாதன் பண்ணைவிளையில் ஓர் வாடகை வீட்டில் வசித்துவந்தார், ஜெபக்குழு நண்பர்களாக நாங்கள் சிலர் அவரைச் சந்திக்கும்படியாக அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தோம்.உற்சாகத்துடன் தனது இல்லத்திற்குள் எங்களை வரவேற்றார் சகோதரர். உள்ளே சென்று அமர்ந்தோம்; சற்று நேர உறையாடலுக்குப் பின்னர், டீ போடுகிறேன் என்று சமையலறைக்குள் சென்றார் சகோதரர் பொன்னாச்சிநாதன். வீட்டில் அமர்ந்திருந்த எங்களது கண்களோ சந்தோஷத்திலும், ஆச்சரியத்திலும் மிதந்தன. அப்படி என்ன பார்த்தோம் அவரது வீட்டில்? வீட்டிலுள்ள குடம், செம்பு, ஸ்டவ் என அனைத்திலும் வசனங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை சகோதரர் ஒட்டிவைத்திருந்தார். குடத்திலும், செம்பிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை முதன் முறையாகப் பார்த்த எங்களுக்கு பெருத்த சந்தோஷம். அவரது வீட்டில் யாராவது தண்ணீர் வாங்கிக் குடித்தால் கூட அந்தச் செம்பில் உள்ள வசனத்தை வாசித்துத்தான் ஆகவேண்டும். எத்தனை உயர்ந்த எண்ணம்! 

சகோதரர் பொன்னாச்சிநாதன் ஊழியத்தினிமித்தம் வேறிடத்திற்கு மாறுதலாகிச் சென்றார். அவர் ஜெபக்குழுவில் விட்டுச் சென்ற இடத்தை, பண்டாரவிளையைச் சேர்ந்த சகோதரர் செல்வராஜ் தன்னார்வமாக கிருபையின் ஊழியத்துடன் இணைந்து நிரப்பினார். சகோதரரின ; காலத்திலே ஜெபக்குழு ஒர் மறுமலர்ச்சியின் பாதையில் கடந்து சென்றது. கண்டிப்பும், கட்டுப்பாடும் சகோதரரின் இரு கண்களாயிருந்தன. ஜெபக்குழு உறுப்பினர்களுக்கு ஒர் வகுப்பறையில் இருந்த அனுபவம் கிடைத்தது. நேரம் தவறாமையில் சகோதரர் காட்டிய கண்டிப்புக்கு நாங்கள் அப்போது கட்டுப்பட்டிருந்தோம். 

அது ஓர் மாலை நேரம், நண்பர்களுடன் இணைந்து ரவுண்ட் ரேஸ் விளையாடுவதற்காக செந்தியம்பலம் தேரிக்குச் சென்றிருந்தேன். நேரம் கடந்துசெல்வதை நான் கவனிக்கத் தவறினேன். திடீரென சகோதரர் செல்வராஜ் தேரியில் தென்பட்டார், ஜெபக்குழுவிற்கு நேரமாகிவிட்டது என வாலிபர்களை அழைத்தார். என்னோடு கூட விளையாண்டுகொண்டிருந்த பல வாலிபர்கள் ஜெபக்குழுவிற்கு வராதவர்களாயிருந்தார்கள். எனவே, அவர்கள் சகோதரரின் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விளையாண்டுகொண்டிருந்தனர். நானோ, விளையாட்டை விட்டுவிட்டு ஜெபக்குழுவிற்கு ஓடிச் சென்றேன். வட்டமாக அமர்ந்திருந்த வாலிபர்களோடு நானும் அமர்ந்தேன்; என்னுடைய கரங்களிலோ வேதாகமம் இல்லாதிருந்தது, வீட்டிற்குச் சென்று வேதத்தை எடுத்துவர நேரமில்லாததால் விளையாடிக்கொண்டிருந்த நான் அப்படியே சென்றுவிட்டேன். என்னைக் கண்ட சகோதரர், சுந்தர் உனது வேதாகமத்தை எங்கே? என்று கேட்டார். எடுத்து வர நேரமில்லை என்றேன். அப்படிச் சொல்லக்கூடாது, உடனே போய் வேதத்தை எடுத்துக்கொண்டு ஜெபக்குழுவிற்கு வா என்று என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். வருத்தத்தோடு வீட்டிற்கு வந்தேன். இந்த ஒரு நாள் மன்னித்துவிடக்கூடாதா? ஏன் இப்படி கடினமானவராக இருக்கிறார்? என்ற கேள்வி என்னை பின்னுக்கு இழுத்தபோதிலும், இரட்சிப்பின் சந்தோஷம் என்னை முன்னுக்குத் தள்ளியது. வீட்டிற்குச் சென்று வேதாகமத்தை எடுத்துக்கொண்டு ஜெபக்குழுவிற்குச் சென்றேன். 

ஜெபக்குழுவில் வாலிபர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. ஜெபக்குழுவில் மாத்திரமல்ல, பிற ஊழியங்களிலும் வாலிபர்கள் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கினர். சாயர்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சந்தித்து சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என்ற ஆவல் ஜெபக்குழுவின் வாலிபர்களுக்கு உண்டானது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் நான்கு மணிக்கு வாலிபர்கள் குழுவாக கூடி ஜெபித்து, சாயர்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் புறப்பட்டுச் சென்றோம். கிராமத்தின் ஒவ்வொரு தெருவிலும் முனைகளில் நின்று சுவிசேஷத்தை அறிவிக்கத் தொடங்கினோம். 'சந்தோஷம் பொங்குதே' 'தேன் இனிமையிலும்' 'இயேசு என்ற திருநாமத்திற்கு' போன்ற சுவிசேஷத்தை அறிவிக்கும் பாடல்களைப் பாடி, பின்னர் சமாதானத்தின் நற்செய்தியை அறிவித்தோம். சாயர்புரத்திலிருந்து தென்புறம் ஏரல் வரையிலும், வடபுறம் புதுக்கோட்டை வரையிலும், கீழ்புறம் குலையன்கரிசல் வரையிலும், மேற்புறம் வாகைக்குளம் வரையிலும் உள்ள கிராமங்களை, ஒவ்வொரு நாளிலும் ஒரு கிராமமாகச் சென்றுவந்தோம். 

அது ஓரு காலை, சுமார் 4 மணி சாயர்புரத்தை அடுத்த சுப்பிரமணியபுரத்திற்கு அருகாமையில் வாய்க்காலை ஒட்டிய கிராமத்திற்கு சுவிசேஷத்தை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றோம். கையில் தகரத்தினால் செய்யப்பட்ட ஒலிபெருக்கி, சில நற்செய்தி கைப்பிரதிகள் என ஒரு சில வாலிபர்களாக சைக்கிளில் பயணமானோம். வாய்க்காலை ஒட்டிய சாலையில், பாலத்தின் அருகே ஓர் தேனீர் கடையை ஒட்டிய தெருவில் நுழைந்தோம், 'சந்தோஷம் பொங்குதே' என்ற பாடலை சத்தமாக கை தட்டிப் பாடினோம். தெருவிலிருந்த சிலர் விழித்து வெளியே வந்து என்ன நடக்கிறது என்று எங்களை எட்டிப் பார்த்தார்கள். விழித்துக்கொண்டு வெளியே வந்த ஒருசிலரைக் கண்டபோது எங்களுக்கு சந்தோஷம் மேலும் பொங்கியது, சத்தமாகப் பாடினோம். பாடல் முடிந்ததும் தெருவின் தொடக்கத்தில் நண்பர்களில் ஒருவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், தெரு நீளமாக இருந்ததால், இரண்டுபேர் அதனை அனைவரும் கேட்கும்படி எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தனர். பிரசங்கம் முடியும் தருவாயில் ஓர் முதியவர் வீட்டை விட்டு வெளியே வந்தார்; பிரசங்கித்துக்கொண்டிருந்த எங்களை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தார். சற்று நேரத்திலெல்லாம் அவருடைய கோபம் வெளிப்படத்தொடங்கியது. 'ஏலேய், இனிம காலையில சமாதானம், கிமாதானம்னு எவனாவது வந்தீங்கன்னா, அப்படியே வெட்டி ஓடுற வாய்கால்ல போட்டுடுவேன்' என்று கத்தினார். அது நண்பர்களாக நாங்கள் சுவிசேத்தின்போது சந்தித்த முதல் எதிர்ப்பு. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக