தினம் ஒரு மணம்
(P.J. கிருபாகரன்)
நம்மாழ்வார்
சைனமும், வைணவமுமே இந்தியாவில் இந்து மதங்களாகக் கருதப்பட்ட நாட்கள் அவை, தமிழகத்தின் தென்முனையான நாகர்கோவிலுக்கு அருகே சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருப்பதிசாரம்;. ஊரினுள் தொன்மையானதோர் விஷ்ணு கோவில்; மற்றும் விஷ்ணுவை வணங்குகின்ற வைஷ்ணவ மதத்தினர். இது இந்துக்களின் 108 திருத்தளங்களுள் ஒன்று. அந்நாட்களில், காரி என்ற சிற்றரசன், மதுரை பாண்டிய மன்னனின் ஆதிக்கத்தின் கீழ் இப்பகுதியில் குறுநில மன்னனாக இருந்தார். அவருக்கு பிறந்த குழந்தை ஜடம் போல் அப்படியே கிடந்ததால், பெற்றோர் அதனை முற்காலத்தில் 'குறுகூர்' 'திருக்குறுகூர்' 'திருநகரி' என்று அழைக்கப்பட்டு வந்த, இப்போதையை ஆழ்வார் திருநகரியிலுள்ள மூலவர் என்று அழைக்கப்படும் ஆதிநாதர் இந்துக்கோவில் ஒன்றில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். திருநகரி எனும் இவ்வூரும் இந்துக்களின் 108 திருத்தளங்களுள் ஒன்று. அக்குழந்தை அப்பகுதியில் இருந்ததோர் புளிய மரத்தடியிலே வளர்ந்து, விஷ்ணுவைப் பற்றி பல பாடல்களைப் பாடித் தொகுக்கும் தமிழ் புலவரும், அறிஞருமாக மாறியது. அவருடைய பெயரே 'ஆழ்வார்'. அப்பகுதி மக்கள் இவரை நம்முடைய ஆழ்வார் என அழைக்கத் தொடங்கியபோது வழக்கில் அவரது பெயர் 'நம்மாழ்வார்' என மாறியது.
இவர் தமிழ் இலங்கியங்களை வடித்த பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒருவர். நாலாயிரம் திவ்யபிரபந்தத்த உருவாக்கத்தின் பெரும் பங்கு இவருடையது. இவரது வருகைக்குப் பின்னர் அந்த ஊர் ஆழ்வார்திருநகரி என பெயர்பெற்றது. இந்துக்களின் புனித ஸ்தலங்களாகக் கருதப்படும் நவ திருப்பதிகளில் (ஒன்பது தெய்வ திருத்தலங்கள்) ஆழ்வார் திருநகரியும் ஒன்று; 'பஞ்ச சேத்ரம்' என்றும் இது அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 30 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்த நம்மாழ்வார் தமிழகத்தின் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர். இப்பன்னிரெண்டு ஆழ்வார்களாலேயே தமிழின் 'நாலாயிரம் திவ்யபிரபந்தம்' உருவாக்கப்பட்டது. தமிழறிவும் புலமையும் படைத்த நம்மாழ்வாரை அவரது மரணத்திற்குப் பின் ஜனங்கள் தெய்வமாகவே வழிபடத் தொடங்கினர். 'கல்வியும் அறிவும் வணங்கப்படத்தக்கது அல்ல, கல்வி அறிவு பெற்றோரும் மனிதர்களே தெய்வங்களல்ல' என்பதை மறந்து, படைத்தவனை அறியாத மக்களால் கடவுளாகக் கருதப்பட்ட மனிதன் அவர்.
நவ திருப்பதிகள் என்று அழைக்கப்டும் ஒன்பது திருப்பதிகளில் ஆழ்வார் திருநகரியில் மட்டுமே நம்மாழ்வாரின் சிலை இருப்பதால் இந்து பக்தர்களை ஈர்க்கும் ஊராகியது ஆழ்வார்திருநகரி. வட இந்தியாவிலும் அந்நாட்களில் வைஷ்ணவ மதமே பரவியிருந்தது; பீஹாரிலுள்ள கயாவிலும் இந்துக்களின் 108 திருத்தலங்களில் ஒன்றான வைஷ்ணவ ஸ்தலம் ஒன்று இருக்கிறது. பிற்காலத்தில் இந்த வைஷ்ணவ மதம் மங்கி, அதனைச் சார்ந்து எழுந்த புத்தமதம் உருவானது; அச்சரித்திரம் நீண்டது. கீழான இனமாகக் கருதப்பட்ட திராவிடர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் மதிக்கப்படாதபோது, புத்த மதத்தினைத் தழுவிய வராறும் உண்டு.
17-ம் நூற்றாண்டில், வைணவ மதத்தையே சார்ந்து வாழ்ந்தனர் எனது முன்னோர்கள். ஆழ்வார்களின் அடிச்சுவடுகளைப் பற்றிக்கொண்டு, வைணவ மத பக்தர்களாகவும், ஆழ்வார்களின் பிரியர்களாகவும் தங்களது வாழ்நாட்களைக் கடத்திவந்தனர். அம்முன்னோரில் ஒரு குடும்பத்தினர், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு, ஆழ்வார்திருநகரியிலுள்ள 'நம்மாழ்வார்' என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். நம்மாழ்வார் என பெயரிடப்பட்ட அக்குழந்தை வைணவ மத பக்தி நெறிகளில் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டது. பெற்றோரைப் போன்றே வைணவ மத பக்தராக, ஆழ்வார்களின் சீடத்துவ முறைகளுக்குத் தத்தம் செய்தவராக வாழ்ந்து, வைணவ மத பக்தரானார் நம்மாழ்வார். வளர்ந்து கல்வி அறிவும், புலமும் பெற்றிருந்தபோது, திருவனந்தபுரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தற்போதைய எல்லையில் அந்நாட்களில் ஆண்ட சிற்றரசர்களின் அவையிலும், அரண்மணையிலும் அப்போது முக்கிய இடம்பெற்றிருந்தார் நம்மாழ்வார்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், சுப்ரமணியபுரம் என்று அழைக்கப்படும் ஒரு சிறு கிராமத்திலேயே அப்போது அவர் வசித்துவந்தார். சாயர்புரம் அப்போது தோற்றுவிக்கப்படவில்லை. நட்டாத்தி, சுப்பிரமணியபுரம், செபத்தையாபுரம் போன்ற கிராமங்களே அப்பகுதியில் காணப்பட்ட அந்நாட்களில், அங்கும் குறு நில மன்னர் ஆட்சியே நடைபெற்றுவந்தது. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக கொற்கை காணப்பட்ட காலம் அது. பாண்டிய மன்னனுடைய வழியில் அப்போது, நட்டாத்தியினை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தார் குறுநில மன்னர் ஒருவர். அரண்மனை வழக்கும், வாக்கும் அறிவுப் புலமையும் கொண்ட நம்மாழ்வாரை நட்டாத்தியின் சிற்றரசர் மந்திரியாக மற்றும் ஆலோசகராக தனக்கு நியமித்துக்கொண்டார். 17-ம் நூற்றாண்டில், ஆங்கிலேய மிஷனரிகளால் அப்பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டபோது, வைராக்கியமாய் வணங்கி வந்த வைணவ மதத்தை விட்டுவிட்டு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஞாஸ்நானம் பெற்று தனது பெயரை 'ஞானசிகாமணி' என மாற்றிக்கொண்டார் நம்மாழ்வார்.
1892 ஆண்டுவரை நட்டாத்தியில் ஜமீன்தார்களின் ஆட்சியே நடைபெற்றது. மன்னருக்கு உட்பட்ட பகுதிகளை குதிரையில் பிரயாணம் செய்து சென்று பார்த்து வருவது நம்மாழ்வாரின் அன்றாடக வழக்கம். ஜனங்கள் மாட்டுவண்டிகளில் பிரயாணித்துக்கொண்டிருந்த அந்நாட்களில், சொந்தமாக தான் வைத்திருந்த குதிரையில் வலம் வருவார் நம்மாழ்வார். நட்டாத்தியிலிருந்து சாயர்புரம் வரும்போது, வழியில் சாயர்புரத்தையும் சுப்ரமணியபுரத்தையும் பிரிக்கும் ஓடைக்கு அருகாமையிலுள்ள கிணற்றருகே குதிரைக்குத் தண்ணீர் கொடுப்பது அவரது வழக்கம்;. குதிரை தண்ணீர் குடிப்பதற்காக தனியாக அப்போது ஒரு தொட்டியும் கட்டப்பட்டிருந்தது; பாழான நிலையில் இருந்த அத்தொட்டி இப்போது காணப்படவில்லை. நட்டாத்திப் பண்ணையில் மிகவும் செல்வாக்கு உடையவராக இருந்தார் நம்மாழ்வார்.
18-ம் நூற்றாண்டில் அப்பகுதியில் மிஷனரியாக வந்த Dr.G.U.Pope -க்கும் நம்மாழ்வாருக்கும் இடையே நல்ல உறவு இருந்துவந்தது; போப்-க்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்களில் நம்மாழ்வாரும் ஒருவர். போப் தமிழை நேசிக்கவும், தமிழ் செய்யுட்களை மொழிபெயர்ப்பதற்கும் உந்துதலாயிருந்தவர்களில் நம்மாழ்வாரின் பங்கும் இன்றியமையாதது. எனது தந்தை திரு. பால் மாசில்லாமணி சாயர்புரத்திலுள்ள போப் நினைவு மேல் நிலைப் பள்ளியின் நூலகத்தில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்தபோது, அங்கிருந்த புஸ்தகங்களை வாசித்துக்கொண்டிருந்த அவர், 'நம்மாழ்வாருக்கும் Dr.G.U. போப்பிற்கும் இடையிலான இத்தகைய செய்திகள் அடங்கிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை தான் வாசித்ததாக என்னிடத்தில் கூறியிருக்கின்றார். பின் நாட்களில், ஒரு நபர் அந்த புத்தகத்தை தன்னிடத்தில் தரும்படியாக எனது தந்தையிடம் கேட்டாரென்றும், அந்த புத்தகத்திற்குப் பதிலாக அநேக பணம் தருகிறேன் என்று தன்னிடத்தில் அந்த நபர் கூறினதாகவும், எனது தந்தையோ நூலகத்திலிருந்து அப்புத்தகத்தை வெளியிலே எடுத்துத் தர மறுத்ததாகவும், பின்னர் ஒரு சில நாட்களில் நூலகப் பணியிலிருந்தே எனது தந்தை விடுவிக்கப்பட்டு ஆசிரியராக மாற்றப்பட்டதாகவும் என்னிடத்தில் கூறியிருக்கின்றார். பின் நாட்களில் அந்த நூலகம் சாயர்புரம் போப் கல்லூரிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
நம்மாழ்வார் என்ற ஞானசிகாமணிக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லாதிருந்தது. இந்நிலையில், குழந்தைச் செல்வம் பெற வேண்டி வேறொரு பெண்ணையும் திருமணம் முடித்திருந்தார் நம்மாழ்வார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதினாலும், அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தியதாலும், கிறிஸ்தவ மிஷனரி Dr.G.U போப்பிற்கு உதவியதாலும் அக்காலத்தில் அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த கிறிஸ்துவை அறியாத, அவரது உறவினரல்லாத பிற மக்கள் பொறாமை கொண்டனர். வெள்ளைக்கார மதம் என கிறிஸ்தவத்தை வெறுத்து வந்த இவர்கள், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம்மாழ்வாரை தந்திரமாக கொலை செய்ய ஆயத்தமாயினர்; குறிப்பிட்ட ஓர் நாளில் செந்தியம்பலம் கிராமத்திற்கு வடக்கே உள்ள தேரிக்கு நம்மாழ்வார் என அழைக்கப்பட்ட ஞானசிகாமணியை ஏமாற்றி அழைத்துச் சென்று, கழுத்து வரை ஆழமுள்ள வெட்டப்பட்ட குழியினுள் அவரைத் விழத் தள்ளி மண்ணினால் மூடினர். அவரது கழுத்து மற்றும் தலையினை மட்டுமே வெளியில் தெரியும்படி வைத்து, கிறிஸ்துவை அவர் ஏற்றுக்கொண்டதினால் ஏளனமாய் எள்ளி நகையாடி, அவர் தண்ணீர் கேட்டபோது, அவரது தலைமேலே சிறுநீர் கழித்து அவரை கொலை செய்தனர். செந்தியம்பலம் (அப்போது இக்கிராமத்திற்கு இப்பெயர் இல்லை) கிராமத்தாருக்கு இது தெரியவந்தபோது, கொலை செய்யப்பட்ட ஞானசிகாமணியின் உடலைத் தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே சரீரத்தை அடக்கம் செய்தனர்; அத்துடன் அடையாளமாக அவரது கால் புறமாக ஒரு பனை மரத்தையம், தலைப்புறமாக ஒரு பனை மரத்தினையும் நாட்டினர். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது ஆலயம் ஒன்று கட்டப்பட்டு, ஜனங்கள் கூடி கர்த்தரை ஆராதித்துவருவது ஆனந்தமானதோர் செய்தி.
நம்மாழ்வார் அடக்கம் செய்யப்பட்ட இடம்
நூற்றாண்டுகளைத் தாண்டிவிட்டபடியினால், அப்பனைமரங்களின் வாழ்க்கையும் முடிந்து விழுந்து மறைந்துவிட்டன. நான் சிறுவனாக இருக்கும்போது, எனது தந்தை திரு.பால்மாசில்லாமணி 'நம்மாழ்வார் தேரி' க்கு என்னை அழைத்துச் சென்று அவ்விடத்தை எனக்குக் காண்பித்துக் கொடுத்ததுடன், அவரைப் பற்றிய செய்திகளையும் எனக்கு எடுத்துக்கூறியிருக்கின்றார். அப்போது என் தந்தை என்னிடத்தில்: நம்மாழ்வாரைக் கொன்றவர்களுக்கு அப்போது இருந்த பிள்ளைகள் தவிர பிற்பாடு பிள்ளைகள் பிறக்கவே இல்லை என்றும், ஏற்கனவே இருந்த அவர்களுடைய பிள்ளைகளில் எவருக்கும் பின் நாட்களில் சந்தானமும் இல்லை என்றும், அவர்களது சந்ததியே அழிந்துபோயிற்று என்றும் என்னிடத்தில் கூறியிருக்கின்றார். தற்போது அந்த இடத்தில் அரசினால் நெசவாளர்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட 50 வீடுகள் உள்ளன. அது 'நம்மாழ்வார் நகர்' என்றே பெயரிடப்படு அழைக்கப்பட்டுவருகின்றது. என் ஜனத்தின் முதல் இரத்தசாட்சியாக நம்மாழ்வார் என்ற ஞானசிகாமணியே எனது நினைவில் இன்றும் நிற்கிறார். அவர் விதையாகிய தேரியில் இன்னும் பல ஆத்துமாக்கள் விளைகின்றது. நம்மாழ்வாரின் நினைவாக 'ஞானசிகாமனி தொடக்கப்பள்ளி' இன்றும் சாயர்புரத்தை ஒட்டியுள்ள சாதுராக் தெருவில் செயல்பட்டுவருகின்றது.
இன்றும் இத்தேரியில் ஆங்காங்கே ஜெபிக்கும் வாலிபர்களையும், பெரியோரையும் காணமுடியும். கிறிஸ்துவை அறிந்ததுடன், கிறிஸ்துவுக்காக எதையாகிலும் செய்யவேண்டும் எனத் துடித்த வாலிபர்களால் நண்பர்கள் ஜெப ஐக்கியம் தொடங்கப்பட்டதும் இத்தேரியிலேயே; அதன் தொடக்க காலத்தை நான் அறியேன்; நான் வாலிபனாக இருந்தபோது நடந்துகொண்டிருந்த நண்பர்கள் ஜெப ஐக்கியத்தில் நான் இரட்சிக்கப்பட்டவன். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் காலையும் மாலையும் இத்தேரியே எனக்கு ஜெபிக்கும்படியான அருமையான ஸ்தலமாக இருந்தது. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து கால்நடையாய் தேரிக்கு சென்று ஜெபித்த நினைவுகள் இன்றும் எனது நெஞ்சில் நினைவாய் நிற்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக