வெள்ளி, 6 மே, 2022

சரிந்ததும், சரியானதும்

சரிந்ததும், சரியானதும்


ஒருமுறை இயேசுவை நோக்கி கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம், அந்த மாதத்தில் அக்கூட்டத்தில் செய்தியளிப்பதற்காக செபத்தையாபுரத்தைச் சேர்ந்த சகோதரர் ஜீவா அவர்களை அழைத்தோம், அவரும் உற்சாகமாக வர இசைந்தார். ஜனங்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். கூட்டம் ஆரம்பமானது. பாடல்வேளை முடிந்து, ஆராதனை வேளை நிறைவுற்று, செய்தி வேளை தொடங்கியது. சகோதரர் ஜீவா கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். அவரோடு கூட நட்பு கொண்டு பழகிய சந்தர்ப்பங்கள் பல எனக்குக் கிடைத்திருந்தபோதிலும், அவருடைய பிரசங்கத்தை அதிகமாக நேரில் அமர்ந்து நான் கேட்டதில்லை. அன்று அவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, பிரசங்கத்தின் இடையிலேயே பிசாசுகளின் பிடியிலிருந்த சிலர் ஆடத்தொடங்கினர். அவர்கள் விடுதலை பெறவேண்டும் என்று ஜெபித்தவனாக நின்றுகொண்டிருந்தோம். பிரசங்கத்தின் முடிவில் சகோதரரிடம் வந்து ஜனங்கள் ஜெபித்துவிட்டுச் சென்றனர்; பிசாசின் பிடியில் இருந்தவர்கள் விடுதலையும் பெற்றனர். நண்பராகவே சகோதரர் ஜீவாவைப் பார்த்துக்கொண்டிருந்த நான், அன்று கர்த்தர் அவருக்குள் வைத்திருக்கும் தாலந்துகளைக் கண்டேன். தேவன் பயன்படுத்தும் ஓர் பாத்திரம் அவர் என்பதை அப்போது நான் அறிந்துகொண்டேன். இயேசுவை நோக்கி கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. 

அப்போது, செந்தியம்பலத்தில் உள்ள சகோதரர் ஒருவர் புதியதோர் ஜெபக்கூடுகையினை தனது வீட்டில் தொடங்கினார். கர்த்தரின் பிள்ளைகளிடத்தில் வேற்றுமையின் வேரில்லையே; எனவே, அந்த நபரோடும், ஜெபக்கூடுகையுடனும், நமது ஐக்கியத்தின் நண்பர்களுக்கும் நல்லதோர் தொடர்பு உண்டாயிருந்தது. செந்தியம்பலத்தின் ஜனங்கள் பலர் அந்த சகோதரர் தனது இல்லத்தில் நடத்திக்கொண்டிருந்த ஜெபக்கூடுகைக்கு செல்லத் தொடங்கினர். நானும் ஒருமுறை அந்த ஜெபக்கூடுகையில் பங்கேற்றேன். நாட்கள் செல்லச் செல்ல புதிதாக ஜெபக்குழுவைத் தொடங்கிய அந்த நபரின் செயல்கள் வேதத்திற்கு முரண்பட்டதாகத் தோன்ற, நமது ஐக்கியத்தின் நண்பர்கள் அந்தக் கூடுகையில் பங்கேற்பதை தவிர்த்துவந்தனர். ஒருநாள் இரவு சுமார் பத்துமணி அளவில் எனது வீட்டிலிருந்து நான் சாயர்புரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, தென்னிந்திய திருச்சபையின் செந்தியம்பலம் தொடக்கப்பள்ளியை ஒட்டியுள்ள மைதானத்தில் சில சகோதரர்கள் நடந்துகொண்டிருப்பதைக் கண்டேன். யாரென்று சற்று உற்று பார்த்தபோது, புதிதாக ஜெபக்கூடுகையைத் தொடங்கிய அந்த சகோதரர்கள் என அடையாளம் கண்டுகொண்டேன். அவர்களைப் பார்த்து கையசைத்தவாறு எனது பயணத்தைத் தொடர்ந்தேன். சில நாட்களுக்குப் பின்னர், அந்த சகோதரர்களுள் ஒருவர் என்னை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். நானோ வயதில் சிறியவன், அவரோ வயதில் பெரியவர்; எனவே, அன்று நிர்ப்பந்தத்தின் பேரில் செல்லும் நிலை எனக்கு உண்டானது. அப்போது, அவர் பேசிய வேதத்திற்கு முரண்படும் சில வார்த்தைகளைக் கேட்டு மனம் நொந்ததால், மறுபடி அவரது அழைப்பினை ஏற்காதவாறு முழுவதும் தட்டிக்கழித்தேன். சில குறிப்பிட்ட நாட்களுக்குள்ளாக அந்தக் கூடுகை அதிக வளர்ச்சியைக் கண்டது. கிராமத்து ஜனங்களில் பலர் தொடர்ந்து செல்லத் தொடங்கினர். தீர்க்கதரிசனம் சொல்லப்படுகின்றது என்று தீர்க்கதரிசனத்தை கேட்கும் வாஞ்சையில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கினர். ஐக்கியத்தின் நண்பர்களும் அந்தக் கூடுகையினை நடத்தும் சகோதரர்களுடனான உறவில் மிக்க கவனமாயிருந்தனர். காலம் செல்லச் செல்ல அந்தக் கூடுகையோ காணாமல் போனது. எனினும், அவர்கள் போதித்துவந்த தவறான உபதேசத்திற்குள் வாலிபர்களான நாங்கள் சிக்கிக்கொள்ளாதபடி கர்த்தர் எங்கள் ஒவ்வொருவரையும் காத்தார். எனினும், அக்கூட்டத்தினரைப் பின்பற்றிப்போன ஜனங்களை நினைத்து நினைத்து ஐக்கியத்தின் வாலிபர்களான நாங்கள் துக்கமடைந்தோம். எதிர்த்துப் பேசவும், போராடவும் அவசியமில்லை எனக் கருதிய நாங்கள், எங்களது ஆவிக்குரிய வாழ்வினை வேதத்தின்படி அமைத்துக்கொள்வதில் மேலும் கரிசனையுள்ளோரானோம். 

ஒருமுறை நாங்கள் செந்தியம்பலத்தின் தேரிக்கு ஜெபக்குழுவாகச் ஜெபிக்கச் சென்றிருந்தபோது, அங்கு தூரத்தில் ஒரு மற்றும் ஒரு வாலிப வயதுடைய குழுவினர் கூட்டமாக அமர்ந்து ஜெபிப்பதைக் கண்டோம். நமது ஐக்கியத்தின் வாலிபர்களா அவர்கள் என்று பார்த்தபோது, ஐக்கியத்திற்கு வரும் வாலிபர்கள் எவருமே அக்குழுவில் இல்லை என்பதை அறிந்தோம். அங்கு இருந்த வாலிபர்கள் அனைவரும் எங்களுக்குத் தெரிந்தவர்களே; ஆனால், ஜெபக்குழுவில் பங்கேற்காதவர்கள். எனினும், அவர்கள் கூடி ஜெபிக்கத் தொடங்கியிருப்பதை நினைத்து நாங்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தோம். அவர்களைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது, அவர்களோ எங்களைக் கண்டு விலகியே சென்றுகொண்டிருந்தனர். அவர்களது குழுவில் இருந்த வாலிபர்கள், நமது ஐக்கியத்தின் வாலிபர்களோடு பேசுவதைக் கூட தவிர்த்துக்கொண்டனர். அவர்களோடு இருந்த வாலிபர்களை பலமுறை நாங்கள் ஜெபக்குழுவுக்கு அழைத்திருக்கிறோம்; ஆனால், அவர்களோ வந்ததில்லை. அப்படியிருக்க, மொத்தமாக இத்தனைபேர் திடீரென எப்படி? என்ற கேள்வி எங்களுக்குள் உண்டானது. பல்வேறு சம்பவங்களில், விழாக்களில் அந்தக் குழுவினர் தங்களை எங்களிடமிருந்து வேறுபடுத்தியே காண்பித்துக்கொண்டிருந்தனர். இரண்டு ஜெபக்குழுக்கள் என்று ஊரிலே சிலர் பேசுவதும் எங்கள் காதுகளில் விழுந்தது. சிதறிச் சிதறி சுவிசேஷம் அறிவிப்பதில் தவறில்லை, ஆனால், பிரிந்து கிடைப்போராகப் பேசப்பட்டது துக்கத்தைக் கொடுத்தது. 

அந்நாட்களில், சாயர்புரத்தில் இருந்த 'எப்பத்தா' ஊழியங்களுடன் ஐக்கியத்தின் வாலிபர்களுக்கு தொடர்பு உண்டானது. அங்கு நடைபெறும் கூட்டங்களுக்கு ஐக்கியத்தின் சகோதரர்கள் சென்றுவந்தனர். ஒருமுறை நான் அங்கு சென்றிருந்தபோது, எப்பத்தா ஊழியத்தின் ஊழியர் திரு.மோசஸ் சாலமோன் என்னை நோககி, நீ யார் மகன்? என்று கேட்டார், நானோ 'திரு.பால் மாசில்லாமணி அவர்களது மகன்' என்று பதில் சொன்னேன். அப்போது அவர், 'நீ யோவான் பேரன் என்று சொல்' அப்போதுதான் எனக்குப் புரியும் என்று சொன்னார்;. அத்துடன், உனது தாத்தா, வேதத்தின் வசனங்களைக் கேட்டால், அதன் இருப்பிடத்தை உடனே சொல்லிவிடுவார்; எனவே அவரை ஒத்துவாக்கியம் என்றுதான் நான் சொல்லுவேன்' என்று என்னிடத்தில் சொன்னார். எனது தாத்தாவைக் குறித்து ஊழியர் சொன்ன அந்த அறிமுகம் என்னை உற்சாகப்படுத்தியது. அவரைப் போல நானும் வேத வசனங்களைக் கற்கவேண்டுமே, நினைவில் கொள்ளவேண்டுமே என்ற உத்வேகமும் எனக்குள் உண்டானது. அந்த நாள் முதல் வேதத்தின் இருப்பிடங்களை அதிகம் மனனம் செய்யத் தொடங்கினேன். ஜெப வேளையின்போதும், வசனங்களின் இருப்பிடத்தையே சொல்லி ஜெபிப்பதை எனது வழக்கமாக்கத் தொடங்கினேன். 

ஒருமுறை தேரியில் ஜெபக்கூடுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜெப வேளையில் வசனங்களையே சொல்லி ஜெபிப்பதைக் கண்ட சகோதரன் பாபு (தற்போது ஜெம்ஸ் ஊழியத்தில் பணிபுரிகிறார்) என்னை நோக்கி, 'சுந்தர், இது கர்த்தர் உனக்குக் கொடுத்த தாலந்து' என்று சொன்னது என் நினைவில் நிற்கிறது. தொடக்க நாட்களில், நான் பிரசங்கித்தபோது, எல்லா வசனங்களையும் மனப்பாடம் செய்துகொண்டு, கண்களை மூடியவண்ணமே பிரசங்கிப்பது எனது வழக்கமாயிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக