வெள்ளி, 6 மே, 2022

தேரியில் தொடங்கிய ஜெபக்குழு

தேரியில் தொடங்கிய ஜெபக்குழு


தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட, சாயர்புரம் பேரூராட்சியின் வடபுறம் அமைந்துள்ளது செந்தியம்பலம் கிராமம். இக்கிராமத்தின் தேரிப்பகுதி பரந்து விரிந்தது மற்றும் பனை மரங்களினால் நிறைந்தது. வேடர்கள் மற்றும் விறகு பொறுக்கிச் செல்ல வரும் மனிதர்களைத் தவிர்த்து, வேறெந்த மனிதர்களும் நடமாடாத அடர்ந்த காட்டுப் பகுதியாகவே அது காட்சியளித்தது. கிராமமும் காடும் தொடங்கும் இடத்தில் பரவிக் கிடக்கும் மைதானத்தில் ஆங்காங்கே சிறுவர்கள் விளையாடும் காட்சி, சிவேரென்ற செம்மண் தரை, தேசிய மாணவர் படை பிரிவினர் துப்பாக்கிப் பயிற்சி பெறும் பெற வளர்ந்து நிற்கும் ஒரு கோட்டை (குண்டு கோட்டை), வரிசையாக நாட்டப்பட்டுள்ள விராலிச் செடிகள், நிலத்தடி நீரை அளந்து சொல்லுமளவிற்கு செழிப்பாக உயர்ந்து நிற்கும் பனை மரங்கள், முந்திரி மரங்கள், கிரமமாகப் பராமரிக்கப்படும் சில தோட்டங்கள், பனைமரத் தொழில் செய்வோரின் சின்னஞ் சிறு குடில்கள், தாகம் தீர்த்துக்கொள்ள ஒரு சில கைபம்புகள் (அடிபைப்பு) என அத்தனையும் உள்ளடக்கிய தேரிப் பகுதி அது. மாலை நேரத்தில் ஓய்வுக்காகவும், இளைப்பாறவும், அமைதிக்காகவும் பலரை இக்காட்டுப் பகுதிக்கு வரவழைக்கும் வளம் கொண்டது. 

தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயலாற்றிவரும் கிருபையின் ஊழியங்களின் மூலமாக செந்தியம்பலம் கிராமத்தின் தேரிப்பகுதியில் முதன் முதலாக வாலிபர் ஜெபக்குழு ஒன்று தொடங்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் நிறைந்து இருக்கும் இக்கிராமத்தில், கிறிஸ்துவை விட்டுத் தூரமாகத் திரிந்துகொண்டிருந்த பல வாலிபரின் வாழ்க்கையை கிறிஸ்துவண்டை திருப்பி, அவர்களது ஒளியேற்றிவைத்த ஊழியத்தைத் செய்தவர்கள் கிருபையின் ஊழியக் குழுவினரே. கிருபையின் ஊழியத்தின் தன்னார்வல ஊழியர்களுள் ஒருவரான சகோ.கிறிஸ்டோபர் இக்கிராமத்தின் வாலிபர்களைச் சந்தித்து, அவர்களை ஒருங்கிணைத்து, இந்த தேரிப் பகுதியில் வாரம் ஒருமுறை தொடர்ந்து ஜெபக்குழுவினை நடத்தத் தொடங்கினார். கிராமத்தின் வாலிபர்களான சகோ. ஆனந்தராஜ், சகோ. மணிசேகர், சகோ. அப்சலோம் போன்றவர்கள் தொடக்க கால ஜெபக்குழுவின் உறுப்பினர்கள். சகோ. ஆனந்தராஜ் தற்போது ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தில் மிஷனரியாக லக்னோவிலும், சகோ. அப்சலோம் ஜெம்ஸ் மிஷனரியாக பீஹாரிலும் செயல்பட்டுவருகின்றனர், சகோ. மணிசேகர் தூத்துக்குடியில் வசித்துவருகின்றார். இந்த வாலிபர்களின் ஐக்கியத்தினாலும், தொடர் ஜெபத்தினாலும் ஜெபக்குழு வளர்ச்சியின் பாதையில் முன்னேறத் தொடங்கியது. கிராமத்து வாலிபர்களில் மேலும் பலரை இவர்களது ஜெபம் ஜெபக்குழுவிற்கு ஈர்த்தது. சந்தடி ஏதுமில்லாமல், தேரி நோக்கிச் சென்று ஜெபித்த காலடிகளின் நாட்களே ஜெபக்குழுவின் ஆரம்ப அஸ்திபாரமான காலங்கள்.

நாட்கள் செல்லச் செல்ல, தேரியில் கூடி ஜெபிப்பதோடு வாலிபர்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளாமல், செந்தியம்பலம் கிராமத்தின் மையமாக இருக்கும் புதுக்கோவில் தெருவில் அப்போது செயல்பட்டுவந்த அரசு நூலகத்தின் வெளிப்புற முற்றத்திலும் மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஆலய ஆராதனைக்குப் பின்னர் ஜெபக்கூட்டங்களை நடத்தத் தொடங்கினர். வாலிபர்களின் வாழ்க்கையில் கொழுந்துவிட்டு எரிந்த திரியினால் உண்டான வெளிச்சம் செந்தியம்பலம் கிராமத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வீசத்தொடங்கியது. நாட்கள் செல்லச் செல்ல, கிராமத்திலிருந்த பல வாலிபர்களும், பொதுமக்களும்கூட இக்கூடுகையில் பங்கேற்கத் தொடங்கினர். கிறிஸ்து பிறப்பின் பண்டிகை நாட்களில் கீத பவனி மற்றும் கீத ஆராதனைகள் ஆலயங்களில் நடைபெற்றபோதிலும், வாலிபர்களாக இணைந்து ஜெபக்குழுவின் சார்பாக கிறிஸ்மஸ் கீதபவனிகளையும், கீத ஆராதனையையும் சிறப்பாக நடத்திவந்தனர். இத்தகைய நிகழ்ச்சிகள் கிராம மக்களிடையே ஆவிக்குரிய விழிப்புணர்வை அந்நாட்களில் உண்டாக்கியது; அதுமாத்திரமல்ல, கிராமத்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் வாலிபர்களுக்குப் பெற்றுத்தந்தது. 

என்றபோதிலும், இக்குழுவில் இருந்த வாலிபர்கள் ஊழியத்தின் நிமித்தமாகவும், பணியின் நிமித்தமாகவும், திருமணத்தின் நிமித்தமாகவும் வெளியூர்களுக்குச் சென்று வசிக்கும் நிலை உருவானபோது, ஜெபக்குழுவில் வாலிபர்களின் கூடும் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத்தொடங்கியது; அத்துடன், ஜெபக்குழு தொடர்ந்து நடத்துவதும் இயலாததாயிருந்தது. அந்நாட்களில், மீண்டும் கிருபையின் ஊழியத்தின் ஊழியர் சகோ. நெப்போலியன், சகோ. பொன்னாச்சிநாதன், சகோ. ஐசக், சகோ. ஜெயசீலன், சகோ. ஆர்தர்துரை ஆகியோர் செந்தியம்பலம் கிராமத்திற்கு வருகை தந்து வாலிபர்களைச் சந்தித்து ஜெபக்குழுவைக் கட்டிக்காத்தனர். தொடர்ந்து, பண்டாரவிளையைச் சேர்ந்த சகோ. செல்வராஜ் கிருபையின் ஊழியங்களுடன் இணைந்து இச்சிறிய ஜெபக்குழுவை நடத்திவந்ததுடன், கிராமத்தின் பிற வாலிபர்களையும் சந்தித்துவந்த நாட்களில், சகோதரரின் வருகை கிராமத்தின் வாலிபர்களிடையே பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. செந்தியம்பலம் கிராமத்தில் பல வாலிபர்கள் கிறிஸ்துவுக்கென்று தங்களை அர்ப்பணித்ததுடன், ஊழியம் செய்யவும் தங்களை ஒப்புக்கொடுத்தனர். கிருபையின் ஊழியத்தின் மூலமாக நடத்தப்பட்ட பல முகாம்களிலும், கூட்டங்களிலும் வாலிபர்கள் கலந்துகொண்டு ஆவிக்குரிய வளர்ச்சி பெற்றனர். கிருபையின் ஊழிய ஸ்தாபகர் சகோ. பொற்செல்வன் ஆசீர் அவர்களின் ஊக்கமும், பின்தொடர் பணிகளும், பல்வேறு கூட்டங்களில் வாலிபர்களை மேடை ஏறச் செய்ததும் தொடக்க கால வாலிபர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை வலுப்படுத்தியது. கன்வென்ஷன் கூட்டங்களில் பிரசங்கித்து, முழு இரவு ஜெபங்களை நடத்தி, சுவிசேஷ ஊழியங்களைச் செய்யுமளவிற்கு வாலிபர்கள் முன்னேறினர். 

தொடரும் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக