திங்கள், 4 அக்டோபர், 2021

முன்னுரை

 

 தினம் ஒரு மணம்

(P.J. கிருபாகரன்)

www.sinegithan.in

__________________________________________________

முன்னுரை


(இக்கட்டுரையில் வெளிவரும் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே)


    மற்றவர்கள் கற்கும் காரியங்களும், வெறுக்கும் காரியங்களும், வார்க்கும் காரியங்களும் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை. மனித வாழ்க்கையின் அனுபவங்களை மனிதர்களின் வாழ்;க்கைக்கு அன்பளிப்பாக விட்டுச் செல்வதே ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய உயர்ந்த பண்பு. இப்பண்பு என்னைப் பாதித்துவிடுமோ? என்ற கேள்வியினை மனதில் எழுப்பி எனது வாழ்க்கைத் தடங்களையே அழித்துவிட நான் விரும்பவில்லை. வாழ்க்கையின் வெற்றிகள் மாத்திரமல்ல, எனது தோல்விகளும் துவண்டுபோனவர்களைத் தூக்கிவிடும்;, பிறருக்குப் பாடங்களாக அமையும். இங்கிருந்துதான் வந்தேன் என்பதைக் காணக்கூடாத கண்கள்; மற்றும் தங்கியிருக்கும் இடத்திலேதான் தான் தோன்றியதைப் போன்று எழும் பிரம்மை, நாம் கடந்துவந்த பாதைகளையும் மற்றும் கற்று அறிந்த பாடங்களையும் அழித்துவிடப் போதுமானது. 

    வெற்றி பெற்ற மனிதர்களிடத்தில் தோல்விகளின் தடங்கள் இல்லாமலிருக்காது; ஆனால், வெற்றியின் வெளிச்சத்தில் அவைகள் வெளியே தெரிவதில்லை அவ்வளவே. அத்துடன், ஒரு மனிதனின் சரிதையில் ஜரிகைகளாய் ஜொலிப்பது அவனது வெற்றி மட்டுமல்ல, தோல்விகளுமே. விரல்கள் எழுதும் வாழ்க்கைச் சரித்திரத்தில் தோல்விகள் இடம் பெறாவிட்டால், எப்படி ஏறிவந்தேன் என்றும், ஏறிவந்த பாதையும் அடுத்தவர் கண்களுக்கு அப்பட்டமாய்த் தென்படாதே. சரித்திரம் படைக்க விரும்பும் மனிதர்கள் எவரும் தோல்விகளால் தோற்றுப்போவதில்லை; வெற்றி என்ற இலக்கை நோக்கிச் செல்ல அவர்கள் விளக்கு வழிகாட்டிக்கொண்டேயிருக்கும். வாழ்க்கையில் பணத்தால் மாத்திரமல்ல, மனத்தாலும் மற்றும் அனைத்தாலும் மற்றவர்களை வாழவைக்கும் நல்லெண்ணம் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உண்டாகவேண்டும். சரித்திரம் படைத்தவர்களும், சரித்திரத்தை இடித்தவர்களும் உலகில் பலர் உண்டு. தீயவர்களைக் காணும்போது, 'இவ்விதம் வாழக்கூடாது' என்பதும், நல்லவர்களைக் காணும்போது 'இவரைப்போல் வாழவேண்டுமே' என்பதும் மனிதனின் உள்ளத்தில் ஒலிக்கும் ஓசை. எத்தோடு மனிதன் இசைந்துபோகிறானோ, அத்தோடுதான் அவன் பிசையப்பட்டு உருப்பெறுவான்.

வாலிபனான எனது வாழ்க்கையின் வெற்றிகள் மாத்திரமல்ல, வீழ்ந்து எழுந்த தோல்வியின் வலிகள் கூட மற்றவர்களை வடிவமைக்கப் போதுமானவைகளாக அமையும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தவைகளை, 'தினம் ஒரு மணம்' என்ற தலைப்பில் எழுதத்தொடங்கினேன். இத்தலைப்பினைத் தெரிந்தெடுத்ததற்குக் காரணம், 'தினம் ஒரு மனம் அதாவது, ஒவ்வொரு நாளும் ஒரு மனம்' என்றும், 'தினம் ஒரு மணம் அதாவது, ஒவ்வொரு நாளும் எனது வாழ்க்கையில் வீசும் மணம்' என்ற பொருள் பொதிந்ததினாலேயே. இச்சிந்தையே, பல பிரசங்க மேடைகளிலும், தனிப்பட்ட நபர்களுடன் நான் உரையாடும் பொழுதிலும் மற்றும் எனது தோல்விகளை அறிக்கையிட எனக்கு தோள் கொடுத்தது. வெற்றிகளில் வீர முழக்கமிடும்போது, என் தோல்விகளை முடக்கிவிட விரும்பவில்லை; தோல்வியிலிருந்து வெற்றிக்கு நேராக என்னை முடுக்கிவிட்டது எது என்பதை ஏட்டில் தெரிவித்தால் எல்லாரும் ஏறிவரலாமே. வாழ்க்கையின் அனைத்தையும் கொட்டவேண்டாம் என்றாலும், வெட்டிக் கொட்டலாமே! வாழ்க்கையின் வழிகளை அழித்துவிடாது, வாழ வருபவர்க்கு அதனை பாடமாக்கவேண்டும் என்ற நோக்கமே எனக்குப் பிரதானமானபோது, எனது வாழ்வின் தொடக்க காலத்திலிருந்து நிழலாக மாறிவிட்ட நிஜமான நிகழ்வுகளை அப்படியே இத்தலைப்பின் கீழ் பதிவு செய்யத் தொடங்குகின்றேன். 

    இந்தத் தொடரில் நான் எழுதும் அனைத்தும் ஏற்கனவே நான் பதித்து வைத்திருந்தவைகளிலிருந்து தொகுத்து எடுக்கப்பட்டவைகளே. எனது மனைவியை அன்றி மற்றவர்கள் எனது சரிதையை எனது மரணத்திற்குப் பின்னரே, அதுவும் தொகுத்து எடுக்கப்பட்டவைகளையே வாசிக்க அனுமதிக்கவேண்டும் என்ற விருப்பத்தினை மனைவியிடமும் பல நாட்கள் சொல்லியிருந்தேன். பல நூறு பக்கங்களைத் தாண்டிவிட்ட நிலையில், பல முறை அதனை எடுத்துப் பார்க்கும்போது, மனைவியிடம் நீ வாசித்துப் பார் எனக் கோருவேன். படுக்கையில் நான் விழுந்துவிட்டால், ஏடுகளில் பதிப்பதற்குப் பெலன் இருக்குமோ அல்லது மரணத்திற்குப் பின் யாராவது சரித்திரம் எழுதினால் நான் எழுதுவதைப்போல அது சரியாய் இருக்குமோ என்பதை சந்தேகித்துக்கொண்டிருந்த நிலையில், நான் உயிரோடு இருக்கும்போதே அதனைத் தொகுத்து வெளியிட தேவன் எனக்குக் கொடுத்த அனுமதியின்படி www.sinegithan.in என்ற இணையதளத்தில் இதனை வெளியிடுகிறேன். 

சிறு வயது முதல் எனது நினைவில் நின்ற பல நிகழ்வுகளையும், என்னைப் பாதித்த காரியங்களையும், அனுபவங்களையும், வெற்றிகளையும் மற்றும் உறவுகளையும் குறித்த தெரிந்தெடுத்த பல நிகழ்வுகளை உள்ளடக்கிய தொகுப்பே இது. வாழ்க்கை என்பது அழித்துவிடுவதற்கல்ல. மரணம் நமது நிகழ் உலக அத்தியாயத்தை நிறைவு செய்வதுபோலக் காணப்படலாம்; ஆனாலும், நமது எழுத்துக்களினால் நம்மைக் குறித்து தொடர்ந்து நமது காலத்திற்குப் பின்னும் வாழும் மானுட வர்க்கங்களுடன் பேசவேண்டும் என்ற எண்ணம் உயர்ந்ததல்லவா. எனது உடல் அழிந்துபோகும் முன்னரே உடலிருந்தபோது நினைத்த எனது நினைவுகளைப் பதித்துவிடுகிறேன். இது என்னைப் புகழ்பாட அல்ல, பெருமை பாராட்டும் பட்டையும் அல்ல; இறைவனோடு வாழும் எனது வாழ் நாட்களின் அனுதின அத்தியாயங்களே. இதன் ஒவ்வொரு பகுதியிலும், உன்னதருக்கே மகிமை, புகழ், கனம் மற்றும் கீர்த்தி அனைத்தும் உண்டாகட்டும். என்னைப் பற்றியதாயிருந்தாலும், தேவன் ஒரு வாலிபனைக் கண்டெடுத்து, மீட்டு இரட்சித்து, தெரிந்துகொண்டு வழிநடத்தி, தனக்காக்கிக்கொண்டு பயன்படுத்தும் பதிவே இத்தொடர். 

    இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, 'நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா' (யோவான் 19:19) என்று மேல்விலாசம் ஒன்றை பிலாத்து எழுதி இயேசுவின் தலைக்கு மேல் சிலுவையில் தொங்கவிட்டான். அதனைக் கண்ட யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான் (யோவா 19:21,22). எழுதிய மனிதன் உயிரோடு இருக்கும்போது, அவன் பதித்துவைத்த உண்மைகளை எதிரிகள் எதிர்த்து மாற்றிவிட எத்தணிப்பார்கள்; மாற்றி எழுதக் கோருவார்கள்; ஆனால், எழுதிவைத்த மனிதன் மரித்துவிட்டால் அவன் 'எழுதினது எழுதினதே'. நான் வந்த பாதையை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். வாழ்க்கையில் குறுக்கிட்டோரின் பெயர்களைக் குறிப்பிட்டால், அது நன்மையானவர்களை பாராட்டும் மற்றும் பொல்லாதோரை வதைக்கும். நான் எழுதுவது என்னைப் பற்றி, இதில் மற்றவர்களின் வாழ்க்கைக்குத் தீ வைத்துவிடக்கூடாது என்பதனை மனதில் கொண்டு, நலமானோரின் பெயரை மாத்திரம் வெளியிட்டு, மற்றவர்களை 'ஒரு மனிதன்' 'ஒரு வாலிபன்' 'ஒரு சகோதரர' 'ஒரு சகோதரி' 'ஒரு நபர்' 'ஒரு தாய்' 'ஒரு பெரியவர்' 'ஒரு ஊழியர்' 'ஒரு பெண்' என்றே எழுதுகின்றேன்; என்றபோதிலும், இவர்களது பெயர் அனைத்தும் எனது உண்மை நகலில் பதிக்கப்பட்டிருக்கின்றது; உலகத்தாருக்கு அவைகள் பறைசாற்றப்படவேண்டிய அவசியமில்லை, அது பக்திவிருத்திக்கேதுவானதுமில்லை. 'ஒரு வாலிபன்' என எழுதியிருப்பதை, சீஷர்கள் இயேசுவினிடத்தில் கேட்டதுபோல, 'நானோ, நானோ' (மத் 26:22) என சிந்தித்து குழம்பும் மக்கள் தங்களையே அடையாளம் கண்டுகொள்ள முற்படவேண்டாம்; அது முரண்பாடாகவும் தவறாகவும் அமைந்துவிடும். மற்றவர்களைக் காட்டிக்கொடுக்க அல்ல, என்னை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கவே இதனை எழுதுகிறேன்.  இதனை நகல் எடுக்க எவருக்கும் உரிமை உண்டு ஆனால் கருத்துக்களை உட்புகுத்தவோ, திருத்தம் செய்யவோ அனுமதி இல்லை. எனது அறிவிற்கும் மற்றும் பிறப்பிற்கும் முன்னான தகவல்களை உள்ளடக்கிய தொடக்க கால அத்தியாயங்களில் நான் எழுதியிருப்பவைகள், அதாரப்பூர்வமான தகவல்கள், புத்தங்கள், காலம் சென்ற பல பெரியோர் வாய் மொழியினையும் மற்றும் பலரிடம் நான் கேட்டறிந்ததையும் உள்ளடக்கியது. எனது வீடு செந்தியம்பலத்தில் இருந்தாலும், வரலாறு அங்கே தொடங்கவில்லை. எங்கோ இருந்த மனிதர்கள் நதியாய் ஓடிவந்து கூடி குளமானதுதான் தூத்துக்குடி மாவட்டத்தின், சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்திலுள்ள செந்தியம்பலம் எனும் சிறிய கிராமம். செந்தியம்பலத்தில் இன்று எனக்கு சொந்த நிலம், ஆனால் என் முற்பிதாக்களுக்கோ அவர்கள் வந்த நிலம். வாருங்கள் எனது முற்பிதாக்கள் எங்கே இருந்தார்களோ அங்கே இருந்தே தொடங்குகிறேன்.


P. J. கிருபாகரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக