வெள்ளி, 6 மே, 2022

இடையில் வந்த இளைஞன்

இடையில் வந்த இளைஞன்


காரைக்குடியிலுள்ள அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (1992) பயின்றுகொண்டிருந்தேன். அக்டோபர் 1, 1992 அன்று கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், பெற்றோரைக் காண செந்தியம்பலம் வந்திருந்தேன். அன்று காலையில் வண்டிப்பாதை என்று சொல்லப்படும் செந்தியம்பலத்தின் பிரதான தெருவில் நான் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, ஜெபக்குழுவிற்கு தவறாது சென்றுகொண்டிருந்த வெலிங்டன் பிரபாகர் என்ற தம்பி என்னைச் சந்தித்தான். ஜெபக்குழுவிற்கு வரும்படி எனக்கு அன்புடன்அழைப்பு விடுத்தான். அவனது அழைப்பை நிராகரித்துவிட மனம் நினைத்தபோதிலும், 'அண்ணன் நீ வா' என்று அவன் சொன்ன அன்பின் சிறைக்குள் என் மனம் சிக்கிக்கொண்டது. மனமில்லாதிருந்தபோதிலும், வருகிறேன் என்று பதிலுரைத்தேன்; என்றபோதிலும், கையைத் தூக்கு என்றோ, ஜெபியுங்கள் என்றோ, இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று ஜெபத்தின்போது யாராவது கேட்டாலோ, தம்பி நீ இன்று இரட்சிக்கப்படு என்று யாராவது சொன்னாலோ எனக்குப் பிடிக்காது; எழுந்து வந்துவிடுவேன் என்ற வார்த்தைகளையும் என் பதிலோடு கூட்டிச் சொன்னேன். அவனை ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக அன்று மாலை ஐந்து மணிக்கு செந்தியம்பலத்திற்கு வடக்கேயுள்ள தேரியில் நடந்துகொண்டிருந்த ஜெபக்குழுவில் கலந்துகொள்ளச் சென்றேன். தூரத்தில் விராலிச் செடிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு ஜெபக்குழு நடந்துகொண்டிருப்பதைக் கண்டேன். போவோமா, திரும்பிவிடுவோமா என்ற இருமனம் என்னை பின்னுக்கு இழுத்தது, அதிலிருந்து விடுபட்டு முன்னேறி ஜெபக்குழுவை சென்றடைய என்னோடு நானே யுத்தம் செய்யவேண்டியதாயிற்று. 

ஒருவழியாய் ஜெபக்குழுவை நெருங்கினேன்; செந்தியம்பலம், ராயப்பபுரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கேல் அன்று ஜெபக்குழுவை நடத்திக்கொண்டிருந்தார்; சொற்ப வாலிபர்கள் சுருங்கிய வட்டத்தில் முழங்காலில் நின்று ஜெபித்துக்கொண்டிருந்தனர். அந்த வட்டத்திற்குள் என்னையும் நுழைத்துக்கொண்டு இரு வாலிபர்களுக்கு இடையே முழங்காற்படியிட்டேன். என்னை யாரும் ஜெபிக்கும்படி நிர்பந்தித்துவிடக்கூடாது, மேலும் எதற்காகவும் கை உயர்த்துங்கள் என்று சொல்லிவிடக்கூடாது என்ற பயம் எனது இதயத்துடிப்பை அவ்வப்போது அதிகரிக்கச் செய்தது. முழங்காலில் நின்றாலும், மெல்ல கண்களைத் திறந்து முழங்காலில் நின்ற வாலிபர் வட்டத்தை எட்டிப் பார்த்தேன், என்னைத் தவிற அத்தனை வாலிபரும் கண்களை மூடி ஜெபித்துக்கொண்டிருந்தனர். அப்போது, என் மனதிற்குள் இருந்த ஓர் வெற்றிடம் என் கண்ணில் பட்டது. அத்தனை வாலிபர்களும் அங்கு சந்தோஷமாய் ஜெபித்துக்கொண்டிருந்தபோது எனது மனதிலோ சோகம் அதிகமானது; சொர்க்கத்தின் பாதைக்கும் எனக்கும் இருக்கிற தூரத்தை அப்போது உணரத்தொடங்கினேன், அந்த தூரத்திற்குக் காரணம் பாவமே என்று உணர்ந்தேன்; இவர்களைப்போல நானும் சந்தோஷமாக ஜெபிக்கவேண்டுமே என்ற விருப்பம் என் மனதில் உண்டாயிற்று, அந்த விருப்பம் என் பாவ மதிலை உடைத்தெறிந்தது. வாய்விட்டு பாவங்களை அறிக்கை செய்து இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற வகைதேடினேன்; 1 அக்டோபர் 1992 அன்றே அதனைப் பெற்றும்கொண்டேன். அந்த சுருங்கிய வாலிபர் கூட்டத்தில் நானும் நெருங்கிய உறுப்பினராக மாறினேன். அன்று முதல் ஜெபக்குழுவிற்கு தவறாது செல்லத் தொடங்கினேன், ஜெபக்குழு நண்பர்களுடன் பல கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். இயேசுவுக்காக வாழவேண்டும் என்ற வைராக்கியம் உள்ளத்தில் துளிர்விடத் தொடங்கியது. ஜெபக்குழுவின் நண்பர்களுடன் என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன். முழு இரவு ஜெபங்களில் அவர்களுடன் பங்கெடுத்தேன். ஆலயத்தில் நடைபெறும் முழு இரவு ஜெபத்தில் ஜெபக்குழு வாலிபர்களுடன் இணைந்து பாடல்பாடவும், ஆராதனை நடத்தவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 


தொடக்க கால ஜெபக்குழு நண்பர்கள்


இடமிருந்து வலம், சகோ. ஜெபராஜன் (ECI), சகோ. பாலு (Hosur), சகோ. ஜெனிபர் (Jharkhand), சகோ. ரவி (CSI), சகோ. செல்வின்துரை (IMS), சகோ. முத்துசாமி, சகோ. செல்வன் (Red Cross Ministries), சகோ. ஜான்சன், சகோ. அருள்தாஸ், சகோ. காந்தி, சகோ. மகிபா, சகோ. பாபு ராஜரீகன் (GEMS)



ஜெபக்குழு நடைபெற்ற தேரிக்காடு







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக