ஞாயிறு, 7 மே, 2023

தொழிற்பயிற்சி மையத்தில் ஒரு தொடக்கம்

 தொழிற்பயிற்சி மையத்தில் ஒரு தொடக்கம்



ஒரு வழியாக அன்றைய இரவினைக் கழித்துவிட்டு, டிசம்பர் 6, 2002 காலையில் எழுந்து அந்த நாளுக்காக ஆயத்தமானேன். பக்கத்து வீட்டிலிருந்து பறிமாறப்பட்ட காலை உணவினை உண்டு முடித்து, ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தைச் சென்றடைந்தேன். அப்போது ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாஸன் என்னை அன்புடன் வரவேற்று, என்னை விசாரித்து, தொழிற்பயிற்சி மையத்தில் எனக்கான பணியினையும் விவரித்துச் சொன்னார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக ஆரம்பமானது எனது மிஷனரிப் பணி. ஆசிரியர் பணியில் ஆவல் அதிகமுள்ள எனக்கு, மாணவர்களைக் கண்டதும் மனம் நிறைந்திருந்தது. எனினும், ஹிந்தி மொழியினை நான் அறியாதிருந்ததது, மாணவர்களோடு ஒன்றுவிட்டு உரையாட முட்டுக்கட்டையாவேயிருந்தது. ஆங்கிலத்திலேயே அங்கிருந்தவர்களோடு முடிந்தவரை காரியங்களைப் பகிர்ந்துகொள்ள முயற்சித்தேன்; எனினும், அது அந்நிய மொழி என்பதை அவர்களது முகங்கள் என்னிடம் சொல்லிக்கொண்டேயிருந்தன. தொழிற் பயிற்சி மையத்தில் உடன் பணியாற்றிக்கொண்டிருந்த பீஹார் மாநிலத்தின் ஆசிரியர்களைப் புரிந்துகொள்ளவும் சற்று கால அவகாசம் எடுத்தது எனக்கு; எனினும், தேவனது கிருபையினால் சீக்கிரத்தில் அது சாத்தியமாயிற்று. ஆசிரியர்களோடு மாத்திரமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களுடனும் உரையாடி உரையாடி ஹிந்தி மொழியினைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன் நான். மாணவர்களைக் கையாள்வதில் விருப்பமும் ஆர்வமும் என்றும் எனக்கு விலகாதது; எனவே, மாணவர்களை வசப்படுத்திக்கொள்வது என்பது எனக்கு கடினமாயிருக்கவில்லை. ஒவ்வொரு நாள் வருப்பறையிலும், பாடங்களைத் தெடங்குவதற்கு முன், மாணவர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற பாதைகளைக் காட்டும் சில சிந்தனைக்குரிய காரியங்களைச் சொல்லிவிட்டுத் தொடங்குவது மாணவர்களை என்பக்கம் ஈர்த்திருந்தது; சுவிசேஷத்தின் சாற்றினையும் அவர்கள் உள்ளத்தில் ஊற்ற அது அவர்களது உள்ளத்தை ஈரமாக்கியது. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களுடனான ஐக்கியமும் என்னை அவர்களுள் ஒருவனாக்கிற்று. இதனால், மாணவர்கள் சிலரின் குடும்பத்தில் ஒருவனாகவும் மற்றும் உடன்பிறந்த மூத்த சகோதரனாகவும் நான் எண்ணபட்டது ஆண்டவரால் அருளப்பட்ட பாக்கியம். ஒருமுறை, வெளியூரிலிருந்து இரவு நான் கருவந்தியா வந்தபோது, மாணவர்களில் சிலர் ரயில் நிலையத்திற்கு வந்து என்னை அழைத்துச் சென்று, அவர்கள் சமைத்துவைத்திருந்த உணவினைப் பரிமாறி, என்னோடு கூட ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிகழ்வு நினைவினை விட்டு இன்னமும் நீங்காதது.

கருவந்தியா ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் நான் பணியாற்றிய நாட்களில், உடன் பணியாற்றிய ஆசிரியர்களும் மற்றும் உள்ளே பயின்ற மாணவர்களுமே அப்போது எனக்குக் கிடைத்த உறவினர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதும், அன்பினைப் பரிமாறிக்கொள்வதும், அவர்களை விசாரிப்பதும் மற்றும் என்னால் இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் அவர்களுக்கு அளிப்பதை அவ்வப்போது நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்; உள்ளூர்வாசிகளான அவர்களிடமிருந்தும் அநேக உதவிகளையும் ஒத்தாசைகளையும் அங்கிருந்த நாட்களில் அன்புடன் நான் பெற்று அனுபவித்தது மறக்க இயலாதது. கிராமவாசிகளான அவர்களுடன் உரையாட ஆரம்ப நாட்களில் என் உதடுகளில் மொழி இல்லை; என்ற போதிலும், "அன்பிற்கு அடைக்கும் தாழ் உண்டோ" என்ற வழக்கின்படி, என் இல்லத்திற்கும் அவர்கள் இல்லத்திற்கும் இடையிலான போக்குவரத்தும் மற்றும் போஜனமும் அவ்வப்போது தொடர்ந்துகொண்டிருந்தன. இதனால், தமிழகத்தை விட்டு பிஹாரில் இத்தனை தூரத்தில் இருக்கிறோமே என்ற தனிமை உணர்வு தகர்ந்துபோனது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக