சுவிசேஷ ஊழியம்
சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்துடன் ஜெபக்குழு நண்பர்களின் உறவு தொடர்ந்தது. அந்நாட்களில், சாயர்புரம் முழு இரவு ஜெப ஐக்கியத்தின் அலுவலகத்தில் சிறியதோர் நூலகம் அமைக்கப்பட்டிந்தது. சாயர்புரம், ஏற்காடு தெருவில் அமைந்திருந்த அதன் அலுவலகத்தில் வெளி அறை அலுவலகம் மற்றும் நூலகமாகவும், உள்ளறை ஜெப அறையாகவும் இருந்துவந்தது. அந்நாட்களில், சகோதரர் விஜயகுமார் அந்த நூலகத்தைக் கண்காணித்து வந்தார். சாயர்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள ஊர்களில் வாழும் மக்களும், சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெபத்திற்கு மாதா மாதம் வருகை தரும் மக்களும் அந்த நூலகத்தைப் பயன்படுத்திவந்தனர். நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் நண்பர்களுக்கும் அந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கியத்தின் அலுவலகத்தில் அவ்வப்போது நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் நாங்கள் பங்கேற்கத் தொடங்கினோம். ஆத்துமாக்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும் உபவாசித்து ஜெபிக்கும் தருணம் எங்களுக்குக் கிடைத்தது. அத்துடன், சுவிசேஷப் பணியிலும் அவர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது.
மாதம் ஒருமுறை தூத்துக்குடி - திருநெல்வேலி இடையிலுள்ள வல்லநாட்டை ஒட்டிய கிராமங்களுக்கு சாயர்புரம் வட்டார முழு இரவு ஜெப ஐக்கிய சகோதரர்கள் சென்று தொடர்ச்சியாக சுவிசேஷத்தினை அறிவித்துவந்தனர். ஞாயிறு மாலை 2 மணி அளவில் சாயர்புரத்திலிருந்து புறப்பட்டு, சுமார் மூன்று மணியளவில் கிராமத்தைச் சென்றடைவோம். ஒருமுறை, ஓர் கிராமத்திற்கு அவர்களுடன் நான் சென்றிருந்தபோது, ஒரு முதியவர் உடலைத் தடவி, தடவி தட்டிக்கொண்டேயிருந்தார். அந்த முதியவரின் வீட்டிற்கு நாங்கள் சென்று ஜெபித்தோம். நாங்கள் ஜெபித்தபோது, அந்த முதியவரின் வீட்டில் வெளியில் கட்டப்பட்டிருந்த சேவல் கூவிக்கொண்டேயிருந்தது. ஜெபத்தை முடித்ததும், சகோதரர் ஒருவர் அந்த முதியவரிடம் சேவலைக் குறித்து கேட்டபோது, அந்த முதியவர்: அந்த சேவலை சாமிக்கு நேர்ந்து விட்டிருக்கிறேன் என்று சொன்னர். ஒரு சில மாதங்கள் தொடர்ந்து அந்த முதியவரின் வீட்டிற்கு சென்று ஜெபிக்க அந்த முதியவர் விடுதலை பெற்றுக்கொண்டார். அதே கிராமத்திலுள்ள, மற்றும் ஒரு வீட்டிற்கு நாங்கள் ஜெபிக்கச் சென்றிருந்தோம், அந்தக் குடும்பத்திற்காக யாராவது ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது, நான் ஜெபிக்கத் தொடங்கினேன்; முக்கால்வாசி ஜெபத்தை அந்நியபாஷையிலேயே ஜெபித்து முடித்தேன். நாங்கள் அந்த கிராமத்தின் ஊழியத்தை முடித்து, வாகனத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபோது, சகோதரர் பக்கிள்துரை என்னை அழைத்து, 'சுந்தர், நீ இன்னும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரணும்' என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார், எதற்காக அப்படிச் சொன்னார் என்று மனதில் நினைத்துக்கொண்டேயிருந்த நான், 'ஆவிக்குரிய வாழ்க்கையில் எனக்கு வளர்ச்சி தேவை' என்ற வாக்கியத்தை மட்டும் மனதில் கொண்டவனாக; வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதில் தீவிரித்தேன். சமுதாயத்தில் உயர்ந்த குடும்பங்களில் உள்ள சகோதரர்கள் பலர் சுவிசேஷத்திற்காகவும், சுவிசேஷம் அறிவிப்பதற்காகவும் தங்களையே ஊற்றி உழைத்ததையும், பேதமின்றி ஒன்றாக இணைந்து நின்றதையும் சாயர்புரம் முழு இரவு ஜெப ஐக்கியத்தில் கண்ட எங்களுக்குள்ளும் எழுச்சி உண்டானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக