'நண்பர்கள் ஜெப ஐக்கியம்'
பெயரும், தொடர்ச்சியும்
1995-ம் ஆண்டு, ஜெபக்குழு நண்பர்கள் ஒன்று கூடி, வரும் நாட்களில் ஜெபக்குழுவினை ஒரு பெயருடன் நடத்த திட்டம்பண்ணினோம். அச்சிந்தனையின்படி, நண்பர்களாக ஜெபத்தில் தரித்திருந்து “நண்பர்கள் ஜெப ஐக்கியம்” என்று பெயரிட்டோம். ஜெபக்குழுவிற்குப் புதியதோர் பெயரைச் சூட்டியதும், ஜெபக்குழு நண்பர்களுக்கும் புத்துணர்ச்சி கிளர்ந்தெழுந்தது. ஏதோ, ஒரு ஊழியத்தைத் தொடங்கிவிட்ட மனப்பாங்கு ஒவ்வொரு நண்பர்களிடத்திலும் தென்பட்டது. அந்நாட்களில் நான் சென்னையில் எண்ணூர் பவுண்டரீஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். மேற்கு மாம்பலத்தில் எனது இரண்டாவது அண்ணன் திரு.ஜேசன் உடன் தங்கியிருந்தேன். தினமும், மேற்கு மாம்பலத்திலிருந்து எண்ணூரில் உள்ள தொழிற்சாலைக்கு ரயில் வண்டியில் சென்று வருவேன். தொழிற்சாலையிலும் ஜெபிக்கும் நண்பர்கள் எனக்குக் கிடைத்தனர். அங்கும் சில வாலிபர்கள் ஜெபக்குழுக்களை நடத்திக்கொண்டிருந்தனர் (நண்பர்கள் ஜெப ஜக்கிய ஜெபக்குழு அல்ல). அவர்களுடன் எனக்கு நல்லதோர் தொடர்பு உண்டாயிருந்தது. தினமும் எண்ணூரிலிருந்து வரும் வழியில், மாலை நேரமாயிருப்பின், எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள அண்டுரூஸ் ஆலயத்திற்குச் சென்றுவருவது எனது வழக்கமாயிருந்தது. ஆலயம் பூட்டப்பட்டிருந்தாலும், ஆலயத்தின் படிகளில் முழங்காற்படியிட்டு சுமார் ஒரு மணி நேரம் ஜெபித்துவிட்டு வீடு திரும்புவேன். அந்த ஆலயத்தின் காவற்காரர் மற்றும் ஆலயத்தின் வளாகத்தில் விளையாண்டுகொண்டிருக்கும் பலரது கண்ணுக்கும் நான் தென்படலானேன். அண்டுரூஸ் ஆலயத்தை ஒட்டியுள்ள எழும்பூர் தினத்தந்தி செய்தித்தாள் அலுவலகத்தில், செந்தியம்பலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பலர் பணிபுரிந்து வந்தனர் அவர்களையும் அவ்வப்போது சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்நாட்களில். சென்னையில் பணிபுரிந்துகொண்டிருந்த, செந்தியம்பலத்தைச் சேர்ந்த சகோதரன் எபநேசர் வில்லியத்தைச் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த சகோதரன் செந்தியம்பலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், செந்தியம்பலம் ஜெபக்குழுவிற்கு வருபவரல்ல. எழும்பூர் ஆண்டூரூஸ் ஆலயத்தின் வளாகத்தில் சகோதரன் எபநேசர் வில்லியத்தை அடிக்கடி நான் சந்தித்தபோது, ஜெபக்குழுவைப் பற்றி அச்சகோதரனிடம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கூறிவந்தேன்: நாட்கள் செல்லச் செல்ல, அச்சகோதரனுக்குள்ளும் ஜெபக்குழுவைப் பற்றிய வாஞ்சையும் விருப்பமும் உண்டானது. நண்பர்கள் ஜெப ஜக்கியத்தைப் பற்றிய தாகம் எங்கள் இருவரிடையே வளரத் தொடங்கியது. ஒருநாள் ஆலயத்தின் வளாகத்தில் அமர்ந்தவர்களாக, நண்பர்கள் ஜெப ஐக்கியத்திற்கான ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் பிற காரியங்களைச் செய்ய இருவரும் தீர்மானித்து, ரப்பர் ஸ்டாம்பினைத் தயாரித்தோம்.
தொடர்ச்சியாக, ஆலயத்தை ஒட்டியிருந்த தினத்தந்தி அலுவலகத்தில் பணிபுரியும் செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களையும் ஒருங்கிணைத்து, கூடி ஜெபிக்கத் தொடங்கினோம். சென்னையிலும் நண்பர்கள் ஜெப ஐக்கியம் செயல்படத் தொடங்கிவிட்டதைக் கண்ட எங்களுக்குள் உண்டாயிருந்த பூரிப்பிற்கு அளவில்லை. ஒருநாள் எழும்பூர் ஆண்டூரூஸ் ஆலய வளாகத்தில் நாங்கள் குழுவாக ஜெபித்துக்கொண்டிருந்தோம். அநேக வாலிபர்கள் அங்கும் இங்குமாக வளாகத்தினுள் கிரிக்கெட் விளையாண்டுகொண்டிருந்தனர். அப்போது, அங்களை நோக்கி வந்த ஒரு மனிதர், தன்னை அந்த ஆலயத்தின் பொறுப்பாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு, இங்கு ஜெபிக்கக் கூடாது, என எங்களைத் தடுத்தார். எனக்கோ, ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! ஆலய வளாகத்தில் கிரிக்கெட் வியாட அனுமதி உண்டு, ஆனால் ஜெபிக்க அனுமதி இல்லையா! என்ன நடக்கிறது இங்கே என உள்ளம் பொறுமினேன். அந்த ஆலயத்தின் ஆராதனையில் நான் ஒருபோதும் பங்குபெற்றதில்லை: அது ஓர் ஆங்கில ஆராதனை நடைபெறும் ஆலயம். ஜெபிப்பதற்கு தடைசெய்ப்பட்டதைக் கண்ட நான், ஒருமுறை அந்த ஆலயத்தின் ஆராதனையில் பங்குபெற நினைத்து. அடுத்த ஞாயிறு அன்று ஆராதனைக்குச் சென்றேன். ஆராதனை முடிந்த பின்னர். போதகரைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். நான் எண்ணூர் பவுண்டரீஸ் தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், வழக்கமாக ஆலயத்திற்கு வந்து ஜெபித்துவிட்டு செல்வதாகவும் நான் சொல்லி, நாங்கள் குழுவாக இந்த வளாகத்தில் ஜெபிப்பதற்கு ஏதாகிலும் தடை உண்டா? என்று கேட்டபோது, அவர் தாராளமாகச் செய்யுங்கள், ஜெபிப்பதற்கு தடை ஏதும் இல்லை என்று சொன்னார். சந்தோஷத்தோடு வீடு திரும்பினேன். நானோ, தினம் தினம் அந்த ஆலயத்தின் படிகளில் தொடர்ந்து ஜெபித்துவிட்டு சென்றுகொண்டிருந்தேன் வாரம் ஒருமுறை ஞாயிறு அன்று மாலையில் நண்பர்களைக் கூட்டி ஜெபக்குழுவாக இணைந்து ஜெபித்துவந்தோம்.
ஜெபக்குழுவின் முக்கியமான சில நிகழ்வுகளையும், ஜெபக்குறிப்புகளையும் சென்னையில் உள்ள நண்பர்களுக்கு தபால் அட்டையின் (post card) மூலமாகத் தெரியப்படுத்தி வந்தோம். ஒவ்வொரு தபால் அட்டையிலும் நண்பர்கள் ஜெப ஐக்கியம் என்ற முத்திரையைக் குத்தும்போது அப்போது எனக்கும், எபநேசர் வில்லியத்திற்கும் இருந்த ஆனந்தம் வர்ணிக்க இயலாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக