புதன், 6 அக்டோபர், 2021

பரி. மாற்குவின் ஆலயம்

   தினம் ஒரு மணம்

(P.J. கிருபாகரன்)


மண், மதில், மடி

(கிராமம், வீடு, பெற்றோர்)


பரி. மாற்குவின் ஆலயம்





    மண்ணைக் குறித்து நான் எழுத நினைக்கும்போது, ஆலயமே அதற்கு அஸ்திபாரமாக விளங்கியது என எண்ணும்போதெல்லாம் தேவனைத் துதிக்கின்றேன். அந்நாட்களில், வெவ்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாகப் பிரிந்த வாழ்ந்து வந்த எனது முன்னோரில் பலர் விக்கிரகங்களை வணங்குவதை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். சிலரோ விக்கிரகங்களை வணங்குகிறவர்களாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். விக்கிரகங்களை வணங்கிவந்தவர்கள், சாயர்புரத்திற்கு அருகே அமைந்திருக்கும் நட்டாத்தி என்னும் ஊருக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ள விக்கிரகக் கோவிலுக்கு அவ்வப்போது திருவிழாக்கள் நடத்த கூடுவதும், சாமி கும்பிட வருகை தருவதும் அன்றைய நாட்களில் வழக்கமாயிருந்தது. என்னுடைய ஜனத்தாரில் மூத்த மனிதர்களுள் ஒருவரான திரு. நம்மாழ்வார் சுப்பிரமணியபுரத்தில் வசித்துவந்த நாட்களில், இயேசுவை ஏற்றிருந்த உறவினர்களர் சிலரும் அப்பகுதியில் ஒரே கூட்டமாகக் குடியேறத் தொடங்கினர்.  சிலரோ, விக்கிரகங்களை வணங்குகிறவர்களாகவே அப்பகுதியில் தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து, தற்போது இருக்கும் கிராமத்தில் குடியேறினர். இவர்கள் குடியேறும்படியாக 'மணியாச்சி ஜமீன்' என்பவரே இந்த நிலத்தினை வழங்கினார் என்ற வரலாறும் உண்டு. 

போப் சாயர்புரம் பகுதிக்கு மிஷனரியாக வருவதற்கு முன்னர், 17-ம் நூற்றாண்டின் முடிவில் அப்பகுதிக்கு வந்த ஆங்கிலேய மிஷனரிகள் இக்கிராமத்தினரின் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை கொண்டு, தினமும் சந்தித்து, சுவிசேஷம் அறிவித்து அத்துடன் வேதத்தையும் முறைப்படி போதித்து வந்தனர். இதன் விளைவாக, விக்கிரகங்களை விட்டுவிட்டு, இயேசுவையே தங்கள் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கினர் செந்தியம்பலம் கிராமத்தில் வாழ்ந்துவந்த எனது முன்னோர்கள். பூர்வத்தில் வைணவ மதத்தைப் பின்பற்றியபோது, விக்கிரகங்களை முறைப்படி வணங்கி, தினமும் ஆராதித்த, வணங்கிய வழக்கமும் பழக்ககமும் அனுபவமும் உடைய இவர்கள், மெய் தேவனென்று அறிந்துகொண்ட இயேசுவையும் தினமும் ஆராதிக்க ஆவல்கொண்டு, தங்கள் கிராமத்தில் தாங்கள் ஆராதிக்க சிறிய குடிசை ஒன்றினை பனை ஓலையினால் உருவாக்கியிருந்தனர். ஆங்கிலேய மிஷனரிகளின் வருகையினால் அது பின்நாட்களில் ஆலயமாக உருப்பெற்றது; அதுவே பரி.மாற்குவின் ஆலயம். 

பக்தியுடன் தினமும் அவ்வாலயத்தில் ஒழுங்காக அனுதினம் ஆராதனை செய்துவந்தனர் செந்தியம்பலம் கிராமத்தின் மக்கள். ஜனங்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் கண்ட ஆங்கிலேய மிஷனரிகள் அச்சிறு ஆலயத்தினை பிரதிஷ்டை செய்ய விரும்பினர். பரி.மாற்குவின் நாளாகிய ஏப்ரல் 25 அன்று இச்சிறு ஆலயம் ஆங்கிலேய மிஷனரிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், அது பரி.மாற்குவின் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது அக்கிராமத்தினரால் 'பழைய கோவில்' என்றும் அடையாளமாக அழைக்கப்பட்டுவருகிறது. எனது அறிவின்படியும், வரலாற்றுப் புத்தகங்களின் ஆதாரங்களின்படியும் செந்தியம்பலம் ஆலயம் C.T.E. ரேனியஸ் அவர்களால் 1828 -ம் ஆண்டு கட்டப்பட்டது. ரோஷன் ஐயர்  1830 - ம் ஆண்டு இப்பகுதிக்கு வந்ததாகவும், ஓர் ஆலயத்தில் தங்கியிருந்து ஊழியம் செய்ததாகவும் தனது குறிப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ள, மண் சுவற்றில் ஓலைக் குடிசையினால் உருவாக்கப்பட்டிருந்த 22 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டிருந்த இப்பகுதியின் முதல் ஆலயம் இதுவே.

பிறந்தது முதல் இந்த ஆலயத்தின் ஆராதனைகளிலேயே பங்குபெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஞாயிறு காலை ஆராதனைகளிலும் மற்றும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாலை ஆராதனைகளிலும் தவறாமல் பங்கு பெற என் தாயார் என்னை பழக்கப்படுத்தினதை நினைத்து ஆண்டவரைத் துதிக்கின்றேன். சிறு வயது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வரை இந்த ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு ஞாயிறு ஆராதனையிலும் தவறாமல் திருவசனத்தை மனப்பாடம் செய்து சொல்லியிருக்கிறேன். திருவசனத் தேர்விலும் பங்கேற்று வெகுமதியினைப் பெற்றிருக்கிறேன். வீடுகளில் நடைபெறும் ஜெபக்கூட்டங்களுக்கு ஆலயத்திலிருந்து கொட்டு அடித்தவர்களாக பாடல் பாடிக்கொண்டு, அரிக்கன் லைட்டினைப் பிடித்தவாறு சபையாரோடு கூட்டமாக நடந்து சென்ற அனுபவம் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒன்று. 

நான் சிறுவனாயிருந்தபோது, அத்தகைய வீட்டு ஜெபக்கூட்டங்களுக்குச் செல்ல பிடிவாதம் பிடிப்பேன் என்று என் தாயார் என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனது அக்கா திருமதி. ஜான்ஸியின் கையைப் பிடித்துக்கொண்டு எப்படியாவது சென்றுவிடுவேன். ஜெபக்கூட்டம் தொடங்கினதும் சிறிது நேரத்தில் தூங்கிவிடும் என்னை, இடுப்பில் தூக்கியவாறு எனது அக்கா பலமுறை வீட்டிற்கு தூக்கிவந்ததாகவும் கூறக் கேட்டிருக்கிறேன். 

வீட்டு ஜெபக்கூட்டங்களில் நடைபெறும் மற்றொரு உணர்ச்சி ததும்பும் நிகழ்வினையும் நான் நிச்சயம் பதிவு செய்தே ஆகவேண்டும். ஆம், பாடல் வேளை மற்றும் பிரசங்கவேளை முடிந்ததும், ஜெபக்கூடுகையில் பங்கேற்றோருக்கு இனிப்போ அல்லது திண்பண்டங்களோ வழங்குவதற்காக தங்களால் இயன்ற பொருட்களைக் வீட்டார் கொண்டுவந்து உபதேசியார் முன்போ அல்லது குருவானவரின் முன்போ வைப்பார்கள்; அவர்கள் ஜெபித்ததும், கோயில் உதவியாளர் அதனை கூடிவந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். அந்நேரத்தில், ஜெபக்கூட்டத்தில் சிறுவர்களின் பாடல் சத்தம் சற்று பலமாயிருக்கும், கை தட்டலும் சற்று தூக்கலாகவே கேட்கும்.   


வீட்டை விட்டு விரட்டும் வில்லியம் தாத்தா


பரி. மாற்குவின் ஆலயத்தைக் குறித்து நாம் எழுத நினைக்கும்போது, எனது வீட்டின் அருகில் வசித்துவந்த வில்லியம் தாத்தாவே எனக்கு முதலில் நினைவுக்கு வருகின்றார். நான் சிறுவனாயிருந்தபோது, சேட்டை செய்யும் சிறு பிள்ளைகளை அவர் கிள்ளுவதால், அவரை (கி)நுள்ளி தாத்தா என்றே நாங்கள் அழைப்பது வழக்கம். சில நேரங்களில் சிறுபிள்ளைகளைப் பயமுறுத்த, இடுப்பை வளைத்தவாறும் மற்றும் கால்களைச் சரித்தவாறும் அவர் குந்தி குந்தி குதித்து குதித்து நடந்துவரும் காட்சியோ அழகின் மேல் அழகுதான். அந்நாட்களில் செந்தியம்பலத்திற்கு அருகில் உள்ள லூக்காபுரம் கிராமத்தின் நுழைவில் காணப்பட்ட சூச்சப்பரைக்குச் (நெசவாளர்கள் நெசவிற்காக நூல்களை ஆயத்தப்படுத்தும் அறை) அவர் பணிக்காகச் சென்றுவருவது வழக்கம். எனவே, அந்த சூச்சப்பறையைக் கடந்து செல்லும்போது உள்ளி தாத்தா உள்ளே இருக்கிறாரா? என்று சிறுவர்கள் எட்டிப்பார்ப்பதும் உண்டு. சில சேட்டைக்கார சிறுவர்கள், 'நுள்ளி தாத்தா' என்று கூப்பிட்டுவிட்டு ஓடிவிடுவதும் உண்டு. ஒரு வேஷ்டி மற்றும் தோளில் துண்டு, இதுதான் அவரது அனுதின சீருடைய. வழுக்கைத் தலையாகக் காணப்படும் அவர், சில நேரங்களில் அதனை தலைப்பாகையாகவும் கட்டிக்கொண்டு கம்பீரமாக தெருவில் நடந்துவருவார். சிறியதோர் குடிசையில், தித்தொழிலின் மூலம் கிடைக்கும் அனுதின வரவின் மூலம் தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தாலும், ஆண்டவரைத் தேடும் விஷயங்களில் அவரோ பிறருக்கு பாடம் கற்பிக்கும் ஓர் ஆசானே. ஆம், ஞாயிறு அன்று ஆலயத்தில் முதல் மணி அடிக்கத் தொடங்கினதும், எங்கள் வீட்டின் பக்கத்திலிருக்கும் அவர் சத்தமாகப் பாட்டுப் பாடத் தொடங்கிவிடுவார். அதிலே இன்னும் என்னால் மறக்க இயலாத ஓர் பாடல், 

'முதல் மணி அடிச்சாச்சே தங்கம் 

முந்தி கோவிலுக்குப் போனா, 

அங்க முதன்மையா இருக்கலாம் கண்ணு, 

பிந்தி கோவிலுக்குப் போனா 

அதில் பிரயோஜனம் ஒன்னுமில்ல கண்ணு, 

ஆவல்ல கோவல்ல, 

நீ வரல நான் வரல ன்னு சண்ட போடாத கண்ணு' என்ற பாடலே அது. 

அதுமாத்திரமல்ல, சபையார் வீடுகளில் ஜெபக்கூட்டங்கள் நடைபெறும்போது, ஜெபக்கூட்டத்தின் முடிவில் அதாவது பால், பிரசங்கம் எல்லாம் முடிந்தபின் இறுதியில், கடைசி பாடல் பாடி நிறைவு செய்யும் வேளையின்போது, 'தேவ நாம சங்கீர்த்தனம், தேவா, தேவா' என்று அவர் ஒவ்வொரு முறையும் ஓங்கிய சத்தத்துடன் அவர் உரக்கக் கூறும் வார்த்தைகளை இன்றும் அவரை நினைக்கும்போது எனது காதுகள் கேட்கத்தான் செய்கின்றன; ஆம், அது அவருக்கே உரிய உச்ச ஸ்வரத் தொனி. அவரது மரணத்திற்குப் பின் இதனை மற்றவர்கள் கூற முற்பட்டபோதிலும், அது தொடர்ச்சியாகத் தொடரப்படவில்லை, பின்வரும் நாட்களில் நடைபெற்ற வீட்டு ஜெபக்கூட்டங்களில் இந்த சத்தத்தை நான் கேட்டதுமில்லை. 


சாய்ந்து நிற்கும் சமாதானம் பாட்டி


இந்த ஆலயத்தைப் பற்றி நான் எழுதும்போது, மற்றொரு நபரை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அந்த நபர் என்னைப் பாதித்ததினாலேயே இன்றுவரை அவருடைய பிரதிபலிப்பு என் வாழ்க்கையிலும் காணப்படுகின்றது. அந்த நபரின் பெயர் 'சமாதானம் பாட்டி'. ஒவ்வொரு இரவு ஆராதனையிலும் சிறுவனாக நான் பங்கேற்ற நாட்களில், ஆலயத்தின் வலப்புறம் இரண்டாவது ஜன்னல் ஓரமாக சுவற்றில் சாய்ந்துகொண்டு நின்றுகொண்டிருக்கும் அந்த பாட்டியின் மேல் எனது கண்கள் அவ்வப்போது விழுந்துகொண்டேயிருக்கும். அந்த பாட்டி கைகளில் எந்த ஒரு ஆராதனைக் கீத புத்தகங்களோ, பாமாலை, கீர்த்தனைகளோ இல்லாமல், ஆலயத்தில் போதகர் எந்த பாடலைத் தொடங்கினாலும் அப்படியே அதனை ராகம் தவறாமல் மனப்பாடமாய் பாடிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறே, உபதேசியார் மற்றும் குருவானவர் சொல்லும் சுருக்க ஜெபங்களையும் பிறழாமல் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஒருவேளை வீட்டில் மனப்பாடம் செய்திருப்பார்களோ என்றும் நினைத்திருக்கிறேன்; என்றாலும், அனுதினமும் ஆலயத்திற்கு வருவதே அதற்குக் காரணம் என்பதை பின் நாட்களில் உணர்ந்துகொண்டேன். இதைக் கண்ட நானும் சில நாட்களுக்குப் பின்னர், ஆலயத்திற்கு கீர்த்தனை பாமாலை கொண்டு செல்வதை நிறுத்திவிட்டு, மனப்பாடமாய் அந்த பாட்டியைப் போல பாடத்தொடங்கினேன். கர்த்தர் என்னை விட்டுவிடவில்லை எனது ஆசையில் ஒரு பங்கை நிறைவேற்றினார். இன்று கீர்த்தனை, பாமாலை புத்தகங்களிலிருந்து அநேக பாடல்களை மனப்பாடமாகப் பாட கர்த்தர் எனக்கு கிருபை செய்திருக்கிறார். 

ஒரு முறை ஆலயத்தில் இரவு ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நானும் எனது தாயும் அந்த ஆராதனையில் பங்கேற்றோம். அப்போது, உபதேசியார் ஒரு பாடல் எண்ணைச் சொல்லிவிட்டு பாடலைத் தொடங்கினார். எனது கையிலோ பாடல் புத்தகம் இல்லாதிருந்தது. 'ஆவியை....' என்று உபதேசியார் தொடங்கிய உடனே நான் சத்தமாக 'ஆவியை அருளுமே ஸ்வாமி' என்ற பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டேன். உபதேசியாரும் மற்ற மக்களும் ஏகமாய் திரும்பி என்னைப் பார்க்கத் தொடங்கினர். எனக்கோ ஒன்றும் புரியவில்லை; பின் பக்கத்தில் எனக்கு வலப்புறமாய் நின்றுகொண்டிருந்த எனது தாயோ என்னை நோக்கி அது, 'ஆவியை மழை போலே ஊற்றும்' என்ற பாடல் என்று சொன்னார். பின்னர் அதை நிறுத்திவிட்டு அவர்களுடன் சேர்ந்து ஆவியை மழை போலே ஊற்றும் என்ற பாடலைப் பாடினேன். 

என்னுடைய வீட்டில் எனது தாத்தா திரு. யோவான் அவர்களது நினைவு நாளன்று நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியிலும் சமாதானம் பாட்டி இல்லாமல் சாப்பாடுகூட அடுப்பேறாது. அவர்களது முதிர்வயதுவரை அந்த பொறுப்பினை அன்புடன் எங்களது குடும்பத்தில் செய்துவந்ததை நினைத்து ஆண்டவரைத் துதிக்கிறேன். சமாதானம் பாட்டி அன்று இல்லை என்றால், சுகவீனத்தினால் வரமுடியவில்லையென்றால் அவர்களது இடம் அன்று எங்கள் கண்ணுக்கு காலியிடமாகவே தெரிந்துகொண்டேயிருக்கும். எனது தகப்பனும், தாயும் அவர்கள் மேல் வைத்திருந்த பாசமும், மரியாதையும், அன்பும் இன்றும் என் மனதில் நிற்கின்றது. ஆலயத்தை மாத்திரமல்ல, எங்கள் வீட்டையும் நிறைத்திருந்தது அவர்களது உருவம். இப்படிப்பட்ட முதியோரின் அனுபவங்களைப் பாடமாகக் கற்றுக்கொள்ளவும், கண்ணார அவர்களது வாழ்க்கையிலேயே அவைகளைக் காணவும் கிருபை செய்த கர்த்தரை நன்றியோடு துதிக்கின்றேன்.


தினமும் வரும் தாசன் தாத்தா


பரி. மாற்குவின் ஆலயத்தைக் குறித்து நான் எழுதும்போது, செந்தியம்பலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள நல்லமலைத் தெருவில் வசித்துவந்த, திரு. தாசன் என்ற மேலும் ஒரு மனிதரை என்னால் நினைவுகூராமல் இருக்க இயலாது. அத்தனை நாட்களிலும், எப்படியானாலும் தினமும் அவர் ஆலயத்திற்கு வந்துவிடுவார்; ஆராதனையின்போது பாடல்களைச் சத்தமாகப் பாடுவார். ஜெப வேளையின்போது நேர் முழங்காலிலேயே நின்று ஜெபிப்பார். ஜனங்கள் அவரை 'யேட்டுத் தாத்தா' என்று அழைப்பது வழக்கம்; அவர்கள் ஏன் அப்படி அவரை அழைத்துவந்தார்கள் என்பதை நான் அறியேன். எது எப்படியோ, ஆலயத்திற்குச் சென்றுவந்தபோது, அவரது  வருகை எனது வாழ்க்கையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எத்தனை பேர் ஆராதனைக்கு வந்தாலும், அவரது குரல் தனித்து ஆலத்தில் ஓங்கியே ஒலிக்கும். எத்தனையோ பேர் ஆலயத்திற்கு வராமலிருந்தாலும், 'யேட்டுத் தாத்தா' ஆலயத்திற்கு என்றாவது வரவில்லையென்றால், ஆராதனை நடத்தும் உபதேசியாரும், கோயில் உதவியாளரும் மற்றும் ஆராதனையில் பங்குபெற்ற ஜனங்களும் 'யேட்டுத் தாத்தா இன்று ஆராதனைக்கு வரவில்லையே; என்ன ஆயிற்று' என்று அவரை விசாரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவரது வருகை ஆலயத்திற்கு வரும் பிற மக்களின் மனதில் அத்தனையாய் இடம்பெற்றிருந்தது என்பது இன்றும் என்னால் மறக்க இயலாத நினைவே. ஊரின் பிற இடங்களில எங்கும் அவரை அதிகமாகப் பார்க்க இயலாது, கடைவீதிக்கு காலை மாலை செல்லுவதைத் தவிர்த்து, பொது வெளிகளில் அவரைப் பார்ப்பது மிகவும் அரிதானதே; என்றாலும், ஆலயத்தின் வாசலில் அவரது கால்கள் அனுதினமும் நுழையாமிலிருந்ததில்லை. என்னைக் கவர்ந்த அவரது மற்றொரு குணத்தையும் இங்கே நான் பதிவு செய்யவேண்டியது அவசியம். அது, ஆலயத்தில் அவரது உதடுகளில் எழும்பும் சத்தத்தை ஆலயத்திற்கு வெளியே வேறெங்கும் நான் கேட்டதே இல்லை என்பதே. 


ஆலயமும் எனது அம்மாவும்


ஆலய ஆராதனையில் பங்கேற்கும்படியாக அனுதினமும் என்னைப் பழக்கப்படுத்தியது எனது தாயார் திருமதி புஷ்பம் பூமணி ஜெபமணி என்பதை நினைக்குங்கால் ஆண்டவரை நன்றியோடு துதிக்கின்றேன். எங்கே விளையாண்டுகொண்டிருந்தாலும், ஆலய மணி அடித்துவிட்டால், அவ்வளவுதான் ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என வீட்டிற்கு ஓடிவந்துவிடுவேன்; அத்தனை பயம் எனது அம்மாவின் மீது. ஒருநாள் ஆராதனையினைத் தவறவிட்டாலும், அதன் அடையாளம் உடலிலே தெரிந்துவிடும்; ஆம், பிரம்பினால் என் தாயார் என்னை பதம்பார்த்துவிடுவார்கள்; உடலிலே காயங்களுக்கு குறை குறைவிராது. அது மாத்திரமல்ல, ஆலயத்தின் முதல் மணி ஒலித்ததும், எனது அம்மா போய்விடுவார்கள்; அதற்குப் பின் எனது அம்மாவினிடத்தில் எதுவும் கேட்க முடியாது. முதல் மணி அடித்ததும் ஆலயத்திற்குச் செல்லும் அவர்கள், மூன்றாம் மணி அடிக்கும்வரை ஆலயத்தில் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில், நான் வெளியில் எங்காவது சென்றுவிட்டு பிந்தி வந்தால், சாவியும் சேர்ந்து அம்மாவுடன் ஆலயத்திற்குப் போய்விடும். ஆலயத்திற்குச் சென்றுதான் நான் சாவியை வாங்கிவரவேண்டும். 

ஒருமுறை ஆலயத்தில் திருவிருந்தில் நான் பங்கேற்றபோது, கொடுக்கப்பட்ட அப்பம் எனது வாயில் ஒட்டிக்கொண்டதை வீட்டிலே சொல்லி கிண்டலாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவ்வளவுதான், எனது வார்த்தைகளைக் கேட்ட எனது தாயார், என்னை கூப்பிட்டு, அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்; எதற்கு அடிக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியாமலிருந்தது. திரு திருவென முழித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது தாயார் என்னை நோக்கி, 'எதைக் குறித்து நீ கிண்டலடித்துப் பேசுகிறாய்?' அது ஆண்டவரின் சரீரம் என்று உணக்கு தெரியாதா, இனி திருவிருந்து பெறும்போதெல்லாம் இந்த அடி உனக்கு நினைவிருக்கட்டும் என்று சொல்லிய காட்சி இன்றும் நினைவிலே நிற்கிறது. 

மேலும், ஒருநாள் ஆலய ஆராதனைக்கு மணி அடித்தபோது, நான் தேரியில் (ஊருக்கு வெளியில் இருக்கும் காட்டுப் பகுதியில்) ரவுண்ட் ரேஸ் விளையாண்டுகொண்டிருந்தேன். அங்கிருந்து வர நேரமாகிவிட்டது, ஆலய ஆராதனையோ தொடங்கிவிட்டது, எனது தாயாரும் வீட்டைப் பூட்டிவிட்டு வீட்டுச் சாவியையும் கூடவே கொண்டு சென்றுவிட்டார்கள். என்ன செய்வதென்று அறியாமல் பயத்தோடு, இடுவையில் (இரண்டு வீட்டிற்கு இடையில் உள்ள பாதை போன்ற இடம்) உள்ள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். தாயார் வந்தார்கள்; எங்க போன? என்று கேட்டார்கள்; நானோ, 'நான் வர்ரதுக்குள்ள  நீங்க போயிட்டீங்க' என்று பதில் சொன்னேன்; என்றாலும், நான் சொன்ன பதில் எடுபடவில்லை. மெதுவாக அடியெடுத்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டேன், 'உள்ளே வராதே, வெளியேயே இருந்துக்க' என்று பதில் வந்தது. சரி, அடி விழுந்துவிடக்கூடாது என்று அமைதியாக இருந்துவிட்டேன். ஒருபுறம் பசி, மற்றொருபுறம் விளையாண்டுவிட்டு வந்ததினால் கைகால்களைக் கழுவவேண்டும், தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற தாகமான நிலை. நேரம் செல்லச் செல்ல பசியும் கூடிக்கொண்டே சென்றது, என்றாலும் எனது தாயாரோ என்னை வீட்டின் உள்ளே அழைக்கவே இல்லை, சாப்பாடும் தரவில்லை, தினமும் கட்டாயம் எனக்கு குடிக்க ஒரு டம்ளர் பால் தருவார்கள் அதையும் அன்று தரவில்லை. சமையலறையினைப் பூட்டிவிட்டு, அவர்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டார்கள். நானோ இரவு முழுவதும் இரண்டு செருப்புகளை தலைக்கு தலையணையாக வைத்தவனாகத் திண்ணையில் படுத்திருந்தேன். காலையில் எழுந்து வந்த எனது தாயார் என்னிடத்தில் 'இனி கோயில் மணி அடித்தபின்பு விளையாடப் போவியா?' என்று கேட்க, மாட்டேன் என்று நான் மறு உத்தரவு சொல்ல அப்புறமே வீட்டின் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். 

ஆண்டவரையும் மற்றும் ஆலயத்தையும் முன்நிறுத்தி, என்னுடைய வீட்டில் கடைபிடிக்கப்பட்டுவந்த மற்றொரு நடைமுறை, முதற்பலன்களில் எல்லாம் ஆண்டவருடையது என்பதே. எங்களுடைய வீட்டில், எலுமிச்சை, கொய்யா, தென்னை போன்ற மரங்களை அப்போது என் தாயார் வளர்த்துவந்தார்கள்.  எந்த மரமானாலும் அதில் முதற்கனி வந்தவுடன், ஒரே ஒரு கொய்யா பழமானாலும், ஒரே ஒரு எலுமிச்சம் பழமானாலும் அதனைக் கொண்டுசென்று ஆலயத்தில் வைத்துவிடுவார்கள் எனது தாயார். அதுமாத்திரமல்ல, ஒவ்வொரு நாள் வீட்டில் சோறு பொங்கும் போதும், ஒரு கைபிடி அரிசியினை எடுத்து 'கோயில் அரிசி' என்று தனியே வைத்துவிடுவார்கள். வாரம் ஒருமுறை ஆலய உதவியாளர் ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து அந்த அரிசியினைப் பெற்றுச் செல்வார்; அது, ஞாயிறு அன்று ஆலயத்தில் ஏலம் விடப்படும். 

ஞாயிற்றுக் கிழமை ஆராதனை என்றால் எனது அம்மா காலையிலேயே, ஆலயத்தில் முதல் மணி ஒலிப்பதற்கு முன்பதாகவே   வீட்டில் ஆயத்தமாகிவிடுவார்கள். முதல் மணி ஆலயத்தில் ஒலித்ததும், காலை உணவினைத் தவிர்த்துவிட்டு, வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றுவிடுவார்கள். ஆலயம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், 'இன்று என்ன பிரசங்கம்? எந்த வசனத்திலிருந்து குருவானவர் பிரசங்கம் செய்தார்? என்று கேட்பார்கள்; பிள்ளைகளாகிய நாங்கள் அம்மாவின் கேள்விக்கு ஆயத்தமாயிருக்கவேண்டும். இத்தகைய ஆலய பக்தியுள்ள தாயாரை தந்ததற்காக தேவனை நன்றியோடு துதிக்கின்றேன்.

ஞாயிறு ஆராதனையின்போது, சிறுவர்கள் நாங்கள் கூட்டமாக முன் வரிசையில் அமர்ந்திருப்போம், சிறுவர்களுக்கே உரிய சில சேட்டைகளை பிரசங்க வேளையின்போது செய்துகொண்டிருப்போம், 'ராஜா ராணி கப்பல், ஏரோபிளேன்' போன்றவைகளை பேப்பர்களில் செய்துகொண்டிருப்போம். இதனை பிரசங்கியார் பார்த்து பிரசங்கத்தில் சொல்லிவிட்டால் அவ்வளவுதான், வீட்டிற்குச் சென்றதும் உடலில் அடி விழாது இடிதான் விழும். சிறுநீர் கழிப்பதற்குக்கூட ஆராதனையின்போது எழுந்து வெளியே வந்த ஞாபகம் எனக்கு இல்லை. நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கோயில் உதவியாளர் (கோயில் குட்டியார்) பார்த்துவிட்டால் அவ்வளவுதான்; எழுந்துவந்து, ஆலயத்திலிருக்கும் அனைவரும் பார்க்கும்படியாக, தலையிலேயே ஒரே குட்டு குட்டிவிடுவார். பெற்றோர் யாரும் எதிர்த்துக் கேட்கக்கூட முடியாது, கோயில் குட்டியாருக்கு ஆலயத்தில் அத்தனை அதிகாரம் அன்றைய நாட்களில். 

பள்ளிப் பருவத்தின் நாட்களில், ஆலய ஆராதனையின்போது, சற்று ஒருபடி நான் முன்னேறியிருந்தேன். பிரசங்க வேளையின்போது பிரசங்கியார் வாசிக்கச் சொல்லும் வசனங்களை வேதாகமத்திலிருந்து எடுத்து வாசிக்கும் பழக்கம் என்னிடத்தில் உண்டானது. அன்றைய நாட்களில், எனது அருகிலிருக்கும் மற்றொரு சகோதரனை நினைத்து ஆச்சரியப்படுவேன் அவன் பெயர் ராஜன்; திரு. சந்தோஷம் என்பவரது மகன் அவன். பிரசங்கியார் வசனத்தைச் சொல்லும் முன்னதாகவே, இந்த வசனம்தான் அவர் அடுத்து சொல்லுவார் என்று தோராயமாக எடுத்துவைத்துவிடுவான். சில வேளைகளில் அது சரியாகவும் அமைந்துவிடும். எனவே, ஆலயத்திற்குச் செல்லும்போது அவன் அருகில் அமர்ந்திருக்கின்றேன். ஒருமுறை அவனது வேதாகமத்தில் 'ஐயோ, ஐயோ' 'எங்கே, எங்கே' போன்று இரண்டு இரண்டு தொடர் சொற்கள் வரும் வார்த்தைகளையெல்லாம் அவன் கண்டுபிடித்து அடிக்கோடிட்டிருப்பதைப் பார்த்து, நானும் சில காலம் அப்படிச் செய்துகொண்டிருந்தது என் நினைவில் இன்றும் பசுமையாய் நிற்கிறது.


Y.சாமுவேல் தாத்தா


ஆலயத்தைக் குறித்து எழுதும்போது இறுதியாக மற்றொரு மனிதரை எனது மனம் நினைவு கூருகின்றது. ஆம், அவரது பெயர் Y.சாமுவேல் தாத்தா. நான் சிறுவனாயிருந்தபோது, ஆலயத்தின் அருகிலே அவர் ஒரு சிறிய கடையினை வைத்திருந்தார். அவரைப் பற்றிய ஓர் சிறப்பு என்னவென்றால், தனது முதிர்வயதின் நாட்களில், சவப்பெட்டி ஒன்றினைச் செய்துவைத்து, அதன் மேலேயே அமர்ந்திருப்பார் சில நேரங்களில் படுத்தும் கிடப்பார். பெட்டியைப் பார்த்தாலே பத்தடி தள்ளி நிற்கும் மனிதர்களின் மத்தியில், அவர் ஓர் விசித்திரமான மனிதரே. சில நேரங்களில் ஆலயத்திற்கு நான் செல்லும்போது, அவரது கடையில் மிட்டாய் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், என்றாவது 2 ருபாய் அல்ல 5 ரூபாய்க்கு நான் ஏதாவது வாங்கினால், எனது அம்மாவிடம் கேட்டுவிடுவார். 'பூமணி, இன்னைக்கு சின்னவன் கிட்ட எவ்வளவு காணிக்க குடுத்த? அவன் கடையில மிட்டாய் வாங்கிட்டு போனான்' என்று சொல்லிவிடுவார். நான் வீட்டிற்கு வந்ததும் எனது அம்மாவிடம் அதற்கு விளக்கம் சொல்லவேண்டும். அடிக்கடி அவர் என்னை சந்தேகப்படுவதைக் கண்ட நான், கட்டாயம் என்னை அம்மாவிடம் இவர் போட்டுக்கொடுத்துவிடுவார் என்று எண்ணத்தில் அவரது கடைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டேன். ஆம், ஒரு கஸ்டமரை அவர் இழந்துவிட்டார். 


விடுமுறை வேதாகமப் பள்ளி (V.B.S)


ஆலயத்தில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் விடுமுறை வேதாகமப் பள்ளி என்னை வடிவமைத்த ஒன்று என்பதை நினைவுகூறாமலிக்க இயலாது. ஆம், விடுமுறை வேதாகமப் பள்ளியின் வாயிலாகவே என்னுடைய பல தாலந்துகளை மேடைகளில் வெளிப்படுத்த வழி பிறந்தது. எனக்குள் இருந்த நடிப்புத் திறமை, பாடும் திறமை போன்ற புதையல்களை தோண்டியெடுக்க பல மூத்த நபர்களை என் வாழ்க்கையில் தேவன் இடைபடச் செய்து பயன்படுத்திய நாட்கள் அவைகளே. 

விடுமுறை வேதாகமப் பள்ளியின் இறுதி நாட்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுவதில் அத்தனை ஆனந்தம் அடைந்திருக்கிறேன். ஒருமுறை மேடையில் நடைபெற்ற 'ஊமைக் கச்சேரியில்' கச்சிதமாக நான் நடித்ததைக் கண்ட பலர் என்னை பாராட்டிய நினைவு இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது. விடுமுறை வேதாகமப் பள்ளியின் நாட்களில் எனக்கு கிடைத்த ஓர் நண்பனை இன்றும் நான் மறக்க இயலாது; அவனை சந்திக்கும் வாய்ப்பும், தொடர்ந்து தொடர்புகொள்ளும் தருணமும் எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும், அவனது முகமும் பாசமும் என் முன்னேயே இன்றும் நின்றுகொண்டிருக்கிறது; அத்தனையாய் என்னை நேசித்த நண்பன் அவன்; நாகர்கோவிலைச் சேர்ந்த அந்த நண்பனின் பெயர் ரூபன். செந்தியம்பலம் கிராமத்தில் செயல்பட்டுவந்த 'பெத்தேல்' என்ற குழந்தைகளுக்கான பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்த ஓர் ஊழியரின் உறவினன் அவன். விடுமுறை வேதாகமப்பள்ளி முடிந்த பின்பு, சில நாட்கள் கடிதத் தொடர்பு இருந்தது; என்றபோதிலும், அதற்குப் பின் காலம் எங்களை மீண்டும் இணைக்கவில்லை. அவனுக்குள் பாடல் பாடும் வரத்தினை ஆண்டவர் அருளியிருந்தார், இனிமையான குரலில் மேடைகளில் அவன் பாடும் பாடல்கள் பலரை ஈர்த்ததுண்டு. அவன் ஒருமுறை விடுமுறை வேதாகமப் பள்ளி நிறைவு விழாவில் பாடிய 'ஆலய மணியோசை, என்னை அழைத்திடும் குரலோசை' என்ற பாடல் இன்றும் என் செவிகளில் நிற்கிறது.  

விடுமுறை வேதாமப் பள்ளியின்போது நிகழ்ந்த மற்றும் ஓர் நிகழ்வும் என்னால் மறக்க இயலாததே. ஒருமுறை விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, எனக்கு வகுப்பு எடுத்த ஓர் அண்ணன் சற்று கடினமானவர்; சட்டென கோபப்படக்கூடியவர். ஒருமுறை நான் அருகிலிருந்த நண்பணிடத்தில் பேசிவிட்டேன் என்பதற்காக எனது  கன்னத்தில் (செவிட்டிலேயே) ஓங்கி அறைந்துவிட்டார். அவர் சற்று வாட்டசாட்டமான உருவமுள்ள மனிதர்; எனவே எனக்கு மிகவும் வலித்தது; உடனிருந்த மற்ற நண்பர்கள் அனைவரும் பார்த்துவிட்டதினால் எனக்கோ மிகவும் வெட்கமாகவும் இருந்தது. இதுதான் கடைசி, இனி விடுமுறை வேதாகமப் பள்ளியின் பக்கமே செல்லக்கூடாது என்று நினைத்தவனாக வீட்டிற்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் வகுப்பிற்குச் செல்லும்போது என்னைச் சந்தித்த அவர் என்னிடத்தில், தான் அவசரப்பட்டு அடித்துவிட்டதாகச் சொல்லி வருந்தினார்; அதனால், மீண்டும் அவரை மனதில் ஏற்றுக்கொண்டேன். சரீரத்தின் வலி மாத்திரமல்ல, மனதின் வலியும் மெல்ல மெல்ல நீங்கியது. 

இந்த ஆலயத்தில் உபதேசியாராக சில வருட காலம் பணியாற்றிய சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திரு சந்தோஷராஜ் என்ற ஆசிரியர் சிறுவயதில் என்னை பாடல் பாடுவதில் மிகவும் உற்சாகப்படுத்தினவர். அப்போது அவர் வைத்திருந்த ஒரு ஹார்மோனியத்தை வாசித்து என்னைப் பாடச் சொல்லுவார். அப்பா மாதிரியே பாடுகிறாய் என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார். அவரது இந்த உற்சாக வார்த்தைகள் என்னை பாடல் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துச் சென்றது.

வருடங்கள் பல கடந்தன; பள்ளிப் பருவத்தை நிறைவு செய்து, பாலிடெக்னிக் படிப்பினை முடித்திருந்த நான், அதே ஆலயத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி மாணவன் என்ற நிலையிலிருந்து, ஆசிரியர் என்ற நிலைக்கு உயர்ந்தேன். இரட்சிக்கப்பட்டு, செந்தியம்பலத்தின் தேரிப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஜெபக்குழுவிலும் தீவிரமாக அந்நாட்களில் நான் கலந்துகொண்டுவந்தேன். ஒருமுறை விடுமுறை வேதாகமப் பள்ளி வகுப்புகள் முடிந்து, இறுதி நாள் நிகழ்ச்சிக்கான ஆயத்தப் பணிகள் ஆலயத்தின் முற்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதற்காக சிறப்பாக மேடை அமைக்கப்பட்டு, ஒலி மற்றும் ஒளியும்  அமைக்கப்பட்டிருந்தன. கிராமத்து மக்களில் அநேகர் அந்நிகழ்ச்சியினைக் காண ஆலயத்தின் முன்னே கூடிவந்திருந்தனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேடையில் எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.

இறுதி நாள் நிகழ்ச்சிக்கான பாடல்கள், நடனங்கள், மனப்பாட வசனங்கள் சொல்லுதல், செய்தி போன்ற அத்தனை நிகழ்ச்சி நிரல்களும் தயாரிக்கப்பட்டு, ஆயத்தப்படுத்தமாயிருந்தன. மேடையில் அவைகளை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பு என்னிடத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. ஆரம்ப ஜெபம் முதல் ஒவ்வொன்றாக வாசித்து வாசித்து, அதற்கு ஆயத்தமானவர்களை வரிசையாக மேடைக்குச் செல்ல அனுமதித்துக்கொண்டிருந்தேன். எல்லாம் ஒழுங்காகவும், கிரமமாகவும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, நடனம் '12-ம் வகுப்பு பயிலும் மாணவிகள்' என்ற ஒரு நிகழ்ச்சியினை நிரலில் கண்ட நான், அதனைத் தவிர்த்துவிட்டு, அதற்கடுத்த நிகழ்ச்சியினை வாசித்து மேடைக்கு அனுதித்தேன். வயது வந்த பெண்கள், மேடையில் ஆடுவது உகந்ததல்ல என்ற எண்ணத்தில் அவர்களை நான் தடுத்திருந்தேன். நடனத்திற்கு ஆயத்தமாயிருந்த 12-ம் வகுப்பு மாணவிகள் மேடைக்குப் பின்புறத்தில் ஆயத்தமாக நின்றுகொண்ருந்தார்கள். இறுதியாக விடுமுறை வேதாகமப் பள்ளியின் அப்போதைய இயக்குநர் நன்றி சொல்ல, குருவானவருடைய ஜெபத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது. 

நிகழ்ச்சி நிறைவுற்றதும், நடனத்திற்கு ஆயத்தமாயிருந்த மாணவிகள் ஆவேசத்துடனும், கோபத்துடனும் என்னிடத்தில் வந்து, எங்களை ஏன் அனுமதிக்கவில்லை என என்னிடத்தில் கேட்டனர்; மக்களும் சிலர் அவர்களுக்கு ஆதரவாகக் கூடிக்கொண்டனர். எனக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை; என்றாலும், நாம் நினைத்ததைச் செய்துவிட்டோம் என்ற திருப்தி மனதில் குடிகொண்டிருந்தது. 'குட்டிக் குழந்தைகள் ஆடலாம்; நீங்கள் நடனம் ஆடுவது நல்லதல்ல' என்று சொன்னேன். அவர்களோ மீண்டும் மீண்டும் கோபமாக என்னை துளைத்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து, அவர்களது பெற்றோரும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள், அவர்களுக்கும் அதே பதிலையே சொன்னேன், என்றாலும் அப்போதிருந்த கோபத்தில் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அது என் வாழ்க்கையின் ஓர் துக்கமான நாளாகவே மாறிப்போனது. 


ஊழியனாக ஆலயத்தில்


 நான் இரட்சிக்கப்பட்டதற்குப் பின் ஊழியனாகவும் பணி செய்யும் வாய்பு இந்த ஆலயத்தில் எனக்குக் கிடைத்தது பாக்கியமே. ஒரு முறை இந்த ஆலயத்தின் உபதேசியார் பணி நிமித்தமாக வேறு இடத்திற்கு மாறுதலாகிச் சென்றார்.ஆலயத்திலோ உபதேசியார் இல்லாத நிலை உண்டாயிற்று. தினமும் நடைபெறும் மாலை ஆராதனையினை யார் நடத்துவார்? என்று ஜனங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, உபதேசியார் வரும் வரை நான் ஆராதனையை நடத்துகிறேன் என்று குருவானவரிடம் னான் தெரிவித்தேன். எனது விருப்பத்தை அறிந்த குருவானவரும் உடனே ஒத்துக்கொண்டார். சுமார் மூன்று மாதங்கள் உபதேசியாராக இந்த ஆலயத்தில் பணிவிடை செயத நாட்கள் மறக்க இயலாதவை. 

உபதேசியாராக பணியேற்று ஒரு மாதம் நிறைவு ஆனதும்,  குருவானவரின் அலுவலகத்திற்கு நான் அழைக்கப்பட்டேன். அங்கே அலுவலகத்தில் என் கையில் ஒரு கவரினைக் கொடுத்து, கையெழுத்தைப் பெற்றுக்கொண்டார்கள். நான் எதற்கு என்று கேட்டபோது, நீங்கள் உபதேசியாராகப் பணியாற்றுகிறதற்கான உதவித் தொகை என்றார் அங்கிருந்தவர். நானோ பதிலாக, 'எனக்கு உதவித் தொகை எதுவும் வேண்டாம்; அடுத்த உபதேசியார் வரும் வரை உதவி செய்கிறேன்' என்று சொன்னேன்; என்றபோதிலும், அதனை அலுவலகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நஎன்ன செய்வதென்று யோசித்த நான், அதனை ஆலயத்திலேயே படைத்துவிட்டேன். 

சுருக்க ஜெபங்கள் அனைத்தும் நான் உபதேசியாராக இருந்தபோதுதான் எனக்கு மனப்பாடம் ஆனது. இதிலும் ஓர் இனிப்பான செய்தி. ஒரு முறை இரவு ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆராதனையின் கடைசிப் பகுதியில் நான் சுருக்க ஜெபத்தை வாசித்துக்கொண்டிருந்தேன்; அப்போது, திடீரென மின்சாரம் போய்விடவே, ஆலய பணிவிடைக்காரர் மெழுவர்த்தியை தேடிக்கொண்டிருந்தார். நானோ அவரிடம், தாத்தா, மெழுகுவர்த்தி எனக்கு வேண்டாம் என்று சொல்லி சுருக்க ஜெபத்தை அப்படியே மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். இன்றும் அவைகள் என் நினைவில் நிற்கின்றன. எனது தந்தை இந்த ஆலயத்தில் பிரசங்கம் செய்வதை சிறுவனாக முன் வரிசையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். இந்த ஆலயத்தில் அந்நாட்களில் அடிக்கடி பிரசங்கம் செய்ய எனக்கும் பாக்கியம் கிடைத்தது. ஒருமுறை நான் செய்தியளிப்பதைக் கேட்ட பாட்டி ஒருவர் 'நீ பழையான் மாதிரி பேசுகிறாயே' என்று என்னைப் பார்த்து கூறினார். யார் அந்த பழையான்? பின் வரும் அத்தியாயத்தில் எழுதுகிறேன். 

என்றபோதிலும், பல வருடங்களுக்குப் பின் இந்த ஆலயத்திற்கு உபதேசியாராக வந்த மற்றொரு மனிதர், எனது மனதில் ஆழ்ந்த துக்கத்தை உண்டாக்கிவிட்டுச் சென்றார். அவரது பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. செந்தியம்பலத்தில் உள்ள தென்னிந்திய திருமண்டல பள்ளியில் ஆசிரியராக பணி செய்வதின் நிமித்தம் உபதேசியாராக பொறுப்பேற்றவர் அவர். என்றபோதிலும், பரிசுத்தமான அப்பணியினைக் கறைபடுத்தினவர். ஒரு முறை நான் கடைத் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது. சாலையில் வெளியே நின்றுகொண்டு, தான் ஒரு உபதேசியார் என்பதையும்  பொருட்படுத்தாமல் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது அவரது வழக்கமாயிருந்தது. தான் ஒரு உபதேசியார் என்ற எண்ணம்கூட அவரிடத்தில் இல்லாதிருந்ததைக் கண்டு பலமுறை உள்ளம் நொந்திருக்கிறேன். இப்படிப்பட்டவரது கையில் ஆலயப் பணிவிடை சென்றுவிட்டதே என்று வருத்தமடைந்திருக்கிறேன். சிகரெட் மட்டுமல்ல, குடியும் கூடவே அவரது வாழ்க்கையில் குடிகொண்டிருந்தது. ஆலயத்தில் பணி செய்ய ஆவிக்குரியவர்கள் இல்லாமற்போய்விட்டார்களே என்று நினைத்தும், பொது இடங்களில் இந்த ஆலயத்தின் பெயர் தூஷிக்கப்படுகிறதே என்று நினைத்தும் அப்போது எனது மனம் மிகவும் கஷ்டப்பட்டது. 

இந்த ஆலயத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை எனது பெற்றோர் எனக்கு சொல்லக் கேட்டிருக்கிறேன்; அவைகள் இதோ, 

ஒருமுறை ஆலயத்தில் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது, கிராமத்தின் முதியவர்கள் பலர் அவ்வாராதனையில் அங்கம் வகித்தனர். ஆராதனையின் மத்தியில் 'ஆசிர்வாதம் வேண்டும்' என்ற ஒரு பாடலைப் பாடினார் போதகர், அப்பாடலை மற்றவர்கள் பாடும்படியாகவும் போதகர் கேட்டுக்கொண்டார். ஆராதனையில் இருந்த அனைவரும் அப்பாடலைப் ஆழ்ந்த பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தனர். ஆராதனையில் பங்கேற்ற மூதாட்டி ஒருவரின் கணவரது பெயர் 'ஆசீர்வாதம்' என்பதால், அந்த மூதாட்டி 'ஆசீர்வாதம்' என்ற தன் கணவனின் பெயரை பாடலில் உச்சரித்தால் கணவரை கனவீனப்படுத்தியதுபோலாகிவிடும் என உணர்ந்து, பாடலில் ஆசீர்வாதம் என்ற வார்த்தை வரும் இடங்களிலெல்லாம், 'எங்க வீட்டு ஐயா வேண்டும்' என்று மாற்றி பாடிக்கொண்டிருந்தார். அருகாமையில் உள்ளவர்கள் இதனைக் கேட்டனர். ஆராதனை முடிந்து அந்த மூதாட்டியிடம் கேட்டபோது, கணவனின் பெயரை உச்சரிப்பது அவரை இழிவுபடுத்துவது போலாகிவிடும் என பதிலளித்தார்.

மற்றும் ஓர் சம்பவம்; முதியவர் ஒருவர் ஆலய ஆராதனையில் தவறாது பங்குபெற்றுவந்தார். ஆராதனை நடக்கும் நேரங்களில் மட்டும் அல்ல, தான் விரும்பும் எந்த நேரத்திலும் ஆலத்தைத் தேடி வரும் பழக்கமுடையவர் அவர். ஆராதனை நடைபெறாத மற்ற நேரங்களில், ஆலயம் பூட்டப்பட்டிருக்கும்போது ஆலயத்திற்கு வந்து தென்-வட முனையில் உள்ள சுவற்றை தொட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுவிடுவார். மனம் விரும்பிய நேரத்தில் வீட்டில் இருந்துகொண்டே இறைவனிடம் வேண்டும் மனநிலையிலிருந்து மாறுபட்ட முதியவர் அவர். இரவானாலும், அதிகாலையானாலும் தான் விரும்பும் எந்த நேரத்திலும் வந்து ஆலயத்தின் சுவற்றைத் தொட்டுச் சென்றதால், அவர் தொட்ட இடத்தில் ஒரு விரல் தடமே உண்டாயிருந்தது. அந்த இடத்தை எனது தந்தை எனக்குக் காண்பித்திருக்கிறார். நான் பார்க்கும்போது அதற்கு மேல் பலமுறை சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்ததால் தெளிவாகத் தெரியாதிருந்தது. எனினும், அந்த முதியவர் தொட்ட இடத்தை பார்த்து பிரம்மித்து நின்றேன் அப்போது. ஆலயத்தில் ஆண்டவர் இருக்கிறார், அது ஆண்டவர் வீடு என்பதனை நினைத்து அந்த முதியவர் கொடுத்த மரியாதை இன்றும் எனது நினைவில் நிற்கிறது. அந்த முதியவரின் சந்ததியார் அனைவரும் நல்ல உயர்ந்த பதவியிலும், ஊழியத்திலும் ஆசீர்வாதத்தைப் பெற்று வாழ்கின்றனர் என்றும் என் தந்தை சொல்ல அறிந்துகொண்டேன். 

மேலும் ஓர் நிகழ்வு; ஒருமுறை கிராமத்தில் எங்கும் அழுகுரல் ஒலித்தது. காலரா வியாதியினால் வீட்டுக்கு வீடு மரணம் உண்டாகிக்கொண்டிருந்தது. மருத்துவ வசதியற்ற அந்நாட்களில், செய்வதறியாது விழித்தனர் கிராமத்தின் மக்கள். வணங்கிய தெய்வங்களை விட்டுவிட்டதால் வந்த கொடூரம் என்று கிறிஸ்தவர்களான இவர்கள் மேல் பழி சுமத்தினார்கள் சிலர். தங்களுக்கு அருமையானவர்களை இழக்கக்கொடுத்து, விதவையாகவும், பிள்ளையற்றவர்களாகவும், மனைவியை இழந்தவர்களாகவும், உறவினர்களை இழந்தவர்களாகவும் கிராமமே ஒலமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில். முதியவர் ஒருவருக்கு ஓர் யோசனை உதித்தது. பிசாசின் சதியோ அல்லது இறைவனின் தண்டனையோ எந்த விதியானாலும் ஆண்டவரே நீரே எங்கள் கதி என்று ஆலயத்தின் உட்பகுதியில் வைத்திருந்த சிலுவையை வெளியே எடுத்துக்கொண்டுவந்து, அதனை தெருத் தெருவாக எடுத்துச் சென்று ஜெபிக்க நினைத்தார் அந்த முதியவர். மூத்தோர் பலருக்கும் அது சரியென்று தென்படவே, ஆலயத்தின் உட்பகுதியில் இருந்த சிலுவையை மிகுந்த பக்தியுடன் வெளியே எடுத்துக்கொண்டு வந்தனர். செந்தியம்பலம் கிராமத்தின் ஒவ்வொரு தெருவாக அந்த சிலுவையைக் கொண்டு சென்று பாவ மன்னிப்பின் ஜெபம் செய்து, இறைவனிடம் வியாதி நீங்க கெஞ்சி மன்றாடினர். என்ன விந்தை? அடுத்த நாள் முதலே காலரா அந்த கிராமத்தை விட்டு நீங்கியது. வியாதியில் பீடிக்கப்பட்டுக் கிடந்தவர்கள் மீண்டெழுந்தனர். மெய்யான தெய்வத்தின் மேல் மேலும் நம்பிக்கை கொள்ள இச்சம்பவம் இக்கிராமத்தினரின் நெஞ்சில் பதிந்துவிட்டதால், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அதனைச் செய்ய எண்ணினர் மூத்தோர். அதன் காரணமாகவே இன்றும் ஒவ்வொரு வருடத்தின் கிறிஸ்துவின் பாடு மரண நாட்களில் இந்த ஆலயத்தின் சிலுவை கிராமத்தின் அனைத்து தெருக்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த முதியவர்கள் மிகுந்த பக்தியோடு சிலர் காலில் செருப்பு கூட அணியாமல் அப்பவணியில் பங்கேற்பதை என் கண்ணால் காண்கிறேன்.  

இன்னும் ஓர் செய்தி; அத்தனை இறைபக்தியுடன் கூடிய  ஆலய பக்தி ஒரு மனிதருக்கு. அவருடைய மகனுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது, மருமகளையும், பிறந்து சில நாளே ஆன குழந்தையையும் ஆலயத்திற்கு கூட்டிச் சென்றார். ஆலய ஆராதனையில் பங்கேற்றார். பின்னர் ஆலயத்தை விட்டு வீட்டிற்கு வரும் முன்னர். ஆலயத்தின் வெளியே உள்ள படியில் அந்த குழந்தையை வைத்தார். மருமகளோ மாமனார் என்ன செய்கிறார் என்று புரியாமலும், கேட்க தைரியமில்லாமலும் நின்று கொண்டிருந்த வேளையில், குழந்தையோ ஆலயத்தின் படியில் கிடந்து வீர் வீர் என அழத் தொடங்கியது. பெற்ற தாயாகிய மருமகளின் நெஞ்சத்தினால் அக்காட்சியைப் பொறுக்க இயலாதிருந்தது. மாமனாரோ அழுதுகொண்டிருந்த அந்த குழந்தையை அப்படியே உற்று நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். மருமகள் மாமனாரை நோக்கி 'மாமா' என்ற ஒரு வார்த்தையைச் சொல்ல, மாமாவோ. குழந்தை முதலில் இங்கே ஆலயத்தில் ஜெபிக்கட்டும், அவன் அழவில்லை ஜெபித்துக்கொண்டிருக்கின்றான் என்று பதில் சொல்லிய பதில் மருமகளின் வாயை அடைத்தது. சற்று நேரத்திற்குப் பின் குழந்தையை எடுத்து மருமகளின் கையில் கொடுத்தார். 

ஜனங்கள் இத்தனை பக்தியாய் ஆண்டவரை ஆராதித்துவரும் ஆலயம் இன்றும் இக்கிராமத்தின் அடையாளமாக  எழுந்து நிற்கின்றது. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக