தினம் ஒரு மணம்
(P.J. கிருபாகரன்)
இராஜஸ்தான் நினைவுகள்...
நான் பயணித்த மற்றும் பார்த்த மாநிலங்களில், இராஜஸ்தான் என் மனதில் இன்றும் நீங்காத இடம் பிடித்தே நிற்கிறது. மேற்கே பாக்கிஸ்தான், தென் மேற்கே குஜராத், வடகிழக்கே உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா, வடக்கே பஞ்சாப்; இதற்கு மத்தியில் பொதிந்திருக்கும் இராஜஸ்தான் இந்தியாவின் பொக்கிஷம் என்றால் அதுமிகையாகாது. 33 மாவட்டங்களுடன் ஜெய்ப்பூரை தலை நகராய்க் கொண்ட இராஜஸ்தானில், தார் பாலைவனமும் அங்கம். பழமையும், இந்தியக் கலாச்சாரமும் இன்னும் ஒழிந்துவிடாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. அரவல்லி மலைத்தொடருடன் அரசர்கள் பலர் அரசாண்ட வரலாற்றை இன்றும் தன்னுடன் சுமந்து நிற்கின்றன அங்கிருக்கும் அரண்மனைகளும், கலைக்கட்டடங்களும். இராஜ புத்திரர்கள் ஆண்ட பூமி என்பதால் இராஜஸ்தான் என்ற பெயர் வந்தது. இம்மாநிலத்தினைக் காண எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, இறைவனது கிருபையின் விளைவே. 1996 ம் ஆண்டு ரயில் மார்க்கமாக தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்று பின்னர், சென்னையிலிருந்து டெல்லி சென்று, டெல்லியிருந்து நீம்காதானா சென்றடைந்தேன். பயணங்கள் எங்கும் வித்தியாசமான அனுபவங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டன. டெல்லியிலிருந்து நீம்காதானாவிற்கு ரயில் செல்லும்போது மலைகளின் மேலே தவழ்ந்து, இயற்கையின் ஊடே மிதந்து சென்ற அனுவம் மனதிற்கு இதமானது. ஒருபுறம் மலை மற்றொரு புறம் ஆழமானபள்ளம் இந்நிலையில் நான் செய்த இரயில் பயணத்தில் பலமுறை எனக்கு மரண நினைவுகள் கூட வந்ததுண்டு.
நினைவில் நிற்கும் நீம்காதானா
நீம்காதானா : உயர்தர, நடுத்தர மற்றும் ஏழை மக்களை உள்ளடக்கிய ஒரு சிறிய நகரம். சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்ச, பண்டைய கால மண் வாசனையே நாள்தோறும் மிஞ்சி நிற்கின்ற நிலப்பரப்பினைச் சுகமாய்ச் சுமந்து நிற்கும் பூமி. சுற்றிலும் பழமை மாறாத பல கிராமங்கள்; நெடுங்காலமாய் அவைகளிலே குடியிருக்கும் மண்ணைக் காக்கும் மனிதர்கள். அன்றைய நாட்களில், அவைகளை இணைக்கச் சரியான சாலை வசதிகள் அமைக்கப்பட்டிருக்காவிட்டாலும், மக்கள் பயணிக்க ஏதுவான சாலைகள் ஓரளவு ஆங்காங்கே உருவாக்கப்பட்டிருந்தன. நீம்காதானாவில் Blessing
Youth Mission ஸ்தாபனத்தில் மிஷனெரியாகக் குடும்பமாகப் பணியாற்றிவந்த எனது மூத்த சகோதரி திருமதி ஜான்ஸியுடன் சுமார் நான்கு மாதங்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நீம்காதானா ந¬கரம் ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தின் (BYM) ஓர் முக்கிய பணித்தளம்.
முதன்முறையாக இராஜஸ்தான் சென்ற அனுபவம் சற்று வித்தியாசமானதாகவே எனக்குக் காணப்பட்டது. முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்க்கை முறைகள் என அனைத்தும் எனக்கு வேற்று உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வினையே கொடுத்தன. காளைக்குப் பதில் கழுதையையும் எருமை மாடுகளையும் கூட நுகத்தில் பூட்டி வண்டி இழுக்கும் கிராம மக்கள், வீடுகள் மற்றும் வீதிகள் எங்கும் கூட்டங் கூட்டமாகக் காட்சிதரும் ஒட்டகங்கள், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு மக்களைக் கூட்டிச் செல்லும் மிகவும் பழமை வாய்ந்த மூன்று சக்கர மோட்டார் வாகனம் என இவைகளையெல்லாம் அங்கு சென்ற முதன் நாளிலே நான் கண்டபோது, முழு இராஜஸ்தான் மாநிலமும் இப்படித்தான் இருக்குமோ என்ற எண்ணம் எனக்குள் உதயமாயிற்று. பின்னர் வெளியே சென்று பெருநகரங்களையும், வீடுகளையும் கண்டபோது, நாம் கண்டது கிராமத்துக் காட்சியே என்பதை தெரிந்துகொண்டேன்.
வீட்டை விட்டு வெளியே வந்தாலே, எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் நிறைந்த வயல்கள், கோதுமை வயல்கள் என ஒரு செழிப்பான விவசாய பூமியாகவே நான் கால் பதித்த நாளன்று இம்மாநிலம் என் கண்களுக்கு அறிமுகமானது. இராஜஸ்தான் என்றாலே பாலைவனம் என்று முழு இராஜஸ்தானையும் பாலைவனமாகவே கருதிக்கொண்டு, தங்கள் பயணத்தை இருளடித்துவிடுகிறவர்கள் அநேகர் உண்டு. பாலைவனம் என்பது அம்மாநிலத்திற்கு அழகு சேர்க்க இறைவன் கொடுத்த ஓர் அங்கமே. இறைவனின் படைப்பில் பாழானவைகள் என்று எதுவும் இல்லையே; எல்லாமே மனிதனின் மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் அடுத்தவைகள்தானே. நீம்காதானா காய்கறிச் சந்தைக்கு நான் செல்லும்போதெல்லாம், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான மற்றும் செழிப்பான காய்கறிகள் பலவற்றிற்கு அப்போது எனக்கு பெயர் கூடதெரிந்ததில்லை; ஏனெனில், அவைகளில் பலவற்றை நான் தமிழ்நாட்டில் பார்த்ததே இல்லை. பாலலைவனம் என்று என் மனதில் எழுதிவைத்திருந்த ஓர் மாநிலத்தில், மனம் குளிரும்படி இத்தனை பசுமையான காய்கறிகளா? என்று வியந்து வியந்து பார்த்திருக்கிறேன். சில நேரங்களில், வாங்குவதற்கு ஒன்றுமில்லாவிட்டாலும், காய்கறி மார்க்கெட்டைப் பார்ப்பதற்காக கால்நடையாகச் சென்றுவரும் வழக்கத்தையும் கொண்டிருந்தேன். அவ்வாறு, ஒருமுறை காய்கறி மார்க்கெட்டில் நான் நின்றுகொண்டிருந்தபோது, அந்த கடையின் அருகே வந்த ஒரு காளை மாடு, காய்கறிக் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிகளைத் சாப்பிடத் தொடங்கியது, அந்த கடைக்காரரோ, தான் அமர்ந்திருந்த இருக்கையிலேயே அமைதியாக இருந்துகொண்டு, அந்த மாடு சில காய்களைத் தின்றபின், கோபப்படாமல் அதனை வாயினால் மாத்திரமே விரட்டிக்கொண்டிருந்தார். மாடுகள் அவர்களது வணக்கத்திற்குட்பட்ட மிருகம் என்பதை அப்போது நான் அறிந்துகொண்டேன். அவ்வாறாகவே, ஒரு முறை நான் மார்க்கெட் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென மேலே எனது தலையை தூக்கிப் பார்த்தபோது, எனது தலைக்கு மேலே ஒட்டகத்தின் தலை இருந்தது, எனக்கோ பகீர் என்றது; அதிர்ச்சியான நிகழ்வு அது எனக்கு அன்று.
ஆண்களின் முன்னால் தங்கள் முகங்களை எப்போதுமே மூடிக்கொண்டு அல்லது முக்காடிட்டுக்கொண்டு வாழ்க்கை நடத்தும் பெண்கள். நீண்ட பெரிய சேலை போன்ற துணியினால் ஆண்கள் தங்கள் தலையில் கட்டிக்கொள்ளும் தலைப்பாகை, இவைகளெல்லாம் எனக்கு விசித்திரமானவைகளாகவே காட்சியளித்தன. கூட்டுக் குடும்பங்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்த பலரது வீட்டிற்குள் நான் நுழைந்தபோது, அது ஓர் குட்டிக் கிராமக் களையையே குடும்பத்திற்குள் உருவாக்கிவைத்திருப்பதை என் கண்கள் உற்றுக் கவனித்தன. என்றபோதிலும் நகரங்களில் காணப்பட்ட வீடுகளோ, பெரும் பணச்செலவில் பெரிய பெரிய பங்களாக்களாக அரண்மனை போன்ற உருவிலேயே காணப்பட்டன. ஒரு முறை அப்படிப்பட்ட வீடு ஒன்றின் அருகில் நான் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு சகோதரர் 'இந்தியாவின் பணம் இங்கேதான் உறங்குகிறது' என்று என்னிடத்தில் சொன்ன சொற்றொடர் இன்றும என் நினைவினை விட்டு உதிரவில்லை.
நீம்காதானா சென்றடைந்த நான், எனது மூத்த சகோதரியின் வீட்டில்தான் தங்கியிருந்தேன். அவ்வப்போது காலை மற்றும் மாலை நேரங்களில், வீட்டை விட்டு வெளியே வீதிகளில் கால்நடையாய் நடக்கும் பழக்கத்தினை உடையவனாயிருந்தாலும், மீதியான நேரமனைத்தையும் வேதம் வாசிப்பதிலும் மற்றும் ஜெபிப்பதிலுமே தினமும் கழித்துவந்தேன். Dakes
Bible -ஐ எப்படியாவது வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனது வாலிப நாட்களில் அதிகம் எனக்குள் காணப்பட்டது; முழு வேதாகமத்தை வாங்கும் வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைக்காததினால், Dakes வேதாகமத்தின் மத்தேயு நிருபம் முழுவதையும் xerox எடுத்துவைத்துக்கொண்டு, அதனை அந்நாட்களில் வாசித்துவந்தேன். அவ்வப்போது BYM பணித்தள சபையின் ஆராதனையிலும் செய்தி அளிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடத்ததை பாக்கியமாகவே எண்ணினேன். அந்த பணித்தள விசுவாசிகளுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததோர் சிலாக்கியமே. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேலும் அத்துடன் ஊழியர்கள் மேலும் அவர்கள் வைத்திருந்த மரியாதையும், அன்பும் விவரிக்க இயலாதவைகள்; அதனை நேரடியாக அனுபவித்தவன் நான்.
அந்நாட்களில் மூல நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நான், நீம்காதானாவில் ஒரு நல்ல மருத்துவர் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவரிடம் சிகிச்சை பெறும்படியாகச் சென்றேன். அது முற்றிலும் வித்தியாசமானதோர் சிகிச்சையாகவே காணப்பட்டது. முதன் முதலாக அந்த மருத்துவரிடம் (நாட்டு மருத்துவர்) சென்றபோது, அவர் எனது மூல நோயின் வீரியத்தைப் பார்த்துவிட்டு, ஒரு ஊசி (injection) போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னதுடன், அன்றே ஊசியையும் போட்டுவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து எனது ஆசன வாய் முழுவதும் பயங்கரமான ரணமாகி புண்ணாகிவிட்டது, எனக்கோ தாங்கொணா வேதனை, ஆண்டவரே! என மனதில் வேதனையை அனுதினமும் சகித்துக்கொண்டவனாகவே நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தேன். எனது அக்காவின் (திருமதி. ஜான்ஸி) வீட்டில் அப்போது நான் தங்கியிருந்ததால், அவள் எனக்குச் செய்த உதவிகள் அநேகம். மலம்கழிக்கக்கூட முடியாதவனாகவே காணப்பட்டேன். ஒரு நாள் வேதனையைத் தாங்க முடியாமல், அறையில் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதுகொண்டேயிருந்தேன். நாட்கள் பல சென்றும் எனது வியாதி குணமாகாததைக் கண்டு, நீம்காதானாவிலுள்ள அரசுமருத்துவமனைக்குச் சென்று அங்கே உள்ள மருத்துவரிடத்தில் காண்பித்தோம், அவரது (அரசு மருத்துவர்) சிகிச்சைக்குப் பின்னரே மூலவியாதியிலிருந்து சற்று விடுதலை பெற்றேன்.
நீம்காதானாவில் நான் தங்கியிருந்த நாட்களில் ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தில் மிஷனரிகளாகப் பணியாற்றிக்கொண்டிருந்த பல ஊழியர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்தன. அப்போது எனது சகோதரியின் வீட்டின் அருகாமையிலேயே இருந்த BYM மிஷனரி சகோதரர் தேவ்குமார் அவர்களது குடும்பத்துடன் நெருங்கிபழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது வீட்டிற்கு நான் செல்லும்போதெல்லாம் டீ குடித்துக்கொண்டே வேதத்தைக் குறித்த காரியங்களை அடுக்கடுக்காய் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்போம். நேரம் போவதற்காக அல்ல, அது எங்கள் விருப்பமான உரையாடலாகவே தொடர்ந்துகொண்டிருக்கும்.
இதைப்போலவே ஆந்திராவைச் சேர்ந்த சகோதரர் டேவிட் ராஜு சகோதரரும் அங்கு BYM மிஷனரியாக ஊழியம் செய்துவந்தார். அவருடனும் மற்றும் அவரது குடும்பத்துடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நான் ஹிந்தி மொழியைக் கற்றுதான் ஆகவேண்டும் என்பதை பலமுறை எனக்கு வலியுறுத்தியவர் அவர். ஒருமுறை அவர் தனது வீட்டில் விருந்து உண்ணும்படியாக என்னை அழைத்திருந்தார். அழைப்பினை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்றிருந்த நான், சாப்பிடுவதற்காக தரையில் அமர்ந்தேன், அப்போது அவரது மகன் மற்றும் குட்டி மகளும் உணவருந்த உடன் அமர்ந்தனர். அவரது துணைவியார் உணவு பரிமாரிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவரது துணைவியார் அந்த சிறிய மகளை நோக்கி 'கறி எடுத்துக்கொள்' என்று அவளிடத்தில் சொல்ல, அவளோ 'கொஞ்சம்தான் இருக்கிறது, மாமாவுக்கு வேண்டும் என்ன செய்வது' என்று ஹிந்தியில் பதிலளித்தாள்; அனைவரும் உணவருந்துவதை மறந்து சில நிமிடங்கள் சிரித்துக்கொண்டேயிருந்தோம். சுவையான அந்த அனுபவங்களுக்குச் சொந்தமான நாட்கள் அவை.
ஆசிரியராக ஆரம்பம்

நீம்காதானாவில் கேரளாவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் தொடக்கப்பள்ளி ஒன்றினை நடத்திவந்தார்;. டுமப முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடங்கிய பள்ளி அது. அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனது ஊரைச் சேர்ந்த, சகோ. பாபு ராஜரீகனும் அப்போது அந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தான். வீட்டிலேயே வீணாக அமர்ந்திராமலும், நேரத்தை பிரயேரிஜனமாகக் கழிக்கவும், நான்கு மாதங்கள் அந்தப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கும்; கிடைத்தது. ஒரு சில வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை கற்பித்துவந்தேன். சிறு பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவது சுகமானதோர் அனுபவமாகவே இருந்தாலும், ஹிந்தி மொழி தெரியாதது எனக்கு சுமையாகவே இருந்தது. எனது அக்காவின் மகள் டஃபில்லாவும் அப்போது அந்த பள்ளியில் முதலாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்தாள். ஒருமுறை அவளது வகுப்புக்குச் சென்ற நான். 'டோக்ரி கே அந்தர் பியாஜி ஹை' (கூடையிலே வெங்காயம் உள்ளது) என்று சொல்வதற்குப் பதிலாக 'பியாஜி கே அந்தர் டோக்ரி ஹை' (வெங்காயத்தினுள்ளே கூடை உள்ளது) என்று சொல்லிவிட்டேன், இதைக் கேட்ட டஃபி சிரித்துவிட்டாள். 'ஏன் சிரிக்கிறாய' என தமிழில் அவளிடம் கேட்டபோது, 'மாமா, நீங்கள் வெங்காயத்துக்குள்ளே கூடை இருக்கிறது' என்று சொல்றீங்க எனச் சொன்னபோது எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. நாங்கள் இருவரும் பேசிய தமிழைக் கேட்டு வகுப்பறைப் பிள்ளைகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிறுபிள்ளைகளோடு உரையாடுவதை சிகரத்தில் ஏறுவதைப் போல ஆனந்தமாய் உணரும் எனக்கு, பச்சிளங் குழந்தைகளோடு பாசமாய் அவர்களறியும் மொழியில் பேச இயலவில்லையே என்ற வருத்தம் அப்போது நிறைத்திருந்தது. பல குழந்தைகள் ஆசிரியரான என்னோடு ஏதாகிலும் உரையாடும்போது, உதடுகளில் புன்னகையை மாத்திரமே பூக்கும் அளவுக்கு எனது வாழ்க்கையின் வட்டம் சுருங்கியிருந்ததை உணர்ந்த நாட்கள் அவை. சரத்தில் தொடுத்த மல்லிகை மொட்டுக்களைப் போல வட்டமாகவும், வரிசையாகவும் பச்சிளங் குழந்தைகளைப் பள்ளியில் காணும்போதெல்லாம், 'இவர்களையும் என்னையும் இணைக்கும் மொழி அறிவு எனக்கு இல்லையே' என்ற ஏக்கத்தில், விழிகளோடுதான் பலமுறை அவர்களோடு பேசியிருக்கின்றேன்; அவர்களது வாழ்க்கை முறைகளிலிருந்து நான் எங்கோ விலகி நிற்கிறேன் என்பதை உணர்ந்திருக்கின்றேன். வேதத்தைக் குறித்த அறிவு எத்தனையாய் இருந்தாலும், பிள்ளைகளது மொழியில் அதனைப் பேசத் தெரியாத பேதையாகவே என்னை நான் பார்த்துக்கொண்ட நாட்கள் அவை. குட்டிக் குழந்தைகள் என்றால், அவர்களுக்காக எவ்வளவும் குனிந்துவிடும் உள்ளம் கொண்ட எனக்கு, இடையில் உண்டாயிருந்த இந்த விரிசல் சற்று பெரியதாகவே என் கண்களுக்குக் காட்சியளித்தது.
பிலானிக்கு ஓர் ஒருநாள் பயணம்
விடுமுறை நாளன்று, ஒருமுறை நானும் சகோதரன் பாபுவும் நீம்காதானாவிலிருந்து பிலானிக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வர தீர்மானித்தோம். தொடக்கத்தில் ஆ80 -ல் செல்லத் திட்டமிட்டிருந்த நாங்கள், அத்தனை தூரம் ஆ80-ல் செல்வது நல்லதல்ல என்ற BYM மிஷனரி சகோதரர் மலர்செல்வன் அவர்களது ஆலோசனையின்படி, பேருந்தில் புறப்பட்டுச் சென்றோம். காலையிலேயே நீம்காதானாவிலிருந்து புறப்பட்டு, ஜெய்ப்பூர் சென்றடைந்து அங்கிருந்த பிர்லா மியூசியத்தைப் பார்வையிடச் சென்றோம். பிர்லா மியூசியத்தினுள் நுழைந்ததும், அதன் முற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிர்லா முதன் முதலாகப் பயன்படுத்திய விமானத்தின் முன்பாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பின்னர் மியூசியத்தின் உள்ளே சென்று சுற்றிப் பார்ர்த்தோம். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு பொறியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி முளைவிட்டிருந்ததை பிர்லா மியூசியத்தினுள் நுழைந்ததும் எங்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது. பிர்லா மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களிலேயே என்னை மிகவும் கவர்ந்ததும், இன்றுவரை நினைவில் நிற்கின்றதுமான ஒரு பொருள் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் கடிகாரமே. மின்சாரம், சூரிய ஒளி போன்ற எந்த ஒரு சக்தியும் இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் அந்த கடிகாரம் முழுக்க முழுக்க ஓர் இந்திய படைப்பு என்பதை உணருங்கால் உள்ளம் மகிழுகின்றது. பிர்லா மியூசியத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்த Birla
Institute of Technology and Science (BITS) -க்கும் சென்று அங்கிருந்தஒரு சில மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அந்த மாணவர்கள் கூடி ஜெபிக்கும் குழுவினராக இருந்தபடியால் நாங்கள் அவர்களுடன் சில மணி நேரம் செலவழித்துவிட்டு, பின்னர் அவர்களுடன் இணைந்து ஜெபித்துவிட்டு திரும்பினோம்.


பிலானியிலுள்ள மியூசியம், அரண்மனைகள் போன்றவைகளையும் சுற்றிப்பார்த்து ரசித்தோம். அங்குள்ள மியூசியம் ஒன்றினைக் காணகச் சென்றிருந்தபோது, அதன் முன்னால் அநேக புறாக்கள் கூட்டங் கூட்டமாக இருப்பதைக் கண்டேன். இத்தனை புறாக்கள் இங்கே எப்படி என்ற கேள்வி எனக்குள் எழ, அருகில் உள்ள ஒரு சிறிய கடையில் வாங்கிய குளிர்பானத்தைக் குடித்துக்கொண்டே அவைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது, அங்குள்ள நபர் ஒருவர் அதனைக் குறித்த சில காரியங்களை எங்களுக்கு விவரித்தார். அங்கு புறாக்கள் பெருகியதற்கான காரணத்தையும் எங்களுக்கு எடுத்துச் சொன்னார். அந்த மியூசியத்தைக் காண வரும் மக்கள் அநேக திண்பண்டங்ளை வாங்கி அங்கிருக்கும் புறாக்களுக்குப் போட்டுக்கொண்டே வந்ததால், நாளடைவில் புறாக்கள் பெருகி இன்று வருவோரெல்லாரும் அதனை தொடர்ந்துசெய்வதாக அந்த மனிதர் சொன்னார். சில வெளிநாட்டினரும் அப்புறாக்களின் மத்தியில் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தக் காட்சியையும் அங்கே காண முடிந்தது.
இதேபோன்று, ஒருநாள் அஜ்மீரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று நாங்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அஜ்மீரில் ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தின் மிஷனரி சகோதரர் ராபின் சாம் குடும்பமாக ஊழியம் செய்துகொண்டிருந்தார் (தற்போது குஜராத்தில் பணிசெய்துவருகின்றார்); அவரது வீட்டிற்குச் சென்றடைந்தோம். குடும்பத்தின் அங்கத்தினரைப் போன்ற வரவேற்பு எங்களுக்குக் கிடைத்தது. சகோதரிராபின் சாம் நாங்கள் சுற்றிப்பார்க்கச் செல்வதற்காக உணவுகளை ஆயத்தம் செய்துகொடுத்தார். அவர்களது உபசரிப்பும் அன்பும் அன்று எங்கள் நெஞ்சை நிறைத்தன, இன்றும் நினைவில் நிற்கின்றன.
முதன்மையான மொழியறிவு
நான் நீம்காதானாவில் இருக்கும்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தினை இன்றும் நினைத்தால் என்னால் சிரிக்காமல் இருக்கமுடியாது. ஒருமுறை எனது சகோதரி என்னிடத்தில், 'சுந்தர், மார்க்கெட்டில் உள்ள மெடிக்கல்ஷாப் ஒன்றில் மண்ணென்ணெய் வாங்கி வைத்துவிட்டு வந்துவிட்டேன், நீ போய் எடுத்துக்கொண்டு வா' என்று சொன்னாள். நானும் விரைவாகச் சென்றேன். அந்த மெடிக்கல் ஷாப் -க்குச் சென்று 'Kerosene' என்றுசொல்ல, மருந்துக்கடைக்காரர் 'குரோசின் மாத்திரை கித்னா சாயியே?' என்றுகேட்டார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை, இவருக்கு எப்படி விளங்கவைப்பது? என விழி பிதுங்கி நின்றேன். இறுதியில் எனக்கு இருந்த ஒரே வழி அவரது கடைக்குள் சென்று அதை தேடி எடுத்துவிடுவதுதான் என எண்ணி, அவரது கடைக்குள் சென்று அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்தேன், அப்போதுதான் அவருக்கு புரிந்தது நான் என்ன கேட்டேன் என்று. மனிதர்களோடு உறவாட, மொழியறிவு எத்தனை முதன்மையானது என்று நான் நினைத்த நேரம் அது.
கிராமத்தில் ஒரு நாள்
நீம்காதானாவில் நான் தங்கியிருந்த நாட்களில், ஊழியம் செய்ய பலசந்தர்ப்பங்களும் தருணங்களும் கிடைத்தன. அவ்வப்போது எனது அக்காவின் குடும்பத்துடன் சென்று, அவர்களுடன் இணைந்து ஊழியம் செய்யும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. ஒருமுறை நானும் சகோதரர் பாபுவும் (என்னுடன் இராஜஸ்தானில் இருந்த எனது கிராமத்தைச் சேர்ந்த உறவினர்) ஏதாவது சில கிராமங்களுக்குச் சென்று சுவிசேஷம் அறிவிக்க விரும்பி, இரு சக்கர வாகனத்தில் (M80) புறப்பட்டோம். அது ஓர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்திருந்த சிறியதோர் கிராமம். சுற்றிலும் மரம் செடி கொடிகள் என எங்கும் பசுமையாகவே காட்சியளித்துக்கொண்டிருந்தது அப்பகுதி. ஆனால் அக்கிராமத்திற்குச் செல்லும் பாதையோ முழுவதும் மணல் நிறைந்ததாயிருந்தது. முகத்தில் பூசிக்கொள்ளும் பவுடரைப் போலக் காட்சியளித்தது அந்த மணல். எனவே, சில இடங்களில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கி, அதனைத் தள்ளிச் செல்லும் நிலையும் உண்டானது. ஆனால் அவைகள் அனைத்தும் அப்போது சற்று கடினமான சூழ்நிலையாகக் காட்சியளித்தாலும், இன்றோ, இன்னும் இனிமையான நினைவுகளாகவே எனது இதயத்தை விட்டு நீங்காதிருக்கிறது. முதன் முறையாக அந்த கிராமத்தினுள் நுழைகிறோம், தெரிந்தவர்கள் எவருமில்லை. எங்களைக் கண்ட கிராமத்தின் ஜனங்கள், யார் இவர்கள்? நமது ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லவே, எதற்கு வருகிறார்கள்? என்ன செய்யப்போகிறார்கள்? என்பதை அறிந்துகொள்ளும் கேள்விகள் அடங்கிய மனதோடு நின்றதை, பார்வையிலேயே அறிந்துகொள்ள முடிந்தது, வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட வீடுகளின் கட்டமைப்பு, மனிதர்களின் வாழ்க்கை முறை, எல்லாம் பார்க்கப் பார்க்க எனக்குப் புதுமையாகவே காட்சியளித்தது. அது சற்று பின் தங்கிய கிராமமாக இருந்ததினால், அதனைக் கண்டதுமே கிறிஸ்துவை எப்படியாவது இவர்களுக்கு அறிவித்துவிடவேண்டும் என்ற உணர்வு எங்களுக்குள் உயர்ந்து நின்றது. மெல்ல மெல்ல எங்களது கைகளில் இருந்த சுவிசேஷக் கைப்பிரதிகளை கிராமத்தினருக்கு விநியோகித்து, ஊழியத்தினை ஆரம்பித்தோம்.

சற்று நேரத்திற்குப் பின்னர், கிராமத்திலிருந்த ஒரு வீட்டினர் எங்களை தங்கள் வீட்டிற்கு அழைக்க, அவர்களது வீட்டினை நோக்கி நடந்தோம். வீட்டிற்குள் நுழைவதற்கு முன், அக்கிராமத்தின் வழக்கத்தின்படி, கால்களைக் கழுவிக்கொள்ள தண்ணீர் தரப்பட்டது, அதனைத் தொடர்ந்து நாங்கள் வீட்டிற்குள் நுழைந்தோம். வீட்டின் உள்ளே ஐந்து நடுத்தர வயதிலான நபர்கள் ஒன்றாக அமர்ந்து புகைபிடித்துக்கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும், அவர்களில் ஒருவர், வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்கு வாழைப் பழத்தைக் கொடுப்பதுபோல, தனது கையிலிருந்த பீடிக் கட்டை எங்களை நோக்கி நீட்டினார்; நாங்கள் மறுக்கவே, எங்களை அவர் புரிந்துகொண்டார். வீட்டிலிருந்த இருந்த சகோதரி எங்களைக் கண்டதும், உள்ளே சென்று தண்ணீர் மொண்டு வந்து மூடிய முகத்துடன் எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். எந்த வீட்டிற்குச் சென்றாலும், அவர்கள் தரும் தண்ணீரை வேண்டாம் என்று சொல்லக்கூடாது, தண்ணீரை அண்ணாந்து தூக்கிப் பிடித்துக் குடிக்கக்கூடாது என தண்ணீர் குடிப்பதிலும் சில விதிமுறைகளைக் கையாளவேண்டும் என ஏற்கனவே நாங்கள் ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தோம். நாங்கள் தண்ணீர் குடித்து முடிந்ததும், அவர்களுக்கு கிறிஸ்துவை அறிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். இதைப்போன்ற கிராமங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றனவே என்ற ஏக்கமும், பாரமும் அப்போது எங்கள் உள்ளத்தில் உருவானது.
இராஜஸ்தான் சென்றுவிட்டாலும், ஜெபக்குழு வாலிபர்களுடனான தொடர்பை நான் விட்டுவிடவில்லை. கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஊரிலிருந்த ஜெபக்குழு வாலிபர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்திவந்தேன். மனதிலோ எக்காரணத்தைக் கொண்டும் அந்த ஜெபக்குழு நடைபெறாமல் நின்றுவிடக்கூடாது என்ற பயம் ஒருபுறம் தொக்கி நின்றுகொண்டேயிருந்தது. ஜெபக்குழு நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களையே தினம் தினம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
இராஜஸ்தானின் குளிர் எனக்கு புதிதான ஒன்று. குளிரைத் தாங்குவதற்காக பல குளிராடைகளை உபயோகிக்கவேண்டியதாயிருந்தது. கடுங்குளிருக்கு மத்தியில் அதனுள் புதைந்துகொண்டு தூங்குவது ஓர் சுகமான அனுபவம். குளிருக்காக 'Sleeping Bag' உள்ளே தூங்கிய நாட்கள் மறக்க முடியாதவை. இறைவனின் படைப்பினால் மனிதர்களுக்கு உண்டாகும் இன்பங்கள் தான் எத்தனை எத்தனை. தூக்கத்தை ரசித்து, துதியுடன் விழித்தேன். எனது அக்கா வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் அநேக காரியங்களை நான் கடைபிடிக்கவும் நேரிட்டது.
இராஜஸ்தானியர்கள் அதிக சுத்தமாக வாழ விரும்புபவர்கள். தினமும் காலையில் வீட்டை தண்ணீர் கொண்டு கழுவுபவர்கள், முட்டை, மாமிசம் சாப்பிடாதவர்கள், அப்படி சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் வாடகைக்கு வீடும் தருவதில்லை. ஆனால், நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு லாரி மெக்கானிக், சொந்தமாக ஒரு லாரியும் வைத்திருந்தார். சில நேரங்களில் நான் அவரது கடைக்குச் சென்று, அவர் வேலை செய்வதைப் பார்த்தவனாக, அவரோடு பேசிக்கொண்டிருப்பேன். அவருடன் எனக்கு நெருக்கமானதோர் நட்பும் உண்டானது. அவருடைய கடைசி குட்டி மகள் 'பாவ்னா' என்மீது அதிக அன்பு வைத்திருந்தாள். சிறுமியாக இருந்தபோதிலும், ஒரு நாள் நான் அவளது தகப்பனாருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, அவளே டீ தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள்;. அவள் தந்த டீயின் சுவையை மறந்து, அந்த பிஞ்சு நெஞ்சத்தின் அன்பில் எனது உள்ளம் நிறைந்தது அப்போது.
நாங்கள் கறி சாப்பிடவேண்டும் என்றால், சுமார் இருபது நிமிடங்கள் இருசக்கர வாகனத்தில் சென்று, தூரத்திலிருக்கும் ஓர் இஸ்லாமிய சகோதரரின் சடையில்தான் கறி எடுத்துவரவேண்டும். இதனை எடுத்துக் கொண்டுவருவது பெரிய சிரமமான ஒரு காரியம், யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது, பத்திரமாகச் சென்றுவரவேண்டும். சாப்பிட்ட பின்னர் மீதமிருக்கும் எலும்புகளைக் கவனமாக வைத்திருந்து, வெளியில் யாருக்கும் தெரியாமல் வீசிவிடவேண்டும். தமிழ்நாட்டில் நமக்கு இருக்கும் சுதந்திரம் எல்லாம் அப்போதுதான் என் நினைவிற்கு வந்தது. அதே போன்றுதான் முட்டை வாங்கவேண்டும் என்றாலும். அங்கு கிடைக்கும் பசுமையான காய்கறிகளையும் பழங்களையும் கண்டால், மாமிசம் என்பது மறந்தேபோய்விடும்; என்றாலும் ரசித்தவர்களுக்கு அதனை ருசித்தால்தானே திருப்தி; நானும் அக்கூட்டத்தில் ஒருவன். என்றபோதிலும், இராஜஸ்தானை விட்டு புறப்பட்டபோது மாமிசத்தைக் காட்டிலும் காய்கறிகளையே அதிகம் விரும்புகிறவனாக நான் மாறியிருந்தேன். எனது சகோதரி அவ்வப்போது வீட்டில் செய்யும் கேரட் அல்வாவின் சுவை அலாதியானது. கோடை நாட்களில் ஆங்காங்கே முளைத்தெழும்பும் சிறுசிறு கடைகளில் கிடைக்கும் 'பானி பூரி' யின் சுவைக்கும் நான் மயங்காமலில்லை. பூரி வடிவில் சிறிதாயிருக்கும் அதனுள் உருளைக்கிழங்கு மற்றும் புளி தண்ணிர் வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். உயர்தர மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்கள் வரை ஒன்றாக சுற்றி நிற்க, கடைக்காரர் ஒவ்வொன்றாக ஒவ்வொருவருக்கும் வரிசையாக வைக்க, அது ஒரு அழகான காட்சி; கண்களுக்கு இனிமையான நிகழ்ச்சி.
இராஜஸ்தானில் நான் இருந்தபோதுதான் முதன்முறையாக வட நாட்டு நபர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஹோலி பண்டிகையின் நாளன்று நான் வீட்டினுள் அமர்ந்திருந்தேன். வீட்டுச் சொந்தக்காரர் விதவிதமான பலகாரங்களை வந்த விருந்தினர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென என்னைக் கண்டதும், பாசத்தில் என்மேல் கலர் பொடிகளை அள்ளி வீசி, எனது கன்னத்திலும் தேய்த்துவிட்டு, எனது ஆடைகளிலும் பூசிவிட்டார். ஒரு சகோதரத்துவம் மலர்ந்த அந்நாளே, நான் ஹோலி பண்டிகையை கொண்டாடிய முதல் நாள். நான் இராஜஸ்தானை விட்டு தமிழ்நாட்டிற்குப் புறப்பட்டபோது அந்த வீட்டின் சொந்தக்காரர் எனக்காக கறி சமைத்துத் தந்தது, என்னை மட்டுமல்ல எனது அக்காவின் குடும்பத்தினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நான் முதன் முதல் எனது பிறந்த நாளை எனது அக்கா தயாரித்துத் தந்த கேக்கை வெட்டிக் கொண்டாடியதும் அங்கு தங்கியிருந்தபோதுதான் என்பது கூடுதல் ஆனந்தம். பின்னர் சில நாட்கள் நான் பாபுவுடன் ஒன்றாக ஒரே அறையில் தங்கியிருந்தேன். அப்போதும் அநேக பாடங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இராஸ்தானிலிருந்து சொந்த ஊருக்குப் புறப்படும் வேளை வந்தது. ஒரு புறம் ஒன்றரக் கலந்துவிட்ட மக்களை விட்டுப் பிரியப்போகிறோமே என்ற உணர்வு அலைகள் மனதில் வீசிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் அதனைத் தாங்கவேண்டிய கட்டாயத்திற்குள் நான் என்னைத் தள்ளிக்கொண்டேன். சிலருடைய வார்த்தைகள் அவர்கள் என் மேல் வைத்திருந்த பாசத்தை வெளிக்காட்டியது. நேசிக்க உறவுகள் ஊரில் மட்டுமல்ல, வீட்டில் மட்டுமல்ல, கல்லூரியில் பள்ளிகளில் மட்டுமல்ல, வேலை ஸ்தலங்களில் மட்டுமல்ல உலகெங்கும் ஆண்டவர் ஏற்படுத்திவைத்திருக்கின்றார் என்ற உணர்வினால் இதயம் நிறைந்து இறைவனைத் துதிக்க எனது மனதுக்கு ஒரு தருணம் கிடைத்தது.
நான் சொந்த ஊர் செல்வதை அறிந்த எனது அக்கா தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர், அவரது வீட்டில் எனக்கு விருந்து ஒன்றை ஆயத்தம் செய்தார். அதனை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள 'புதோலி' என்ற சிறிய தண்ணீர் நிரம்பிய குளத்திற்குச் சென்று, அவரது குடும்பமும், எனது அக்காவின் குடும்பமும் மற்றும் பாபுவும் இணைந்து அந்த உணவை உண்டு மகிழ்ந்ததுடன் எங்களது அன்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம், உறவுகளை விட்டுப் பிரியும் உணர்வுகள் அங்கிருந்த ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் காணப்பட்டது. பாசத்தின் வலிமையை பிரிவின் நேரத்தில் உணரமுடிந்தது; பல சுகமான சுமைகளைச் சுமந்தவனாக, மீண்டும் ஒரு முறை என்றாகிலும் வருவோம் என்றநம்பிக்கையுடன் தமிழகத்தை நோக்கிப் புறப்பட்டேன்.
தமிழகத்தை நோக்கி
இராஜஸ்தானில் அந்த பள்ளியில் பணிபுரிந்து பின்னர் சொந்த ஊருக்குத் (செந்தியம்பலம்) திரும்பினேன். நான் அந்த பள்ளியில் பணிபுரிந்ததற்காக ஒரு தொகையினை அதன் நிறுவனர் எனக்குக் கொடுத்தார். தமிழ்நாட்டை நோக்கி பயணித்தேன், வரும் வழியில் இந்தூரில் ஒரு மத்திய அரசு கம்பெனியிலிருந்து இன்டர்வியூ கடிதம் வந்திருந்ததால், போகும் வழியில் அங்கு சென்றுவிட்டுச் செல்லத் தீர்மாணித்தேன், என்னுடன் பாபுவும் வந்தார். இன்டர்வியூவில் நான் தேர்வுசெய்யப்படவில்லை.
இன்டர்வியூ முடிந்த பின், இந்தூரில் நீச்சல் குளத்தில் நாங்கள் குளித்த அனுபவம் மறக்க முடியாதது. இன்டர்வியூதான் இப்படி ஆகிவிட்டது என்று வருத்தம் ஒருபுறம் எனக்குள் இருந்தாலும், அங்கிருந்த பிரசித்திப்பெற்ற நீச்சல் குளத்திற்குச் சென்று குளிக்கலாம் என இருவரும் புறப்பட்டோம். ஒருவழியாக டிக்கட் வாங்கி உள்ளே சென்றபோது அவர்கள் சொன்ன விதிமுறைகளே எங்களுக்கு விதியாகிவிட்டது. உள்ளே குளிக்கச் செல்லும் நபர்கள் அணிந்திருக்கும் உள்ளாடையைக் கழற்றிவிட்டு, அவர்கள் தரும் உள்ளாடையைத்தான் அணிந்து குளிக்கவேண்டும் என்று சொன்னார் அங்கிருந்த ஊழியர். நாங்களும் சரி என்று அவர்கள் கொடுக்கும் உள்ளாடைகளை வாங்கி அணிய முற்பட்டோம், சகோதரன் பாபு என்னைவிட சற்று உடல் பருமனானவரானபடியால், அவருக்கு அவர்கள் கொடுத்த உள்ளாடை பொருந்திவிட்டது; ஆனால,; எனது நிலையோ பரிதாபம்; உடல் மெலிவாக இருந்ததால் அவர்கள் கொடுத்த உள்ளாடை எனது இடுப்பில் நிற்கவே இல்லை. அதைவிட சிறிய உள்ளாடை அங்கே இல்லை, என்ன செய்வது என்று தெரியாமல், வேறு வழியின்றி அவர்கள் கொடுத்ததையே வாங்கி அணிந்துகொண்டு நீச்சல் குளத்தில் குதித்தேன் ,உள்ளாடையோ என்னைவிட்டு கழன்று சென்றுவிடுவேன் என என்னை அவ்வப்போது மிரட்டிக்கொண்டேயிருந்தது. ஒருவழியாக ஒரு கையால் அதனைப் பிடித்துக்கொண்டு, ஆழமில்லாத பகுதியில் சிறிது நேரம் ஆனந்தக் குளியலை முடித்துவிட்டு வெளியேறினோம், இன்றும் எனது நினைவினை விட்டு அந்த நீச்சல் குளம் நீங்கவில்லை.
இந்தூரிலிருந்து இரயில் மூலமாக சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தேன். சோர்ந்துபோனவனாக இருந்தாலும், மனதைத் தைதியப்படுத்திக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிவந்தேன். மீண்டும் செந்தியம்பலத்தில் எனது பெற்றோருடன் வாழ்க்கை தொடர்ந்தது; எனினும், வேலை தேடுவதிலும் நான் மும்முரமாகவே இருந்துவந்தேன், வேலை கிடைத்தபாடில்லை. ஊழியத்தில் நான் அதிகமாக ஈடுபட்டுவந்ததால், ஒரு கட்டத்தில் எனது பெற்றோர் என்னை நீ ஊழியத்திற்கே சென்றாலும் பரவாயில்லை என பச்சைக் கொடி காட்டினர். ஆனாலும், அப்போது அதனை அழைப்பாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வேலை கிடைக்காமல் ஊழியத்திற்கு சென்றேன் என்று யாரும் என்னை சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் அப்போது காணப்பட்டது. எனவே வேலைக்குச் சென்று பின்னர் அதனை விட்டுவிட்டுத்தான் ஊழியத்திற்குச் செல்லவேண்டும் என்ற உத்வேகம் என்னிடத்தில் குறையாதிருந்தது. இக்காரணத்தினாலேயே ஊழியம் செய்துகொண்டிருந்தாலும், வேலை தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டேன் நான். மீண்டும் கிராம வாழ்க்கை, மீண்டும் ஊழியங்கள் என எனது வாழ்க்கை தொடர்ந்தது. வழக்கம் போலவே வாலிபர்களைக் கட்டி எழுப்பும் பணியில் என்னை தீவிரப்படுத்திக்கொண்டேன். மீண்டும் எத்தனை நாட்களுக்கு சொந்த ஊரில் இருப்பேனோ என்ற சந்தேகம் என்னிடத்தில் நிறைந்திருந்தபடியினால், வாலிபர் தாங்களாகவே அப்பகுதியிலுள்ள வாலிபர்களை சந்திக்க அவர்களை எனது வார்த்தைகளினாலும், உரையாடல்களினாலும் பாரப்படுத்தினேன். எனது தரிசனத்தையும் பாரத்தையும் சுமந்து செல்லும் வாலிபர்களை அந்நாட்களில் தேவன் எனக்குக் கொடுத்திருந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.
இரண்டாம் பயணம்
இரண்டாம் முறையாக ஒரு கம்பெனியின் நேர் முகத் தேர்வினை எதிர்கொள்ளும்படியாக நான் இராஜஸ்தான் பயணமானேன். இரண்டாம் முறையாக நான் இராஜஸ்தான் சென்றபோது, டெல்லி வழியாக இரயிலில் சென்றேன்.அப்போது 'டெல்லியிலுள்ள சராய் ரோஹில்லா' ஸ்டேஷனில் ஒரு முன்பதிவு விண்ணப்பத்தை எடுத்து அது முழுவதும் ஹிந்தியிலேயே எழுதியிருந்ததால் என்ன செய்வதென்று அறியாதவனாக, அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு நபரிடம் உதவி செய்யும்படி கேட்டேன். அவரோ என்னைப் பார்த்ததும், 'மதராசி' என்று சொன்னதுடன், 'ஹிந்தி தெரியாமல் ஏன் வடஇந்தியாவுக்குவருகிறீர்கள்?' என்று அறைகுறை ஆங்கிலத்தில் என்னைத் திட்டிவிட்டுச் சென்றுவிட்டார்; ஆனாலும், படிவத்தை நிரப்புவதற்கு அவர் எனக்கு உதவிசெய்யவில்லை; எத்தனை கல் மனது. எனவே, படித்த நபர்கள் யாராது வருகிறார்களா என்று நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒரு நபர், எனது நிலையைக் கண்டு அதனை நிரப்ப எனக்கு உதவி செய்தார்; நல்லதோர் பாடம். இதனை தமிழக அரசியல்வாதிகளும் கற்கவேண்டும் என அப்போது நான் விரும்பினேன்.
நேர்முகத் தேர்விற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டு, கம்பெனிக்குள் நுழைந்தேன். அங்கு சுமார் 15 பேர் நேர்முகத் தேர்விற்காக வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தனர்; அது ஹிந்தி மொழியினால் அவர்களிடையே உண்டான பந்தம். அனால் நானோ அமைதியாயிருந்தேன், உடனிருந்த ஒரு சில சகோதரர்கள், என்னிடம் பேச்சு கொடுக்க, நானும் ஆங்கிலத்தில் அவர்களுக்குப் பதிலளித்தேன். இந்தியனான எனக்கு ஹிந்தியினால் உண்டான குந்தகத்தை நினைத்து நொந்துகொண்டேன். அந்த கம்பெனியின் நேர்முகத்தேர்வில் வெற்றி பெறாததினால், உடனே தமிழகம் திரும்பினேன்.
மீண்டும் ஜெபக்குழுவின் வளர்ச்சிப் பணிகளில் எனது சிந்தையினைச்செலுத்தத் தொடங்கினேன். வாலிபர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தினேன். என்னோடு அவர்களை பல இடங்களில் இணைத்துபிரசங்கம் செய்யவும், ஆத்தும ஆதாயம் செய்யவும் பழக்குவித்தேன்.வாலிபர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற பல காரியங்களைஅவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைக் கொண்டு பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் தரிசனத்துடன் காணப்பட்டேன்.
மூன்றாம் பயணம்
பின்னர் சென்னையில் Hindustan Institute of Engineering and
Technology என்ற கல்லூரியில் 18.11.1997 முதல் 30.11.2000 வரை ஆசிரியராகப் பணியாற்றினேன். (இதன் நினைவுகள் சென்னை கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது). பின்னர் சிங்கப்பூரிலுள்ள AKAI கம்பெனி சென்னையில் நடத்திய நேர்முகத் தேர்வில் தேர்ச்சிபெற்று, சிங்கப்பூர் செல்ல நினைத்து எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் காத்திருந்தேன். என்றபோதிலும், பல்வேறு காரணங்களால் எனது பயணம் தடைபட்டது. மீண்டும் வேலைதேடுவதில் தீவிரமனேன். எனது தந்தை பல வழிகளில் எனது வேலைக்காக முயற்சித்துக்கொண்டிருந்தார். அப்போது, இராஜஸ்தானில் எனது அக்காவின் கணவருக்குத் தெரிந்த சகோதரர் ஜேம்ஸ் மூலமாக ஒரு வேலை வாய்ப்பினைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்தார். அவரது முயற்சியினால் இராஜஸ்தானில் ஜெப்பூரிலுள்ள FIAT Cars Depo வில் எனக்கு பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. உடனே இராஜஸ்தான் பயணமானேன், 7 மார்ச் 2002 அன்று அந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்தேன்.
கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததும் எனது வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அறிவித்தேன். அப்போது எனது தகப்பனார் உனக்காக இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு ஜெப விண்ணப்பம் எழுதிப்போட்டதால்தான் இந்த வேலையைக் கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கின்றார், எனவே இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு ஆயிரம் ரூபாய் காணிக்கையை உடனடியாக அனுப்பிவிடு என்று என்னிடத்தில் எனது அம்மாவின் மூலமாக சொன்னார். வேலையின் நிமித்தமாகவும், அவசரத்தினிமித்தமாகவும் மூன்று மாதங்கள் நான் அதனை செய்யாது மறந்துவிட்டேன். மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஒருமுறை எனக்கு எனது அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது, இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு காணிக்கை அனுப்பிவிட்டாயா? என்று. அதனைக் கண்ட நான் உடனடியாக இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு ஆயிரம் ரூபாயை காணிக்கையாக அனுப்பிவைத்ததுடன், எனது அப்பாவிற்கும் அதனை தெரிவித்தேன்.
நான் எனது தந்தைக்குக் கடிதம் எழுத மறந்திருந்தாலும், அந்நாட்களில் எனது தந்தையிடமிருந்து கடிதங்கள் வரத் தவறியதில்லை. எனக்கு ஆறுதலான பல வரிகளைச் சுமந்து வந்த அந்த கடிதங்களுக்காக நான் காத்துக்கொண்டேயிருப்பேன். இத்தனை ஆறுதல்களுடனும், உற்சாகப்படுத்தும் வரிகளுடனும் எனது தந்தை எனக்கு கடிதம் எழுதிவந்தாலும், அவருக்கு நான் எழுதியவைகள் மிக மிகக் கொஞ்சமே.
Depot assistant பணியில் சேர்ந்து எனது வேலைகளைத் தொடர்ந்தேன். ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் நான் வேலை செய்யும் இடம் இருந்தது. பரந்த ஒரு இடம், உள்ளே நுழையும்போது இடப்புறம் அமைந்திருந்த பாதுகாவலர் அறை, அதனைத் தொடர்ந்து உள்ளே மத்தியில் இரண்டு அறைகள் அடங்கிய ஒரு சிறிய அலுவலகம். உள் அறையில் மேனேஜர் திரு.ஷைனி இருந்தார்; அடுத்த அறையில் நான் அமர்த்தப்பட்டிருந்தேன்; பணிகள் தொடங்கியது. பாம்பேயில் தயாரிக்கப்பட்டு இராஜஸ்தானில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் வாகனங்கள் எங்களது depo விற்குத்தான் வந்திறங்கும். அவைகளை ஒழுங்காக பரிசோதித்து அறிக்கை அனுப்புவது மற்றும் அலுவலகக் கணக்கு வழக்குகளை பராமரிப்பது போன்ற பணிகள் எனக்குக் கொடுக்கப்பட்டன. எனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தேன், ஹிந்தி மொழி அறியாதவனாகையால் ஆங்கிலத்திலேயே அலுவலகத்தில் பேசி வந்தேன். பின்னர் ஓரிரு வார்த்தைகளை ஹிந்தியில் கற்றுக்கொண்டு அதைக் கொண்டு சமாளித்துவந்தேன்.
எனது மேனேஜர் திரு.ஷைனி அவர்களுக்கு என்மேல் நல்ல மதிப்பு இருந்தது. அவருடைய வீட்டிற்கும் அவ்வப்போது என்னை அழைத்துச் சென்றிருக்கின்றார். அவரது மனைவி விருந்தினர்களை கனிவாக உபசரிக்கும் குணம் கொண்டவர். ஆனால், திரு.ஷைனி தனது மனைவிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையில் இருக்கின்ற குறைவை அவர்களது உரையாடல்களிலும், கோபமிகு வார்த்தைகளிலும், முகச்சுழிப்பிலும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. பணமிருந்தும் அவர்களிடையே அன்புக்கு குறைவிருந்தது, வந்த விருந்தினனாகிய எனக்கும் வெளிச்சமாயிருந்தது.
ஒருமுறை நான் அவரது வீட்டில் இருந்தபோது, அவரது பெண் குழந்தை அவரை நோக்கி ஓடி வர, அவர் ஆசையாய் மகளைக் கட்டி அணைத்துக்கொண்டு பாசமழையினைப் பொழிந்துகொண்டிருந்தார். அவளது சுட்டித்தனம் பற்றி அநேக சுவையான தகவல்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார்; குழந்தையோ இருவரின் முகத்தையும் திரு திரு என பார்த்துக்கொண்டிருந்தது. நான் முதன் முதலாய் அவளைப் பார்த்ததினால் என்னுடன் உடனே அவள் ஒட்டிக்கொள்ளவில்லை. அவளை கொஞ்சும் மனமிருந்தும் பழக்கக் குறைவினிமித்தம் என் மனதைத் தாமதிக்கப்பண்ணினேன். அவள் வீட்டில் எங்கும் ஓடி ஓடி எதையாவது எடுத்துக்கொண்டிருக்க, 'ஏய் உடைந்துவிடும், உடைந்துவிடும்' என்ற எச்சரிக்கையை இடையிடையே அவர் சொல்லிக்கொண்டிருந்தார். மழலையாதலால் எச்சரிக்கையில் உடனே அவள் மசிந்துவிடாமல் செய்ததையே திரும்ப திரும்ப தொடர்ந்துசெய்துகொண்டிருந்தாள்; என்றபோதிலும் அக்காட்சி சுவையான ஒன்றே.
மழலை மகளுடன் மனம் திறந்து கொஞ்சிக்கொண்டிருந்தாலும், மனைவியின் நேசத்தை துறந்திருந்த துறவி அவர். அழகிற்கும் அந்தஸ்திற்கும் எவ்வித குறைவுமில்லாத அவரது மனைவி அவரைக் கண்டால் சற்று எச்சரிக்கையாகவே நடந்துகொள்வதை அவரது மனைவியின் அங்கசைவிலிருந்தும், முகத்திலிருந்தும் எளிதில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒருமுறை அவரைத் தேடி நான் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அலுவலகத்தின் ஒரு வேலைக்கான காகிதத்தில் அவரிடத்தில் கையொப்பம் வாங்கி அவசரமாக அதனை இ-மெயிலில் அனுப்பவேண்டும் என்பதற்காக மாலையில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். கதவைத் தட்டியவுடன் அவரது மனைவி வந்து திறந்தார்; 'சார் இருக்காங்களா' என்று கேட்டேன். உடனே அவர் 'உள்ளே வாங்க உட்காருங்க, வெளியில போயிருக்கார், ஆனால் வந்துவிடுவார்' என்றுசொல்ல, நானும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தேன். ஒரு மணிநேரத்திற்கும் மேலாகிவிட்டது; அவர் வரவில்லை. அவசரமாக கையொப்பம் வாங்கவேண்டியதிருந்தபடியால், நேரமானாலும் பரவாயில்லை என்ற மனநிலையுடன் நான் காத்திருந்தேன். அப்போது உள்ளே நுழைந்தார் திரு.ஷைனி. நான் உடனே எழுந்திருந்து, வணக்கம் தெரிவித்தேன், ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து 'என்ன விஷயம்?' என்று கேட்டார். அதுவரை என்னிடத்தில் சிலகாரியங்களை பேசிக்கொண்டிருந்த அவரது மனைவி அமைதியானார். நான் விபரத்தைச் சொல்ல, அதில் உடனே கையொப்பம் இட்ட அவர், தொடர்ந்து 'என்னையெல்லாம் தேடி வீட்டுக்கு வரவேண்டாம், ஏதாவதுகாரியம் என்றால் டெலிபோனில் சொல்லுங்கள் வீட்டுக்கு வரவேண்டாம்' என்று சொன்னதின் உள் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. இக்குடும்பத்தின் சீர்குலைவிற்குக் காரணம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. அவர் தவறான இணையதளங்களைப்பார்ப்பதே அதற்கு பிரதான காரணம் என்பதை பின்வரும் நாட்களில் தெரிந்துகொண்டேன்.
நான் வேலை செய்துககொண்டிருந்தபோது, ஜெய்ப்பூரில் எனது அக்காவிற்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்த ஒரு சகோதரனுடன் தங்கியிருந்தேன். அந்த சகோதரனுடனேயே சமைத்து சாப்பிட்டு வந்தேன். அந்நாட்களிலேயே வடஇந்திய சப்பாத்தி எப்படி தயாரிப்பது என்று முதன் முறையாகக் கற்றுக்கொண்டேன். நான் முதன்முதல் சுட்ட சப்பாத்தியை அன்று நான் சாப்பிடவில்லை. அதனை தனியாக எடுத்து உடனே வெயிலில் காயவைத்து, ஞாபகார்த்தத்திற்காக எனது அறையில் பத்திரமாக வைத்திருந்தேன். 'ஜீவ அப்பம் நானே' என்ற இயேசுவின் வார்த்தையை அதில் எழுதிவைக்கவேண்டும் என்று பலமுறைநான் நினைத்தேன், ஆனால் அதன் இயற்கை அழகை அழித்துவிடக்கூடாது என அப்படியே வைத்திருந்தேன். 2002 ம் ஆண்டுவரை பத்திரமாக வைத்திருந்தேன். பின்னர் ஒரு நாள் எலி ஒன்று அதனை எனது அலமாரியிலிருந்து கீழே தள்ளிவிட்டு உடைத்துவிட்டது.
அந்நாட்களில், நான் விட்டு வந்த ஜெபக்குழு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி கடிதங்கள் எழுதி அவர்களை உற்சாகப்படுத்துவதை நான் கவனமாக தொடர்ந்து செய்துவந்தேன். ஒரு நாள் இரவில் பல பக்கங்களைக் கொண்ட கடிதங்களை 21 நண்பர்களுக்கு ஆலோசனையாக விடிய விடிய எழுதினேன். அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள் என்னை ஆனந்தத்திற்குள் அழைத்துச் சென்றன. ஒரு வாலிபனையும் இழந்துவிடக்கூடாது என்பதிலேயே என் கவனம் முழுவதும் அமிழ்ந்திருந்தபடியினால், அதற்காக எந்த விலைக்கிரயத்தையும் செலுத்த நான் தயங்கியதில்லை. அவர்களின் பிறந்த நாட்களை கவனமாக நான் வைத்திருந்து அவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பவும் நான் மறந்ததில்லை.
ஒரு நாள் ஜெய்ப்பூரிலிருந்து நீம்காதானா செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தேன். இடது புறம் இருந்தஇரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில் நான் தனியனாக அமர்ந்திருந்தேன்;. பேருந்து புறப்பட்டபோது ஒரு வாலிபன் ஓடி வந்து ஏறினான். முன் வாசலில் ஏறிய அந்த வாலிபனை நானாக அழைத்து, எனக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன், அவனும் வந்து அமர்ந்தான். தன்னுடைய பெயர் கிரன் என்றும், ஜெய்ப்பூரில் ஒரு தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை செய்வதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். நீம்காதானா செல்லும் வரை எங்களுடைய பேச்சு தொடர்ந்துகொண்டேயிருந்தது, என்னைக் குறித்த பல காரியங்களை நான் அவனுக்கு வெளிப்படுத்தவும், அவனைப் பற்றிய பல விஷயங்களை நான் தெரிந்துகொள்ளவும் அந்த உரையாடல் உதவியது. அவனை எனக்கு நண்பனாக்கியதோடு மாத்திரமல்ல, மீண்டும் சந்திக்கலாம் என்ற வரிகளுடன் விடைபெற்றேன். நீம்காதானா வந்தபோது நான் இறங்கிக்கொண்டேன், அந்த வாலிபன் அதே பேருந்தில் தொடர்ந்து பயணித்துச் சென்றான்.
ஒரு நாள் ஜெய்ப்பூரில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு என்னைத் தேடிவந்தான் அந்த வாலிபன். நான் அவனை எனது அறைக்கு உள்ளே அழைத்துச் சென்றேன். எனது வீட்டின் சொந்தக்காரர் 'தம்பி அது யார்?' என்று கேட்க, நானோ 'எனது நண்பன்' என்று பதிலளித்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டேன். சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவன், 'எனது நண்பன் ஒருவனுக்கு பைக் விபத்து நேரிட்டுவிட்டது, அவசரமாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருகிறேன், ஏதாவது பணம் இருந்தால் கொடுங்கள், திருப்பித் தந்துவிடுகிறேன்' என்று சொன்னான். நானும் தயங்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டிராமல், உடனே 500 ரூபாயை அவனிடம் கொடுத்து அவனை அனுப்பி வைத்தேன். அவன் எனது அறையை விட்டு வெளியே சென்றதும், எனது வீட்டின் சொந்தக்காரர் என்னிடத்தில் வந்து, 'தம்பி, அந்த பையனுக்கு பணம் ஏதும் கொடுத்தீங்களா?' என்று கேட்டபோது, நடந்ததை அவருக்குச் சொன்னேன். உடனே அவர் 'இப்படி ஏமாத்துறவங்க அநேகம் பேர் இங்க உண்டு பார்த்து நடந்துகொள்ளுங்கள்' என்று எனக்கு ஆலோசனை சொன்னார். நானும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் அந்த வாலிபனை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ளஇயலவில்லை, அவனது விசிட்டிங் கார்ட் இன்னும் என்னிடத்தில் இருக்கிறது.
ஒருமுறை அலுவலகம் விடுமுறையானதினால், ஜெய்ப்பூரிலிருந்து நீம்காதானாவிற்கு இரயிலில் சென்றுகொண்டிருந்தேன். ஜன்னல் அருகேநான் அமர்ந்திருந்தேன், எனது இடது புறத்தில் மேலும் மூன்று பேர் அமர்ந்திருந்தனர்; இரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எனது இருக்கையின் பக்கத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் உட்கார இடமின்றி நின்றுகொண்டிருந்தார். அங்கிருந்த யாரும் அவரைக் கண்டு இரக்கப்படவில்லை, அவரவர் தத்தம் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இதனைக் கண்ட நான் அந்த முதியவரை அழைத்து, எனது இருக்கையில் கொஞ்சம் நான் ஒதுங்கி இருந்துகொண்டு அவரை உட்காரச் சொன்னேன். அவரும் வந்து உட்கார்ந்தார், மற்றவர்கள் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தனர், அவர்களது பார்வைகளில் ஏதா நான் அவர்களுக்கு இடையூறு உண்டாக்குகிறேன் என்று அவர்கள் சொல்வதுபோல இருந்தது. என்றபோதிலும் யாரும் வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. அப்போதுதான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நான் உட்காரச் சொன்ன அந்த முதியவர் என்னை மேலும் சற்று ஒதுங்கி இருக்கும்படிக்குச் சொன்னார். நானும் வயதான மனிதர், சற்று நிம்மதியாகஉட்காரட்டுமே என்று மேலும் கொஞ்சம் ஒதுங்கியிருந்தேன். சிலநிமிடங்கள் கழித்து, 'தம்பி உனது கால் என் மேல் படுகிறது' என்றுசொன்னபோது, நானும் எனது காலை மேலும் மடக்கிக்கொண்டேன். ஆனாலும் அவர், 'நான் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன், நீ தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன், உனது சரீரம் என்மேல் படக்கூடாது' என்றுசொன்னபோது, மற்றவர்கள் ஏன் இந்த முதியவருக்கு இடம் கொடுக்காதிருந்தார்கள் என்பது எனக்கு விளங்கியது. தொடர்ந்து அவர்தனது பூநூலையும் காட்டியபோது, நானோ, 'தமிழ் நாட்டில் அனவைரும் பிராமணர்கள்தான்' என்று சொன்னேன். எப்படி என்று கோபத்துடன் கேட்டார். நான் பதிலாக நீங்கள் மேலே வெள்ளை நிறத்தில் பூநூல் போடுகிறீர்கள், நாங்கள் கருப்பு நிறத்தில் இடுப்பில் போடுவோம் அவ்வளவுதான் வித்தியாசம் என்று சொன்னதும், கொதித்து எழுந்த அந்த முதியவர் தனது செருப்பைக் கழற்றி என்னை அடிக்க வந்தபோது அருகில் இருந்த மற்றவர்கள் அவரைத் தடுத்தனர். என்னால் உண்டான வினை என்று என்னையே நொந்துகொண்டேன். இரயில் நீம்காதானாவை நெருங்கியது, என்னுடன் இருக்கையில்அமர்ந்திருந்த அனைவரும் இடையில் வந்த நிலையங்களில் இறங்கிவிட, நானும் அந்த முதியவரும் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த முதியவர்என்னை நோக்கி, நீ என்னை திட்டிய சாபம் நீங்குவதற்காக எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்துவிடு என்று சொன்னபோது எனக்குமேலும் கோபம் உண்டானது. அப்போது எனக்கு அருகிலிருந்தவர் 'இவர்களின் பொழப்பே இதுதான், வாங்கிக் கொடுத்திட்டு போங்க தம்பி' என்றவாறு ஹிந்தியில் சொல்ல, நானும் பிரச்சனையை தொடர மனதில்லாது, ஒருநிலையத்தில் இரயில் நின்றபோது, ஜன்னல் வழியாக ஐந்து ரூபாய்க்கு ஒரு சில பூரிகள் வாங்கி அவருக்குக் கொடுத்தேன். அடுத்த நிலையத்தில் அவரும் இறங்கிவிட்டார், ஆனால் அவரைக் குறித்த நினைவுகளோ இன்னும் என் மனதை விட்டு இறங்கிவிடவில்லை. ஜாதியினால் மனிதன் கொண்டிருக்கும் வெறியை நினைத்து எனது உள்ளம் புழுங்கிக்கொண்டேயிருந்தது.
நான் இராஜஸ்தானில் தங்கியிருந்தபோது அவ்வப்போது வீட்டை விட்டு வெளியெ வெறுங்காலில் நடப்பது எனது வழக்கமாயிருந்தது. இப்படி நான்செய்ததற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் கிடையாது, நான் வெறுங்காலில் நடந்து பார்க்கவேண்டும் என நினைத்தேன், செய்தேன் அவ்வளவுதான் நானறிந்தது. இந்த பழக்கம் பின்னர் பல இடங்களில் எனக்குத் தொடர்ந்தது. செருப்பு அணியாமல் செல்வதை நான் அத்தனை பெரியதவறாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தேன்.
இராஜஸ்தானின் சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்பட்டது. கோடை காலங்களில் மிகுந்த வெப்பம் காணப்படும், வீட்டை விட்ட வெளியே செல்ல இயலாது; அநேகநேரங்களில் வெப்பத்தின் மிகுதியினால் இரவில் தூங்க முடியாமல், ஒருபிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிரப்பி தண்ணீருள் காலைப் போட்டுக்கொண்டும் தூங்கியிருக்கிறேன். அதைப்போலவே குளிர்காலங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும், குளிர் ஆடைகள் இல்லாமல் சிறிது நேரம் கூட இருப்பது என்பது கூடாதது.
ஜெய்ப்பூரில் நான் பணியாற்றியபோதும் ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தின் ஊழியர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு உண்டானது. சகோ.மலர்செல்வன், சகோ.ராஜா, சகோ.வியாஸ், சகோ.சாம்ஸன், சகோ.தேவ்குமார் மற்றும் சகோ.ராபின் போன்ற ஊழியர்கள் இன்றும் எனது நினைவில் நிற்கின்றனர். ஒரு முறை BYM ன் பணித்தளமான ஸ்ரீமாதப்பூருக்குச் சென்றிருந்தேன், அங்கு பணிபுரியும் சகோ.மலர்செல்வன் அவர்களுடன் ஐக்கியம் கொள்ளவும், அங்கு நடைபெற்ற ஆராதனைகளில் பங்குபெறவும் சிலாக்கியம் பெற்றேன்.
அதேபோன்று அதன் அருகிலுள்ள சகோதரர் வியாஸ் என்ற BYM மிஷனரியின் பணித்தளத்திற்குச் சென்று அங்கு ஆராதனையில் செய்தியளிக்கவும் கர்த்தர் உதவி செய்தார். சிறிய வீட்டில் நடைபெற்றஅந்த ஆராதனையில் ஏறக்குறைய முப்பது விசுவாசிகள் கூடியிருந்தனர். தேவ ஆலயத்தின் பக்தியும் தேவ வார்த்தையின் எதிர்பார்ப்பும் எல்லாருடைய முகத்திலும் தென்பட்டது. நான் ஆங்கிலத்தில் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்துகொள்ள சகோதரர் வியாஸ் அதனை ஹிந்தியில் மொழி பெயர்த்தார். பணித்தளங்களில் காணப்பட்ட இத்தகைய ஆலயங்களில் பிரசங்கித்ததிலும், கூடிவந்த விசுவாசிகளைச் சந்தித்ததிலும் எனக்கு அலாதியான மகிழ்ச்சி உள்ளத்தில் உண்டானது.
அந்த நாட்களில் மெல்ல மெல்ல இராஜஸ்தானைக் குறித்த பாரங்கள் எனது நெஞ்சில் குடிகொள்ளத் தொடங்கின. இறைவனின் நினைவுகளைஅறியாமல் இங்கேயே இருந்துவிடுவோமா என்று நினைத்த நாட்களும் உண்டு. ஊழிய வாஞ்சையுள்ள எனக்கு தேவன் அதனைநிறைவேற்றிக்கொடுத்தார். பல நபர்களை சந்திக்கவும், பேசவும் எனக்குவபாய்ப்பு கிடைக்கும்போது, இவர்களெல்லாம் ஒரு ஐக்கியமானால் எப்படியிருக்கும் என்று கனவுகண்டுகொண்டிருந்தேன்.
இராஜஸ்தானில் கிடைத்த ஐக்கியம்
ஜெயப்பூர் ஆலயத்தின முன் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஜெய்ப்பூரில் நான் பணியாற்றிவந்த தொடக்க நாட்களில், அங்கு சரியானகிறிஸ்தவ ஐக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. பல நாட்கள் ஆலயஆராதனைக்குச் செல்லும் வாய்ப்பற்றவனாகவே நான் காணப்பட்டேன்.நான் தங்கியிருந்த வீட்டின் அருகாமையிலிருந்த நான்கு வழிநெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு நாளும் ஏதாகிலும் ஒரு நெடுஞ்சாலையில் மாலை நேரத்தில் நடந்துகொண்டே ஜெபிப்பது எனது வழக்கமாயிருந்தது.அடிக்கடி எனது வீட்டிற்கு அருகாமையிலிருந்த நெடுஞ்சாலையை ஒட்டியஇடம் ஒன்றில் வாலிபர்கள் வாலிபால் விளையாடுவதைப் பார்த்துரசித்துக்கொண்டிருப்பேன். அங்கிருந்த ஒரு மலையாள சபையின்ஆராதனையில் ஒரு நாள் பங்குபெற்றேன். பின்னர், எனது வீட்டின் அருகிலிருந்த போதகர் ஜஸ்டின் (Father's House in India) உடன் நல்லதோர் நட்பு உண்டானது. அவர் இராஜஸ்தான் யுனிவர்சிட்டியில் பணிசெய்துகொண்டே, Father's House in India வின் ஊழியங்களையும் செய்துவந்தார். Father's House in India இராஜஸ்தானின் பல பின்தங்கிய கிராமங்களில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியினைச்செய்துகொண்டிருந்தது. நான் வேலை செய்யும் கம்பெனிக்கு சிலதொலைவில், அவரது வீடு இருந்த இடத்திற்கு அருகிலேயே எனக்கும் தங்குவதற்கான புதிய வீட்டினை வாடகைக்கு ஒழுங்கு செய்துதந்ததுடன், எரிவாயு இணைப்பினைப் பெறவும் இன்னும் பலவிதங்களிலும் எனக்கு போதகர் ஜஸ்டின் மிகுந்த உதவியாயிருந்தார்.தனது உடன் பிறந்த சகோதரனைப் போல அவர் என்னைப் பாவிப்பதைக்கண்டு தேவனுக்கு நான் நன்றி செலுத்தினேன். அவ்வப்போது Father's House in India இராஜஸ்தானில் கிராம ஊழியங்களின் பணித்தளங்களுக்கும் அவரது ஊழியர்களின் குழுவுடன் என்னையும்அழைத்துச் சென்றார். Father's House in India வின் இயக்குநர்அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு, சகோதரர் ஜஸ்டின் அவர்களால் ஜெய்ப்பூரில் எனக்குக் கிடைத்தது.
எங்கேயும் ஊழியம் செய்யச் செல்லமுடியாமல் வனாந்தரமானவாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்த எனது வாழ்க்கையில் இந்தவாய்ப்பினை அளித்த தேவனுக்கு நன்றி சொன்னேன். மேலும்,ஊழியர்களின் கூடுகைக்கும் அவர் என்னை அழைத்துச் சென்றதுடன், பலஇடங்களில் என்னை செய்தியளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சிங்கம்போல பேசின எனக்கு இராஜஸ்தானில்பிரங்கம் பண்ண வாய்ப்புகள் வந்தபோது, மொழியே அதற்குபெருந்தடையாகக் காணப்பட்டது. இந்தியாவில் சுவிசேஷம் அறிவிக்கப்படக்கூடாது என்பதற்காக சத்துரு கொண்டுவந்த தடையேஇந்தி மொழி எதிர்ப்பு என்பதை அப்போது தெளிவாக நான் உணர்ந்துகொண்டேன்.
நீம்காதானாவில் எனது சகோதரியின் பணித்தள ஆலய ஆராதனையில் நான் தமிழில் பேச, எனது அக்காவின் கணவர் ஹிந்தியில் மொழிபெயர்பது வழக்கம். ஆனால் இப்போது நான் இன்னும் ஒருபடிமேலே முன்னேறும்படி தேவன் விரும்பினார். போதகர் ஜஸ்டின் அவர்களின் உதவியுடன் ஒரு சில சிறு சிறு கூடுகைகளில் தமிழிலும்,ஆங்கிலத்திலுமாக செய்திகொடுக்கத் தொடங்கினேன்; போதகர் ஜஸ்டின் எனக்கு மொழிபெயர்த்து உதவினார். அவருடனான உறவுவலுமையாயிருந்தது. தனது சொந்த சகோதரனைப் போலவே என்னைஅவர் பாவித்து அத்தனை உதவிகளையும் செய்துவந்தார். விடுமுறைக்குஅவர் தமிழ்நாடு செல்லும்போதும், அவரது வீட்டின் சாவியைஎன்னிடத்தில் கொடுத்தே செல்வார்; இப்படி ஒரு நபரை எனக்குஅவ்விடத்தில் கொடுத்த தேவனுக்கு நன்றி செலுத்தினேன். அவர்நம்மேல் நினைவாயிருக்கிற தேவனல்லவா.
மேலும் சகோ.ஜேம்ஸ் அவர்களின் குடும்பத்திற்கும் நான் அவ்வப்போதுசென்றுவந்தேன். சகோதரர் ஜேம்ஸ் சாங்கி கார்ஸ் என்ற தனியார்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சகோதரி ராணிமிலிட்டரியில் Lt.Cannal ஆக இருந்தார்கள். இவர்களது குடும்பத்தில்நானும் ஒருவனாகவே அவர்களால் எண்ணப்பட்டேன். இவர்களுடையமுதல் குழந்தை 'ஆஞ்சல்' ஐ முதன் முதலாக தொட்டிலில் மாமன்தான் கிடத்தவேண்டும் என்று அவர்கள் என்னை கிடத்தச் சொன்னது எனக்குஅவர்கள் கொடுத்திருக்கும் ஸ்தானத்தை புரிந்துகொள்ளச் செய்தது.நேரம் கிடைக்கும்போதெல்லாம் சகோதரரின் வீட்டிற்குச் சென்றுவந்தேன்.நான் உரிiயாய் சென்று வந்த அந்த நாட்கள் இன்றும் எனதுநினைவுகளை விட்டு உதிரவில்லை.
மேலும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சகோதரர், தாஜ் ஹோட்டலில் பணிபுரிந்த சகோ.ரமேஸ் குடும்பத்தினர், தனியர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த சகோ.அம்புரோஸ் குடும்பத்தினர், Civil Service ல் உயர்பதவியை வகித்துந்த சகோ.கனகராஜ் குடும்பத்தினர் போன்றோரின் உறவும் அன்பும் எனக்குக் கிடைத்தது. சகோதரர் கனகராஜ் அவர்களைச் சந்திக்க ஒரு முறை அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். முதன் முறையாகச் சென்றதால், அந்த இடத்திற்குள் அங்கும் இங்கும் பார்த்தபடியே நடந்துசென்றுகொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த இராணுவ வீரர் இருவர் என்னை அழைத்து, 'நீ யார்? யாரைப்பார்க்கவேண்டும்?' என்று பல கேள்விகளைக் கேட்டனர். நான் 'திரு.கனகராஜ் அவர்களைப் பார்க்கவேண்டும்' என்று கூற மேலும் விசாரித்துவிட்டு சில நிபந்தனைகளுடன், எனது ஓட்டுனர் உரிமத்தைவாங்கிக்கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தனர். அவரதுஅலுவலகத்திற்குச் சென் நான் வந்திருப்பதை அவரது உதவியாளரிடம்அறிவித்தேன்; உடனே உள்ளே வரும்படி அழைத்தார். தேனீர்அருந்திவிட்டு, சில நிமிடங்கள் என்னோடு பேசிக்கொண்டிருந்தார்,அலுவல்களால் அவரது அலுவலகம் நிறைந்திருந்ததை என்னால் காணமுடிந்தது. அப்போது எனக்கு அவர் கொடுத்த Water heater இன்றும் எனது வீட்டில் அவரை நினைவுபடுத்துகின்றது. அவரது குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இறைவன் கொடுத்த பாக்கியம். பலநேரங்களில் அவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தில் இருவரும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருப்போம்.அவரது சாட்சியினை என்னிடம் கூறிக்கொண்டிருப்பார், தனதுஉரையாடல்களின் மத்தியில் அவ்வப்போது தேவனை உயர்த்திக்காட்டஅவர் மறந்ததில்லை. தனது மூத்த மகனின் வாழ்க்கையில் தேவன்செய்த அற்புதங்கள், மற்றும் குடும்பத்தில் தேவன் செய்த பலகாரியங்கள் சாட்சயாய் எனது காதுகளில் நுழைந்தன. பல நேரங்களில் அவரது வீட்டில்உணவருந்தவும் கர்த்தர் கிருபை பாராட்டினார்.அன்பான உபசரிப்பின் மத்தியில் பரிமாறப்படும் உணவைக்காட்டிலும் உயர்ந்து நின்றதுஅவரது துணைவியாரின் உபசரிப்புதான்.
இவர்களில் பலர் நகரில் மத்தியில் உள்ள CNI ஆலய ஆங்கில ஆராதனையில்பங்கேற்றுவந்ததால், நானும் CNI சபையின் ஆங்கில ஆராதனையில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். முழுக்க முழுக்க ஆங்கில ஆராதனை, என்றாலும் தமிழகத்தின் CSI ஆலய ஆலயபின்னணியிலிருந்து வந்திருந்த எனக்கு அந்த ஆராதனை முறையில் வித்தியாசங்கள் பல தென்பட்டன. ஆராதனையின்போது ஜெபிக்கும்போதுயாருமே முழங்கால் படியிடாதது, பெண்களின் மற்றும் வாலிபபிள்ளைகளின் தாறுமாறான உடைகள் போன்றவை எனக்கு சற்றுஎரிச்சலூட்டினாலும், ஆண்டவரை எனது உள்ளதில் உண்மையாய் அந்தஆராதனையில் நான் தொழுதுகொண்டேன்.
பின்வரும் நாட்களில் நாங்கள் அனைவரும் மாதம் ஒருமுறை ஒருவரதுவீட்டில் கூடி ஜெபிக்கவும் கூட்டங்களை நடத்தவும் தொடங்கினோம், இதுஎனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டுவந்தது. குழுவில் இருந்தஅனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் கூட்டங்களில் பங்கேற்றனர்.பலநேரங்களில் பல வீடுகளில் இரவு உணவும் கூட்டத்தின் முடிவில் வழங்கப்படும். இந்த ஐக்கியம் எனது ஆவிக்குரிய வாழ்க்கையை மேலும் ஊக்கப்படுத்தியது. தேவன் ஒருபோதும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தனியே விடுவதில்லை என்று நினைத்துஅவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினேன்.
ஒருநாள் ஆலய ஆராதனை முடிந்து நாங்கள் வெளியேநின்றுகொண்டிருக்கும்போது, சகோதரர் அம்புரோஸ் என்னிடத்தில் வந்து,அங்கு நின்றுகொண்டிருந்த வேறு ஒரு ஆராதனைக்கு வந்தசகோதரியைக் காண்பித்து 'பிரதர் அந்த சகோதரி தன்னுடைய வீட்டில் கூட்டம் நடத்தமுடியுமா என்று என்னிடத்தில் கேட்கிறார்' என்றுசொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அந்த சகோதரி சென்றபின்னர், என்னிடத்தில் அவர் 'பிரதர், அவர்ளுக்கு தமிழ் தெரியாது,நீங்கள் ஆங்கிலத்தில் தான் செய்தியளிக்கவேண்டும்' என்றுசொன்னபோது எனது இதயமே நின்றுவிட்டதைப்போலாகிவிட்டது. இதுவரை எங்களது குழுவில் இருந்த அத்தனை பேரும் தமிழ் மக்கள் என்பதால் எனக்கு எந்த சிரமமும் இருந்ததில்லை. ஆனால்,ஆங்கிலத்தில் இந்த சகோதரியின் வீட்டில் எப்படி பேசுவது என்பதே எனக்கு பெரிய சிந்தையாகிவிட்டது. என்றபோதிலும் எனது மனதில் 'அந்நிய பாஷையைத் தரும் ஆவியானவர், இந்த பாஷையைத் தருவார்' என்ற விசுவாசத்துடன் அந்த சகோதரியின் குடும்பத்திற்குச் சென்றுஆங்கிலத்தில் பாடல்களைப் பாடி, ஆங்கிலத்திலேயே செய்தியினையும் நான் கொடுக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேவன் அடுத்தநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும்போது நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்ற பாடத்தை அப்போது நான் கற்றுக்கொண்டேன்.
சகோதரர் அம்புரோஸ் அவர்களது குடும்பம் நான் தங்கியிருந்தஇடத்திற்கு சற்று அருகாமையிலேயே இருந்ததால், அவ்வப்போது அவர்களது வீட்டிற்குச் சென்றுவருவது வழக்கம். ஒரு முறை அவர்களதுவீட்டில் உட்கார்ந்து எனது குடும்பத்தைப் பற்றியும், பெற்றோரைப் பற்றியும், அவர்களது அன்பைப் பற்றியும் விரிவாக ஏறக்குறைய ஒருமணிநேரம் அவர்களது வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்துஉரையாடிக்கொண்டிருந்தது இன்றும் எனது நினைவில் இருக்கின்றது.உரையாடல்களுக்கு இடை இடையே அவர்களது துணைவியார் கொண்டுவந்த காப்பி களைத்துவிடாதிருங்கள், தொடர்ந்து பேசுங்கள் என்றுஎங்களை உற்சாகப்படுத்துவது போல இருந்தது. முதியோர்களுடன் அமர்ந்து பேசுவதை அதிகம் விரும்புகின்ற, எதிர்பார்க்கின்ற எனக்குஇவரது உறவு ஒரு வரப்பிரசாதம்.
சகோதரர் அம்புரோஸ் அவர்களது இளைய குமாரன் சாம் ஒரு முறைஎனது வீட்டிற்கு மாலையில் வந்திருந்தான். நாங்கள் இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருக்க, இரவும் நெருங்கிற்று. சாம் தனது வீட்டிற்கு போன் செய்து என்னுடைய அறையில் இரவு தங்கிவிட்டு வருகிறேன் என்றுசொல்ல, நாங்கள் இருவரும் அந்த டெலிபோன் பூத் அருகிலிருந்தகடையில் சில திண்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு, அறைக்குச் சென்றோம்.அன்று அவன் எனக்கு ரொட்டி தயாரித்துக் கொடுத்தான், அது இன்றும் நினைவில் இருக்கிறது.
இப்படிப்பட்ட குடும்பம் போன்ற ஓர் அமைப்பு எனக்கு இராஜஸ்தானில்கிடைத்தது, இறைவனாலேயே என்பதை நான் பலமுறை நினைத்துநினைத்து அவருக்கு நன்றி செலுத்தியிருக்கிறேன். எங்கு சென்றாலும் நம்மைக் கைவிடுகிறவர் அல்ல நமது கர்த்தர்.
சவால்களுடன் ஓர் சந்திப்பு
நான் ஜெய்ப்பூரில் FIAT Depo - ல் பணியாற்றிய நாட்கள் எனக்கு சவால் நிறைந்த நாட்களாகவே காணப்பட்டன. அங்கிருந்த மேனேஜர் திரு.ஷைனி அகே முறைகேடுகளை அந்த கம்பெனியில் செய்துவந்தார்.பல நேரங்களில் அவர் அலுவலகத்திற்கு வருவதே கிடையாது. யாராவதுஉயர் அதிகாரிகள் போன் செய்தால், தான் அங்கேதான் இருக்கிறேன் என்று சொல்லும்படி என்னிடம் சொல்லிவிட்டு சென்றவிடுவார். பணத்திலும் பல முறைகேடுகள். இதனால் அவரோடு இசைந்து செல்வதும்,பணிபுரிவதும் எனக்கு பெரிய சவாலாகவே காணப்பட்டது. நல்லதோர்கம்பெனி, நல்ல வேலை, நல்ல சம்பளம் ஆனால் சூழ்நிலையோ பலகேள்விகளைச் சுமந்து நின்றது. என்றாலும் தேவனுக்கும், மனிதனுக்கும் உண்மையாக எனது வேலையினைத் தொடர்ந்தேன்.
அப்போது அந்த அலுவலகத்தில் எங்கள் இருவருக்கும் இருந்தது ஒரேஒரு கணணிதான். அதில்தான் இருவரும் எங்களது பணிகளைசெய்துகொள்வோம். மேனேஜர் அலுவலகத்தில் இருக்கும்போது அதிகமாகஅவர் அதனைப் பயன்படுத்துவார், நான் கணக்கு வழக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவரில்லாதபோது அந்த கணணியில் நான் என்னுடைய பணிகளை முடித்துக்கொள்வேன். அப்போது ஒரு முறைஅந்தக் கணணியில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் ஜெபித்து அலுவலகத்திற்குச் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா எனடெப்போவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு, எனது இருக்கையில் சென்று அமர்ந்தேன்; மீண்டும் ஒரு ஜெபம், இது எனது அனுதினவழக்கம். அலுவலகத்தில் எனது தனியான மௌன ஜெபத்தைத்தொடர்ந்து கணணியை ஆன் செய்தேன். எனக்கோ பெரிய அதிர்ச்சி, கணணியில் முன் திரையிலேயே 'அருவருப்பான, ஆடைகளற்றபெண்களின் படங்கள் மற்றும், கண்ணால் காணக்கூடாத காட்சிகள்' காணப்பட்டன. அதிர்ந்துபோனேன். உடனே அதனை அப்படியேஅழித்துவிட்டு, எனது வேலையினைத் தொடர்ந்தேன். எனதுஉள்ளத்திலோ பரிசுத்தத்தைக் குறித்த பயமும் பீதியும் படையெடுக்கஆரம்பித்தது. இப்படி நான் அதனை அழித்துவிட்டு எனது வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். எனது மேனேஜர் வரும் முன்னர்அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அதனை கணணியையும் ஆப் செய்துவிட்டு எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன். அப்போதுமேனேஜர் அலுவலகத்தினுள் நுழைந்தார். நானும் அவருக்கு காலைவணக்கம் சொல்லிவிட்டு எனது வேலையினைத் தொடர்ந்தேன். சற்றுநேரத்திற்கெல்லாம் அவர் என்னை அவரது அறைக்கு அழைத்து,கணணியை நீங்கள் ஆன் செய்தீர்களா? என்று கேட்டார், ஆம் என்றேன்.அவரது கேள்வி தொடர்ந்தது; கணணியில் எதையாவது டெலீட் செய்தீர்களா? என்று கேட்டார், நான் பதிலாக, 'ஆம் சார், internet history pages ஐ delete செய்தேன் என்றேன்; அதன் பின்னர் ஏன் அவைகளைடெலீட் செய்தீர்கள் என்று கேள்வி கேட்க அவரது மனம் துணியவில்லை; தனது காரியம் எனக்கு தெரிந்துவிட்டது என்ற கோபம் அவரது முகத்தில் வெளிப்பட்டதை நான் உணர்ந்துகொண்டேன். எனவே தொடர்ந்து அவர்என்னிடத்தில், 'இனி நான் வருமுன் கணணியை நீங்கள் ஆன் செய்யக்கூடாது' என்று கட்டளையிட்டார். இதனைத் தொடர்ந்து அவரதுவார்த்தைகள் சற்று கடினமாகவும், உறவுகள் பாரமுடையதாகவுமேஎங்களிருவரிடையே காணப்பட்டது.
ஒரு முறை என்னை அலுவலகத்தின் நிமித்தமாக ஓரிடத்திற்குஅனுப்பினார். நான் அங்கு பேருந்தில் சென்று வேலைகளை முடித்துஅலுவலகம் திரும்பினேன். அதற்கு எனக்கு ஆன செலவு ரூபாய் 17.50மாத்திரமே. அதனையே எனது கணக்கு புத்தகத்தில் எழுதினேன். அதற்குமுன்னர் அந்த இடத்திற்கு அதே வேலைக்காக அவர் சென்றுவந்ததற்கான செலவை அதிகமாக அவர் எழுதியிருந்தார். எனவே இரண்டு செலவினங்களும் முரண்படுகிறது, என்னை மாட்டிக்கொடுக்கவா இப்படிகணக்கு எழுதுகின்றாய் என்று அதனை தானே திருத்திக்கொண்டார்.
ஒரு முறை எனது கம்பெனியின் மேலிடத்திலிருந்து அதன் MD (திரு.சேகர்) என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'உங்களால்தனியாக இந்த அலுவலகத்தை பார்த்துக்கொள்ளமுடியுமா?' என்றுகேட்டார். எனக்கு ஒன்றும் புரியாமல், 'ஓ தாராளமாக முடியுமே' என்றுபதிலிளித்தேன். பின்னர் அவர் என்னிடம் அதிகமாகப் பேசவில்லை. சிலநாட்கள் கழித்து ஒரு நாள் நான் காலையில் அலுவலகம் சென்றிருந்தபோது, எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் அலுவலகம் சென்று, computer ஐ ஆன் செய்தபோது ஒரு இ-மெயில் வந்திருந்தது. அதில், 'நான் பதவி உயர்வு பெற்றிருப்பதாகவும், அதனைஏற்றுக்கொள்வதற்கான கடிதத்தை உடனே நான் மேலிடத்திற்குஅனுப்பவேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட நான் அதிர்ந்துபோனேன். நான் பதவி உயர்வு பெற்றிருப்பது எனக்கேதெரியாதே, இது என்ன என்று நினைத்து குழம்பிக்கொண்டிருந்தேன்.அப்போது எனது அலுவலகத்திற்குள் நுழைந்தார் எனது மேனேஜர். தனதுதெய்வங்களுக்கெல்லாம் பூஜை செய்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். அதுவரை அமைதியாயிருந்த நான் மெதுவாக அவரிடம், 'சார்ஒரு இ-மெயில் வந்திருக்கிறது, எனக்கு எதுவும் தெரியாது என்றுசொன்னதும்' உடனே அவர், 'ஆம் மேலிடத்திலிருந்து உன்னை பதவிஉயர்வு செய்திருப்பதாகவும் அதனை மேனேஜராகிய நான் ஆதரிப்பதாககடிதம் அனுப்பவேண்டும் என்றும் எனக்கு கடிதம் வந்தது, ஆனால் உனது வேலையில் எனக்கு திருப்தி இல்லை, எனவே உன்னை பதவிஉயர்வு செய்ய ஆதரவாக நான் மேலிடத்திற்குக் கடிதம் எழுதப்போவதில்லை' என்றார். உடனே அவர் கையில் வைத்திருந்த ஒருகடிதத்திலும் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார். அதில், 'நான் சரியாக வேலை செய்யவில்லை எனவும் மேலும் சில எனக்குவிரோதமான வரிகளும்' இடம்பெற்றிருந்தன. நான் அந்த இ-மெயிலை வாசித்துவிட்டதால் அவருக்கு என்மேல் கோபம்மூண்டது.
இதனைத் தொடர்ந்து நான் சில நாட்கள் விடுப்பு எடுக்க நினைத்தேன்.ஒரு நாள் இரவு சுமார் 9.30 மணிக்கு போதகர் ஜஸ்டின் உடன்அலுவலகத்திற்குச் சென்றேன். நான் தங்கியிருந்த இடத்திலிருந்துபோதகர் ஜஸ்டின் உடன் அவரது பைக்கில் புறப்பட்டுச் சென்றேன்.அலவலகம் இருக்கும் இடம் வந்ததும் சற்று தூரத்தில் அவர் பைக்குடன்நின்றுகொண்டார். நான் மாத்திரம் கம்பெனியின் உள்ளே சென்றேன்.அங்கிருந்த காவலர்கள், 'என்ன சார் இந்த நேரத்தில' என்று என்னைகேட்க, 'ஒரு அவசரமான வேலை' என்ற பதிலோடு உள்ளே நுழைந்தேன்.அலுவலகத்தைத் திறந்ததும், டெலிபோனை துண்டித்துவிட்டு அங்கிருந்தசில ஆவணங்களை நகல் எடுத்துக்கொண்டு, நான் வைத்திருந்த லீவ் லெட்டரை அந்த காவலர்கள் கையில் கொடுத்துவிட்டு, போதகர் ஜஸ்டின்உடன் பைக்கில் வீடு திரும்பினேன். அந்த மேனேஜர் அலுவலகத்தில்அநேக முறைகேடுகளைச் செய்திருந்ததால், அதில் எனது பெயரைஎவ்விதத்திலும் நுழைத்துவிட்டு நான் செய்தேன் என்று மேலிடத்திற்குசொல்லிவிடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்தேன். நான் பணியில் சேர்ந்தது முதலான அனைத்து ஆவணங்களுடன், இறுதியாக நான் கணக்கு முடித்த 13 கோடி ரூபாய்க்கான கணக்குகளை நகல் எடுத்திருந்தேன்.
தொடர்ந்து, கம்பெனியில் அவர் செய்துவரும் முறைகேடுகளையும்,அவரால் அலுவலகத்திற்கு உண்டாகும் நஷ்டத்தையும், பணகையாடல்களையும் ஆதாரங்களுடன் மேலிடத்திற்கு அனுப்பிவைத்தேன்.இதனை பரிசீலித்த மேலிடம் அவரை உடனே பதவி இறக்கம் செய்ததுடன், அவரை எச்சரித்து வேறு இடத்திற்கு மாற்றுதலாக்கிஅனுப்பியது. கோபமடைந்த அவர் என்னிடம், 'உன்னை காரைஏற்றியாகிலும் கொன்றுவிடுவேன்' என மிரட்டினார். அவரது மிரட்டுதலுக்குநான் அத்தனையாய் பயப்படவில்லை, ஏனெனில் ஜெய்ப்பூரில் எனக்கு ஆதரவாக, உதவியாக பல சகோதர மற்றும் சகோதரிகளை தேவன்கொடுத்திருந்தார், அவர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். பின்னர்நான் அலுவலகம் செல்லவில்லை.
பீஹாரை நோக்கி
அவரது பதவி என்னைத் தேடி வந்தது. எனக்கு இடறலாய் இருந்தஎல்லாவற்றையும் தேவன் எடுத்து எறிந்துவிட்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த அந்த இரவு எனது தூக்கம் கலைந்தது, தேவன்என்னோடு இடைபட முயற்சித்துக்கொண்டிருந்ததை உள்ளம் உணர்த்தியது. ஜெபநிலையில், 'ஆண்டவரே என்னிடத்தில் நீர் என்னஎதிர்பார்க்கிறீர். இனி நான் செய்யவேண்டியது என்ன?' என்றகேள்விகளுடன் நின்றபோது. பதிலுக்குப் பதிலாக, 1994ம் ஆண்டுதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செந்தியம்பலம் (எனது சொந்த ஊர்)கிராமத்தில் நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் மூலம் நடத்தப்பட்டு வந்தஹக்ஸ்டபிள் கிறிஸ்டியன் லைபிரரியில் ஒரு நாள் நான்ஜெபித்துக்கொண்டிருந்தபோது, முழுநேரமாக நான் ஊழியத்திற்குச் செல்வேன் என்ற என்னை அர்ப்பணித்திருந்த எனது தீர்மாணத்தை தேவன் எனக்கு ஞாபகமூட்டினார். எங்கே ஊழியம் செய்வது, எப்படி செய்வது,எந்த ஸ்தாபனத்துடன் இணைந்து செய்வது என்று பல கோணங்களில்எனது சிந்தை சிதறிக்கொண்டிருந்தபோது, ஒரு முறை இன்டர்நெட் வாயிலாக 'ஜெம்ஸ்' ஊழியத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்புகிட்டியது. பீகாரில் ஜெம்ஸ் சுவிசேஷ ஊழியத்தினை நிறைவேற்றிவருவதையும், அத்துடன் ITI போன்ற கல்விப் பணியினையும் நடத்திவருவதையும் அதன் மூலம் நான் அறிந்துகொண்டேன். பின்னர்தொடர்ந்து ஜெபித்து எனது அழைப்பினையும், தேவ வழி நடத்துதலையும் உறுதி செய்துகொண்டேன்.
இச்சூழ்நிலையில், அங்கிருந்த சகோதரர்களிடமும், ஜெபக்குழுநண்பர்களிடமும் நான் பீஹாருக்குச் செல்ல தீர்மாணித்திருப்பதை அறிவித்தேன். சகோதரர் கனகராஜ் என்னை நோக்கி, 'உனதுகம்பெனியின் மானேஜரைக் கண்டு பயந்து நீ செல்லாதே அவரை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்' என்று சொன்னதுடன் 'நீ பீஹாருக்குச் செல்லாதே அது மோசமான இடம், நானே அங்கு மாறுதல் கிடைத்தால் போவதற்கு மறுத்துவிடுவேன்' என்றும் என்னிடத்தில் சொன்னார். நீ இங்கேயே இருப்பதாக இருந்தால் ஒரு ஆலயத்தைக் கட்டிவிடலாம் என்றும் என்னிடத்தில் சொன்னார். ஆனால் நானோ அப்போது ஆலோசனைகளைக் கேட்கும் நிலையில் இல்லாமல், பீஹாருக்குச் செல்லவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தவனாக இருந்ததால் 'அவரது வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அமைதியாகக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.
மேலும், ஜெய்ப்பூரில் வேறு தனியார் கம்பெனியில் வேலை தேடலாம் என்றும் சகோதரர்கள் எனக்கு ஆலோசனை கொடுத்தனர். அங்கேயிருந்தஆசீர்வாத இளைஞர் இயக்கத்தில் இணைந்து ஊழியராக செயலாற்றவும்என்னிடத்தில் ஊழியர்கள் விருப்பம் கேட்டனர். வித விதமானஆலோசனைகள் என்றபோதிலும், நிலையான மனம் அப்போது எனக்குஇருந்தது. பீஹ hர் என்ற தரிசனத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாகவேநான் காணப்பட்டேன்.
2002 ம் ஆண்டு ஜெம்ஸ் ல் பணிபுரிந்த சகோ.பாபு ராஜரீகன் உடன் தொடர்பு கொண்டு இராஜஸ்தானிலிருந்து வேலையை ராஜினாமாசெய்துவிட்டு ஜெம்ஸ் ல் ஊழியம் செய்ய விரும்பும் தீர்மானத்தைக் குறித்து பகிர்ந்துகொண்டேன். தொடர்ந்து, பீகார் புறப்பட ஆயத்தமானேன்,சகோதாரன் பாபு இராஜஸ்தான் வந்திருந்தபோது, அவருடன் புறப்பட்டுச் செல்ல அனைத்து ஆயத்தங்களையும் நான் செய்யத் தொடங்கினேன்.எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அதனை பார்சல் செய்துவைத்தேன். எங்கு சென்றாலும், சமைத்து சாப்பிடும் வழக்கம் இருந்த எனக்கு, அப்போது இருந்த ஒரு சில சமயலுக்கானபொருட்களுடன் பீஹார் பயணத்திற்கு ஆயத்தமானேன். தீர்மாணத்தை நோக்கிய பயணம் திசை திரும்பவோ, திரும்பிப் பார்க்கவோ முடியாதபடிஎன் மனதை இறுக்கமாக்கியிருந்தேன். ஒரு புறம் பீஹார் எப்படிஇருக்குமோ என்ற எதிர்பார்ப்பு என் மனதை நிறைத்திருந்தது; மறுபுறம் இறை அமைதி எனது மனதை ஆட்கொண்டிருந்தது. நான் எடுத்ததீர்மானத்தை எவ்விதத்திலும் தவறானதாக நான் நினைக்காதபடியும்,சந்தேகப்படாதபடியும் அது தேவனுடைய நடத்துதலே என்பதில் உறுதியாய் நான் இருக்கும்படி தேவ ஆவியானவர் என்னைக் காத்துக்கொண்டார். என்னோடு கூட இருந்த உறவுகளையும், சகோதரர்களையும் விட்டுப் பிரிவது எனக்கு அவ்வளவுஎளிதாயிருக்கவில்லை. அதனை சுகமான சுமைகளாக்கிக்கொண்டுபிரியாவிடைபெற்றேன். இரயில் பயணத்தில் பல நினைவுகளை என் மனம் சுமந்து நின்றது. நான் பீஹார் புறப்பட்டுச் செல்வது எனதுபெற்றோருக்கும் ஒரு கேள்விக்குரியாகவே இருந்தது.
இறைவனோடு எடுத்த தீர்மாணம், அதையே எனது இலட்சியமாகவும் இறுதியானதாகவும் நினைத்து உறுதியாய் அதனைப் பற்றிக்கொண்டுபீஹாரை நோக்கி எனது பயணம் தொடர்ந்தது.
இக்கட்டுரையை வாசித்த உங்களுக்கு எனது நன்றி. உங்களையும் உங்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். கிருபை நம்மோடிருப்பதாக.
நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். யோசுவா 1:9